பிக் பாஸ் 7: இது சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்ட’ – மேக்கப் குறித்து பிரதீப் சொன்னது சரியா?

இறுதி வாக்கெடுப்பில் மணி சந்திரா கோல்டன் ஸ்டார் வென்றார். ‘இவன் ஜெயிச்சான்னா.. இல்லையான்னா தெரியல’ என்று சர்காஸ்டிக்காக கூறியபடி அவருக்கு ஸ்டாரை வழங்கினார் சுரேஷ்.

சமகாலத்து இளம் பெண்கள் ‘பெண்ணுரிமை’ குறித்தான விழிப்புணர்வை கணிசமாகக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் இது சரியான கோணத்திலும் திசையிலும் இயங்க வேண்டும். ஆண்கள் செய்யும் தவறுகளை நகல் செய்வது, அவர்களைப் பழிவாங்குவது என்றெல்லாம் எதிர்மறையாக பயணிக்கக் கூடாது

‘பெண்கள் மேக்கப் இல்லாமல் இருப்பது ஆண்களாகிய நமக்கு ப்ளஸ்’ என்பது போல் கோக்குமாக்கமாக பிரதீப் யோசித்த போது ‘இது என்ன பேச்சு? நாங்களே எங்களின் ஒப்பனையைக் கலைக்கிறோம்’’ என்று சில பெண்கள் முன்வந்தது, ஒரு சிறிய கலகம். ஒருவிதமான எதிர் அரசியல். பிம்ப உடைப்பு. பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா போன்ற பெண்கள், சராசரிகளாக அசட்டுத்தன்மையுடன் இல்லாமல் முற்போக்காக சிந்திப்பது மகிழ்ச்சி.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கோல்டன் ஸ்டாருக்கான போட்டி தொடர்ந்தது. ‘யார் அதிக புகழைக் கொண்டிருப்பது’ என்பதில் கூல் சுரேஷிற்கும் பூர்ணிமாவிற்கும் போட்டி. ‘வேர்ல்டு லெவல்ல நான் ஃபேமஸ்’ என்று சொல்லிக் கொண்ட சுரேஷ் இடைவெளியே தராமல் பேசினார். என் வளர்ச்சிக்கு ‘சிம்பு’ காரணம் என்று சுரேஷ் சொன்னதை சரியாகப் பிடித்துக் கொண்ட பூர்ணிமா ‘என் வளர்ச்சிக்கு பிறரைச் சார்ந்திருக்கவில்லை. சுயமுயற்சியில் முன்னுக்கு வந்தேன்’ என்றது ஒரு நல்ல கவுண்ட்டர். ‘சத்தமாகப் பேசுகிறவனின் குரல்தான் சபையில் எடுபடுகிறது’ என்கிற லாஜிக்கில் கூல் சுரேஷ் வெற்றி பெற்றார்.

அடுத்த ரவுண்டில் அக்ஷயாவிற்கும் மணி சந்திராவிற்கும் போட்டி. இதிலும் அதேதான். ‘ஜோடி நம்பர் ஒன் ஷோ… வடிவேலு படங்களில் ஆடியிருக்கிறேன்’ என்பதை இடைவெளியே இல்லாமல் மணி பேச, கேப் கிடைக்காமல் தவித்து அக்ஷயா தோற்றார்.

இறுதி வாக்கெடுப்பில் மணி சந்திரா கோல்டன் ஸ்டார் வென்றார். ‘இவன் ஜெயிச்சான்னா.. இல்லையான்னா தெரியல’ என்று சர்காஸ்டிக்காக கூறியபடி அவருக்கு ஸ்டாரை வழங்கினார் சுரேஷ். அவர் சொன்னது ஒருவகையில் உண்மை. ‘யார் அதிக ஃபேமஸ்?’ என்கிற நோக்கில் கூல் சுரேஷ் அதிகமான புகழை வைத்திருக்கலாம். தொடக்க நாளில் உள்ளே வருகிறவர்கள் அனைவருமே சொல்லி வைத்தாற் போல் ‘உங்களைத் தெரியாம இருக்குமா?’ என்று சுரேஷிடம் கேட்டார்கள். அப்படியொரு ‘infamous popularity’-ஐ வைத்திருக்கிறார் சுரேஷ்.

