நீதிமன்றத்தை அச்சுறுத்துவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்! – சஜித் வலியுறுத்து.

“நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் வகையில் ஜனாதிபதி தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கையை நீதிமன்றத்தின் கௌரவ நீதிபதிகள் கூட பகிரங்கமாக விமர்சித்துள்ளனர். ஜனாதிபதி தலைமையிலான அரசு நீதிமன்றத்தின் மீது பல்வேறு அச்சுறுத்தல்கள், பல்வேறு குறுக்கீடுகள், அழுத்தங்கள் போன்றவற்றைச் செய்வதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்கள் இறைமைக்காக வலுவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு நீதிமன்றமும் நீதிபதிகளும் முன்நின்றமைக்கு நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் மீதான இந்த வெட்கமற்ற செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நீதித்துறையில் செலுத்தப்படும் ஒவ்வொரு செல்வாக்கும் இந்த நாட்டின் ஜனநாயகத்தை அழிக்கும் பாரிய சதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மாற்று அரசும் முற்போக்கான எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தடைகள் மற்றும் சமன்பாடுகள், அதிகாரப் பகிர்வு போன்ற கருத்துக்களின் மூலம் ஜனநாயகத்தின் 3 தூண்களான சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்தி நாட்டு மக்கள் சார்பாக நாட்டின் உச்ச சட்டத்தின் பாதுகாவலர்களாகச் செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நீதிமன்றத்தின் நீதிபதிகளால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளையும் பாதுகாப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.