திரைப்படத் துறையை விருத்தி செய்வது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்.

இந்நாட்டின் திரைப்படத் துறையை விருத்தி செய்வது தொடர்பில் ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

திரைப்படத் துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் வர்ணகுமார தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, திரைப்படத் துறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். விசேடமாக சினிமாத்துறை சுருங்கிவரும் போக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளதாகவும், வருடாந்தம் 5 அல்லது 6 திரையரங்குகள் மூடப்படுவதாவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டினால் திரைப்படக் கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கும் நிதியின் பகுதி தொடர்பிலும் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

திரைப்படக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கொண்டுவருவதற்கு பதிவுசெய்யும் கட்டணம் மற்றும் ஒரு திரைப்படத்துக்கு திரைப்படக் கூட்டுத்தாபனம் அறவிடும் கட்டணம் திருத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரேரிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக நெட்ப்ளிக்ஸ் போன்றவை பிரபல்யம் அடையும் நிலையில் அவற்றுக்கு முகங்கொடுப்பதற்கு திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் காணப்படும் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.