ஆற்றில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி.

வட மத்திய நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகில் விவசாய பணிகளுக்காக சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள ஆற்றில் அணையை கடந்து விவசாய பண்ணைக்கு படகு சென்றது. இந்த படகில் பெண்கள், குழந்தைகளும் பயணம் செய்தனர். ஆற்றின் நடுவில் சென்ற போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 30 பேரை அவர்கள் மீட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 பேர் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். படகில் சென்ற பலரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.