மின்சார வேலியில் சிக்கி தாய் பரிதாப உயிரிழப்பு – மகனும் மகளும் பாதிப்பு.

காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காகப் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி தாயொருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகளும், மகனும் மின்சாரம் தாக்கிப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் குருநாகல், நாகொல்லாகம – திம்பிரிவெவ பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வளர்த்த பூனையைக் காணவில்லை எனத் தாய், மகள், மகன் ஆகியோர் பூனையைத் தேடிச் சென்றபோது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகல்லாகம பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய ஆர்.எம்.பிசோ மெனிகே என்ற பெண்ணே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தினார் எனக் கூறப்படும் 56 வயதுடைய விவசாயி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.