ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உள்ளக விசாரணையை ஏற்க முடியாது! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணையொன்று அவசியம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மற்றும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் பேசும் மக்களை அழிப்பது அல்லது பணயம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலரின் செயற்பாடுகள் காரணமாக தமிழர்கள் எவ்வாறு துரோகிகளாக பார்க்கப்பட்டார்களோ அதேபோல உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் மக்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்தபோது, இந்த விடயம் தொடர்பில் இந்தியா தமது உளவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள போதும், அதற்கு முக்கியத்துவம் வழங்காது தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் அதனை ஏற்றுக்கொண்ட துர்ப்பாக்கிய நிலையை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ‘சனல் 4’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தின் உண்மைத் தன்மையை ஆராய்வதை விட இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவைப் பிரிப்பதற்காகவா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியம் எனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் சர்வதேச விசாரணையைக் கோரும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்குத் தாம் வலுவாக ஆதரவை வழங்குகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அசாம்பாவிதங்கள் தொடர்பிலும் குரல் எழுப்புமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.