தக்காளியால் லட்சாதிபதியான விவசாய சகோதரர்கள்..!

நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. தக்காளி விவசாயிகளுக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்த ஆண்டு குறிப்பாக, அபரிமிதமான அறுவடை மற்றும் அதிக சந்தை விலைகள் ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான தக்காளி விவசாயிகள் கணிசமான பலன்களை பெற்று வருகின்றனர்.

தக்காளியின் விலை அதிகரிப்பு காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய விவசாய சகோதரர்கள் இருவர் வாழ்வில் இதுபெரும் ஏற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் சாமராஜநகர் தாலுகா லட்சுமிபுராவில் வசிக்கும் 2 விவசாய சகோதரர்களின் பெயர் ராஜேஷ் மற்றும் நாகேஷ். இவர்கள் இருவரும் லட்சுமிபுரா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா செட்டியின் மகன்கள் ஆவர்.

ராஜேஷ் மற்றும் நாகேஷ் இருவருமே படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாததால் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு பெற்றோருடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சகோதரர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகவே தக்காளி சாகுபடியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தனர். இந்த சீசனில் ராஜேஷ் மற்றும் நாகேஷ் ஆகிய இருவரும் சுமார் 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். 12 ஏக்கரில் இவர்களுக்கு சொந்தமான நிலம் இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே. மீதி நிலத்தை தங்கள் நிலத்திற்கு அருகில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

சகோதரர்கள் இருவரும் பருவநிலை மாற்றம், பூச்சிகள் போன்ற பல பிரச்னைகளை சந்தித்தனர். பல போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக அதிக அளவு தக்காளிகளை அறுவடை செய்தனர். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததால், இவர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டியது. முதல் 2 அறுவடைகளின் போது சுமார் ரூ.40 லட்சம் வரை பெரும் வருமானம் ஈட்டிய இந்த சகோதர்கள், மீதமிருக்கும் தக்காளியை அறுவடை செய்வதன் மூலம் மேலும் ரூ.80 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று உறுதியாக நம்பி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சகோதர்கள் 30 கிலோ எடை கொண்ட 2000 தக்காளி பெட்டிகளை விற்று, இதுவரை மொத்தம் ரூ.40 லட்சம் வரை லாபம் ஈட்டி இருக்கிறார்கள். தங்களிடம் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் தக்காளியை கொள்முதல் செய்ய வருவதாக இருவரும் கூறியிருக்கிறார்கள். இந்த 2 சகோதர்களின் தந்தையான கிருஷ்ண ஷெட்டி தனது மகன்களின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தக்காளி விவசாயம் மூலம் நாங்கள் பெற்ற கணிசமான லாபம் எங்கள் கடன்களைத் தீர்க்க உதவியது. தற்போது, தக்காளி விவசாயம் செய்து சம்பாதித்த பணத்தில், சொந்தமாக வீடு கட்டி, நிலம் வாங்க திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார்.

தக்காளியால் விவசாயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. சமீப வாரங்களாக தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்ததால் நாடு முழுவதும் உள்ள பல தக்காளி விவசாயிகளின் வாழ்வை மாற்றி இருக்கிறது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையும் மேலே நாம் பார்த்த கதையை போன்றது தான். இந்த மூவரில் ஒருவர் விவசாயி, மற்றொருவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) விஞ்ஞானி, மூன்றாவது ஒருவர் நீர் பாதுகாப்புத் துறையில் அதிகாரி. இந்த மூன்று சகோதரர்களும் ஒன்று சேர்ந்து தங்களின் 25 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டு சாகுபடி செய்து கோடீஸ்வரராக மாறியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.