“அடுத்தது விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம்”- இஸ்ரோ தலைவர்!

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்தது என்பது அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தருணத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், பொறியாளர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார். அத்துடன், சந்திரயான்-3 வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி, தனிப்பட்ட முறையில் வாழ்த்து கூறியதாவும் தெரிவித்தார்.

நிலவில் தரையிறங்கி வரலாற்றில் தடம் பதித்த சந்திரயான்-3-ன், திட்ட இயக்குநர் என்ற வகையில் மிகவும் பெருமைப்படுவதாக வீரமுத்துவேல் மகிழ்ச்சி தெரிவித்தார். மயில்சாமி அண்ணாதுரைக்குப் பின் தமிழ்நாட்டை சேர்ந்த இவர், சந்திரயான்-திட்ட இயக்குநகராக செயல்பட்டு வெற்றிக் கொடி நாட்டி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்.

அத்துடன், சந்திரயான்-3 வெற்றிக்காக கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்ததற்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான்-3 வெற்றி என்பது, அடுத்தகட்டமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் வரலாறு படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பாராட்டு தெரிவிக்கவுள்ளார். பிரதமர் மோடி தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள நிலையில், இந்தியா திரும்பியவுடன் இஸ்ரோவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, நாளை மறுநாள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு செல்லும் பிரதமர், சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய அனைவரையும் சந்தித்து வாழ்த்துகிறார்.

Leave A Reply

Your email address will not be published.