அது மட்டுமல்ல, விஷ்ணு எச்சரித்தபடி சுரேஷ் வெல்வதில் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு உள்ளார்ந்த ஆட்சேபம் இருப்பது போல் தெரிகிறது. ‘இவர் எப்படியும் வாயால் வடை சுட்டு வீட்டில் தங்கி விடுவார். இவரை வளர்த்து விடக்கூடாது’ என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. எனவே வெளியில் சிரித்து விட்டு உள்ளுக்குள் வேலையைக் காட்டி விடுகிறார்கள். இதை சுரேஷூம் சரியாகப் புரிந்து கொள்கிறார். “எனக்கு எவனும் ஓட்டு போடலைல்ல.. காமெடி பீஸாவே வெச்சிட்டு இருக்கீங்க.. வெளிலயும் அப்படித்தான்’ என்று அனத்துவது போல் தன் மனக்குறையை காமெடியாகக் கொட்டி விடுகிறார்.

விஷ்ணுவும் கூல் சுரேஷூம் ஒரு மாதிரி ஒத்த அலைவரிசையில் நெருக்கமான நண்பர்களாக ஆகியிருக்கிறார்கள். சுரேஷின் வாய் வீச்சு தனக்கு உபயோகமாக இருக்கலாம் என்பதால் விஷ்ணு அவருடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார். தேவையற்ற நேரத்தில் எளிதாகக் கழற்றி விட்டு விடுவார் என்று தோன்றுகிறது. பிரதிப்பீன் இன்னொரு வெர்ஷன் போல் இருக்கிற விஷ்ணு, பெண்களிடம் சண்டை போட்டு அவர்களை வெறுப்பேற்றுவதில் வல்லவராக இருக்கிறார். இன்று பூர்ணிமாவுடன் ஒரு பிறாண்டல்.

இது இப்படி என்றால் பிரதீப் இன்னொரு மாதிரியான கொலைவெறியில் உலவிக் கொண்டிருக்கிறார். “வீட்ல இருக்கறப்ப நிம்மதியா டைமுக்கு தூங்கிடுவேன். இங்க தூக்கமே வரலை. போர்க்களத்துல இருக்கற மாதிரி இருக்கு. சுத்தியிருக்கறவங்க சாவடிச்சிடுவாங்க. எப்படிவும் டிஃபென்ஸ் மோட்லயே இருக்கேன்’ என்றெல்லாம் அவர் அனத்திக் கொண்டிருக்க ‘உங்க நிம்மதி உங்க கிட்டதான் இருக்கு’ என்று ஒரே வரியில் ஆறுதல் சொல்லி முடித்து விட்டார் ஐஷூ.

பி்க் பாஸ் வீட்டின் பழைய பிளே லிஸ்ட்டை மறக்காத எவரோ ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ என்கிற ரகளையான பாடலை ஒலிபரப்ப, நாள் 4 விடிந்தது. நடனம் ஆடத் தெரியாதவர்களைக் கூட உற்சாகத்துடன் உடம்பை அசைக்க வைக்கும் பாட்டு என்பதால் மக்கள் கூடிக் கும்மியடித்தார்கள்.

வீட்டில் சமையல் பணிகளைச் செய்பவர்களுக்கு எப்போதுமே நிகழும் ஒரு நடைமுறைச் சங்கடம் உண்டு. கடைசியில் அவர்களுக்கே உணவோ, பதார்த்தமோ மீதம் இருக்காது. “உருளைக்கிழங்கு சைட்டிஷ்ஷை ஒரு கிண்ணத்துல எடுத்து தனியா வெச்சுடு. அப்புறம் நமக்கே இருக்காது’ என்று வினுஷாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் விசித்ரா. ஆளுக்கு நாலே பூரி என்கிற கணக்கில் இன்று மெனு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதிக பூரி கேட்டவர்களுக்கு வந்த ஒரே பதில் ‘ஸாரி’. மக்கள் அரை வயிற்றுடன் இன்றைய காலையை கழிக்க வேண்டியதாக இருந்தது.

