சமஷ்டி தீர்வையோ – தனிநாட்டுத் தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது! – அரசு திட்டவட்டம்.

“தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் விரும்பும் சமஷ்டி தீர்வையோ அல்லது தனிநாட்டுத் தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சர்வகட்சி மாநாடு தீர்வைக் காண்பதற்கான வழியாகும். ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இன முரண்பாடுகளை மேலும் வளர்க்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நன்மை கருதியே செயற்படுகின்றார். அவருடன் ஒன்றித்துப் பயணித்து அரசியல் தீர்வைக் காண்பதற்குத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் முயலவேண்டும். அதைவிடுத்து நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் சமஷ்டித் தீர்வுக்கோ அல்லது தனிநாட்டுத் தீர்வுக்கோ நாடாளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டாது.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிரும் வகையிலான தீர்வே இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சினை இல்லாத தீர்வு ஆகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.