யாழில் இன்று மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்! – அனைவரும் அணிதிரள்வோம் என்று அறைகூவல்.

“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலிப் போராட்டம் வெற்றி அளிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்.”

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மருதனார்மடம் சந்தியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் மனித சங்கிலிப் போராட்டம் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளது.

எனவே, அனைத்து தமிழ் பேசும் மக்களும் கட்சி பேதங்களைக் கடந்து எமது முழுமையான எதிர்ப்பைக் காட்டும் முகமாக குறித்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைக் காட்டுவதன் மூலமே நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதிபதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

எனவே, அனைவரும் அணிதிரண்டு எமது கண்டனத்தை இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் காட்டுவோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.