“பிரதிப்லாம் இங்க ஒரிஜினலா இருக்கான்.. ஆனா சிலரோட உண்மையான குணம் இன்னமும் வெளில வரலை. விசித்ரா.. ரவீனால்லாம் இன்னமும் ஓப்பன் ஆகாம இருக்காங்க…’ என்று ஒவ்வொருவரைப் பற்றியும் ஒய்யாரமாக படுத்தபடி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் சுரேஷ். ‘இந்தப் பொண்ணுல்லாம் ரெண்டு மணி நேரம் மேக்கப் போடுது’ என்று பூர்ணிமாவைச் சுட்டிக் காட்டி சுரேஷ் சொல்ல, அதை தன் தோழிகளிடம் பிறகு சொல்லி வருத்தப்பட்டார் பூர்ணிமா.

வீட்டின் உரையாடல்களில் இருந்தே தனது டாஸ்க்கிற்கான ஐடியாவை சமயங்களில் உருவுவது பிக் பாஸ் ஸ்டைல். மேக்கப் பற்றி சுரேஷ் சொன்னதாலோ, என்னவோ, அதை வைத்தே அடுத்த டாஸ்க்கில் செக்மேட் வைத்து ஆடத் தொடங்கினார்.

மக்கள் உற்சாகமாக ஷாப்பிங் செய்த கணக்கை இப்போது தீர்க்க வேண்டிய நேரம். முதல் தவணைத் தொகையை கட்டுவதற்காக ஒரு டாஸ்க் தொடங்கியது. கார்டன் ஏரியாவில் ஒரு எடை மெஷின் இருக்கும். பஸ்ஸர் அடிக்கும் போது அதில் ஒரு எடையின் எண்ணிக்கை காட்டப்படும். வீட்டிலுள்ள மக்கள், தங்களின் உடல், உடமை, பொருள் போன்றவற்றைக் கொண்டு அதற்கு நிகரான எடையை தட்டில் வைக்க வேண்டும். மூன்று ரவுண்டுகளில் இரண்டில் ஜெயித்தால் கூட போதும். இந்த டாஸ்க்கில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒருவேளை தோற்றால்? – இங்குதான் பிக் பாஸின் அநியாய குறும்பு வெளிப்பட்டது. தோற்றால் வீட்டிலுள்ள அனைத்து மேக்கப் சாதனங்களையும் பிக் பாஸிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இந்தச் சமயத்தில்தான் பிரதிப்பீன் சிந்தனை கோக்குமாக்காக இயங்கியது. ‘நாம இந்த டாஸ்க்கில் தோத்துட்டம்னா. நமக்குத்தான் ப்ளஸ். மேக்கப் இல்லாம அவங்களுக்கு ஆடியன்ஸ் சப்போர்ட் குறையும். அது நமக்கு சாதகமாக அமையும்’ என்பது போல் மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பிரதீப் யோசித்தது ஒரு குரூரமான ஸ்ட்ராட்டஜி. எப்படி வேண்டுமானலும் வெல்வது பிக் பாஸ் வீட்டின் வழக்கமான நடைமுறைதான் என்றாலும் சில விஷயங்களில் ஆதாரமான நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதுதான் விளையாட்டு தர்மம்.

பிரதீப் சொன்னதை சற்று கறாராக உடைத்துப் பார்த்தால் ஒருவகையில் உண்மைதான். இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் ஏன் மாடல்கள், மேல் தட்டு பெண்கள், வெளுப்பு நிறமுடையவர்கள், நவீனமாகவும் கவர்ச்சியாகவும் உடுத்துகிறவர்கள், வசீகரமாக ஒப்பனை செய்து கொள்கிறவர்கள் போன்றவர்களை அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள்?. இதிலுள்ள வணிக நோக்கத்தைப் புரிந்து கொள்வது அப்படியொன்றும் சிரமமான விஷயமில்லை. எனவே பெண்களின் முக்கியமான ஆயுதத்தைப் பறிக்கும்படி செய்தால் அது நமக்கு பலமாக மாறலாம் என்று பிரதீப் ஆட்டத்தை ஆட முற்படுகிறார்.

