வயிற்றுக்குள் 8 வருடங்களாக இருந்த நகவெட்டி.. ஷாக்கில் உறைந்த மருத்துவர்கள்

மறுவாழ்வு மையத்தில் நாட்களை கடத்துவது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய சவாலான காரியம். போதை அல்லது குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களே பெரும்பாலும் இதுபோன்ற இடங்களில் இருப்பார்கள். இவர்கள் மனதளவிலும், உடலளவிலும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், இவர்களைப் போன்றவர்களை கையாள்வது மிகவும் சிரமமான விஷயம். சில சமயங்களில் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். அதுபோன்ற சூழ்நிலைகளில் குடிக்கு அடிமையானவர்கள் சில விபரீத முடிவுகளை எடுத்துவிடுவார்கள்.

அப்படியொரு சம்பவத்தைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். மறுவாழ்வு மையத்தில் இருந்த ஒரு நபர், தெரிந்தோ அல்லது தெரியாமலோ நகவெட்டியை விழுங்கிவிட்டார். இதைவிட அதிர்ச்சி என்னவென்றால், விழுங்கிய நகவெட்டி அவரது வயிற்றில் பத்திரமாக எட்டு வருடங்கள் இருந்துள்ளது. இத்தனை வருடங்களாக அவருக்கும் இது தெரியாது. ஏறக்குறைய 3000 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 18-ம் தேதி, அவரது வயிற்றில் உள்ள நகவெட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் சிராஜ்பூரைச் சேர்ந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமணைக்குச் சென்றுள்ளார். அங்கு இவரது வயிற்று வலிக்கு என்ன காரணமாக இருக்கும் என பரிசோதிக்க எக்ஸ்ரே எடுத்துள்ளனர். அப்போதுதான் இவரது வயிற்றில் நகவெட்டி இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக மருத்துவர்கள் லேப்ரோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்து அந்த நகவெட்டியை வெளியே எடுத்தனர். அப்போதுதான் தனது வயிற்றுக்குள் எப்படி நகவெட்டி போயிருக்கும் என்ற விவரத்தை கூறினார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு வரை, குடிப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக பல வருடங்கள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்துள்ளார். அந்த சமயத்தில்தான் இது நிகழ்ந்திருக்கும் என அவர் கூறுகிறார். இவர் 30 வயதாக இருக்கும் போது மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்குள்ள மருத்துவர்களின் சித்ரவதையை தாங்க முடியாமல், கோபத்தில் அருகிலிருந்த நகவெட்டியை விழுங்கியுள்ளார். அங்குள்ள பணியாளர்களிடம், நகவெட்டியை விழுங்கிவிட்டேன் என இவர் கூறியபோது, இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் வெளியே வந்துவிடும் என அவர்கள் கூறியுள்ளனர். “அன்றே வெளியே வந்துவிட்டது என்றுதான் இத்தனை வருடங்களாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன். எந்த பொருளையாவது விழுங்கிவிட்டீர்களா என மருத்துவர்கள் இப்போது கேட்டபோது தான் எனக்கு பழைய சம்பவம் நினைவிற்கு வந்தது. இதுநாள் வரை என் மனைவியிடம் கூட நான் இதை சொன்னதில்லை. மேலும், எனக்கு ஒருபோதும் வலியும் ஏற்படாததால் இதைப்பற்றி சுத்தமாக மறந்துவிட்டேன்” என வெள்ளந்தியாக கூறியுள்ளார்.

“இது மிகவும் அரிதான சம்பவம். என் வாழ்க்கையில் இப்படி ஒன்றை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். அவரது வயிற்றில் இருந்த நகவெட்டி பெரியவர்கள் வழக்கமாக பயன்படுத்துவது. ஒருவேளை இதற்கு முன்பு விமான நிலையத்திற்கு சென்றிருந்தாலோ அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்திருந்தாலோ அப்போதே இவருக்கு இது தெரிய வந்திருக்கும்” என்கிறார் டாக்டர்.ரோகித்.

Leave A Reply

Your email address will not be published.