யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு.. 8 சிக்ஸ் உட்பட 9 பந்தில் அரைசதம்.. மிரட்டிய நேபாள வீரர்!

2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்கிய போது, இங்கிலாந்து அணியின் ஃபிளிண்டாஃப் வம்புக்கு இழுத்தார். இதனால் கோபமடைந்த யுவராஜ் சிங், களத்திலேயே ஃபிளிண்டாஃப் உடன் மோதினார். ஆனால் தோனி மற்றும் நடுவர்கள் சமாதானம் செய்ததால், யுவராஜ் தனது கோபத்தை பேட்டிங்கில் காட்டினார்.

இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் இந்திய அணியின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு யுவராஜ் சிங் சொந்தக்காரரானார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாகியும் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்கப்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில் யுவராஜ் சிங்கின் சாதனையை ஆசிய விளையாட்டு போட்டிகளில் நேபாள அணியின் திபேந்திர சிங் முறியடித்துள்ளார். மங்கோலிய அணிக்கு எதிரான போட்டியில் நேபாள அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் ரோகித் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 18.1 ஓவர்களில் அவர் ஆட்டமிழந்த பின் அதிரடி வீரர் திபேந்திர சிங் களமிறங்கினார்.

மீதமிருந்த 11 பந்துகளில் 10 பந்துகளை திபேந்திர சிங் எதிர்கொண்டார். அதில் மொத்தமாக 8 சிக்சர்கள் விளாசிய திபேந்திர சிங் 9 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் யுவராஜ் சிங்கின் 16 வருட சாதனை தகர்க்கப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்ததோடு, 50 பந்துகளில் 137 ரன்கள் குவித்தார்.

இதன் மூலமாக நேபாள அணி டி20 கிரிக்கெட்டில் 314 ரன்களை குவித்து சாதனை படைத்தது. இதன்பின் களமிறங்கிய மங்கோலிய அணி வெறும் 41 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அண்மையில் ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் நேபாள அணி சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.