ஆனால், ஒரு பெண்ணுக்கு அவரது புறஅழகு, ஒப்பனை, கவர்ச்சி போன்வற்றின் மூலம்தான் வெற்றி கிடைக்கிறது என்று எண்ணுவது அப்பட்டமான ஆணாதிக்கத்தனம் மட்டுமல்ல, அநாகரிகமான சிந்தனையும் கூட. எந்தவொரு துறையிலும் பெண் வெற்றி பெற்று முன்னேறினால், அதற்கு அவரது அழகு மட்டுமே காரணம் என்று ஆண்கள் கொச்சையாக புறணி பேசுவது முறையானதல்ல.

ஆனால் இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீடு வெற்றி பெற்றதால் ‘மேக்கப் பொருட்களை அப்புறப்படுத்தும்’ விபத்து நடக்கவில்லை. பிரதீப்பின் அதே திசையிலேயே சிந்திக்கும் சுரேஷ், ‘மேக்கப் இல்லாம அவங்களைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை’ என்று சர்காஸ்டிக்காக கேமிரா முன்பு பேசினார். பிரதீப்பின் மட்டரகமான ஐடியா பெண்களின் காதுகளுக்குச் சென்றது. ‘மேக்கப்பினால்தான் நாம ஜெயிக்கறோம்ன்னு அவங்க என்ன சொல்றது.. நாமளே ஒப்பனையைக் கலைத்து ஒரு சிறு புரட்சியை செய்வோம்’ என்று மாயா, பூர்ணிமா, அக்ஷயா ஆகிய மூவரும் டாஸ்க்கிற்கு முன்பே அதை செயல்படுத்தியது நன்று. ஜோவிகாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. எந்தவொரு பிரச்சினை கிளம்பினாலும் அதை சம்பந்தப்பட்ட நபரிடமே நேரடியாக சென்று விசாரித்து விடுகிறார். எனவே ‘மேக்கப்’ பிரச்சினை பற்றி அவர் சுரேஷிடம் சென்று நேரடியாக கேட்க, அவர் எதையோ சொல்லி மழுப்ப, “கேர்ல்ஸ்.. நான் உங்க போராட்டத்துல சேர விரும்புல. அவங்க கிடக்கறாங்க’ என்று சொல்லி ஒப்பனையைக் கலைக்கவில்லை. ‘இவங்கள்லாம் ஒரு ஆளு’ என்கிற மாதிரி நினைத்தார் போலிருக்கிறது.

அக்ஷயாவும் ‘மேக்கப் விவகாரம்’ பற்றி நேரடியாக பிரதீப்பிடம் உரையாடினார். ‘அழகுன்றது சப்ஜெக்டிவ். புற அழகு முக்கியமில்லை. அதை உடைக்கத்தான் ஐடியா சொன்னேன்’ என்று சற்று பிளேட்டை மாற்றிய பிரதீப், மீண்டும் நிலைக்கு வந்து ‘இப்ப நீயே பாரேன்.. டிவி பார்க்கறவன் யாருக்கு ஓட்டு போடுவான்.. எனக்கா.. இல்ல அழகா இருக்கற பொண்ணுக்கா’ என்று அபத்தமாக வாதாட “அழகா இருக்கறதாலயே வாக்களிக்க மாட்டாங்க.. கேரக்ட்டரையும் பார்ப்பாங்க’ என்று அக்ஷயா சுருக்கமாகச் சொன்னது சிறப்பு. பிரதீப் நிறைய புத்தகங்களை வாசிக்கிறார் என்பது ஆரம்ப நாள் வீடியோவில் தெரிந்தது. என்றாலும் ஏன் இப்படி பல திசைகளிலும் வக்கிரமான கோணல்களில் பாய்கிறார் என்பது புரியவில்லை. படித்ததின் மூலம் வருகிற சிந்தனைகளை செயல்களிலும் பின்பற்ற முயல்வதுதான் நல்ல வாசிப்பிற்கான லட்சணம்.

பிக் பாஸ் வீட்டின் ரூல் புக்கை வேதப் புத்தகம் போல அடிக்கடி எடுக்கிறவர் பிரதீப் மட்டுமே. ‘எனக்கு டீ வேணும்’ என்று இவர் கேட்க “பால் இல்லை’ என்று கிச்சன் டீம் சொல்ல ‘கேட்கிறப்பல்லாம் ஸ்நாக்ஸ் .. டீ .. தரணும்.. ரூல் புக்ல போட்டிருக்கு.. எடுங்க.. பார்க்கலாம்’ என்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம், மணி அணிந்திருந்த ஜாக்கெட்டைக் கழற்றி பிரியத்துடன் அணிந்து கொண்டார் ரவீனா. இன்னும் கொஞ்ச நேரத்தில் அனைவரின் சட்டையையும் பிக் பாஸ் கழற்றப் போகிறார் என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்காது.

ஷாப்பிங் தொகையைக் கழிப்பதற்கான, இரண்டாம் தவணைத் தொகையின் டாஸ்க் ஆரம்பித்தது. ஒரு சிக்கலான ஸ்டென்ஸில் கட்டிங் வடிவத்திற்குள், இரண்டு பக்கமும் நின்று ஒரு கம்பியை வைத்து அந்த வடிவத்தின் ஓரத்தில் படாமல் கொண்டு வர வேண்டும். கம்பி முனையில் பட்டால் விளக்கு எரியும். எனில் அவுட் என்று அர்த்தம். முதலில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும். “தொகை அதிகம்ன்னா.. டாஸ்க்கும் அதுக்கு ஏத்த மாதிரிதானே இருக்கும்?’ என்று ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார் பிக் பாஸ். அப்படி ஓரத்தில் படாமல் கம்பியை நகர்த்துவது சிரமமாக இருந்தது. என்னதான் கவனமாகச் செயல்பட்டாலும் தொடர்ந்து அவுட் ஆனதால் இந்த டாஸ்க்கில் பெரிய பிக் பாஸ் வீடு தோல்வியடைந்தது.

இதற்கான தண்டனை என்ன தெரியுமா? மக்கள் அனைவரும் உடைகள் அனைத்தையும் பிக் பாஸ் டீமிடம் ஒப்படைத்து விட வேண்டும். தற்போது அணிந்திருக்கும் ஆடையை ஒரு வார காலத்திற்கு அணிய வேண்டும் என்பதுதான் இதற்கான தண்டனை. ‘இன்னும் ஒரு சான்ஸ் ப்ளீஸ்’ என்று மக்கள் கெஞ்சினாலும் பிக் பாஸ் மசியவில்லை. அவர்களை நிராயுதபாணியாக நிற்க வைத்துப் பார்க்க ஆசைப்பட்டார்.

பெரிய வீட்டில் இப்படியாக ‘பப்பிஷேம்’ கலாட்டா என்றால், டாஸ்க் ஏதும் செய்ய வேண்டியிருக்காத சின்ன வீட்டிலும் பிரச்சினை. இந்த முட்டைக்கும் பிக் பாஸ் வீட்டிற்கும் ஏழாம் பொருத்தம். வழக்கம் போல இந்த சீசனிலும் ஒரு முட்டைப் பிரச்சினை. இரவு உணவிற்கு ‘Egg Curry’ என்பது மெனு. ‘முட்டையை எப்படி சமைக்கப் போகிறாய்?’ என்று மாமியாருக்கான பந்தாவுடன் விசித்ரா கேட்க, புதிய மருமகள் போல் பம்மிய படி அதற்கு பதில் சொன்னார் நிக்சன். ‘அப்படில்லாம் செய்யக்கூடாது.. நான் சொல்ற மாதிரி செய்’ என்று அசால்ட்டாக சொன்னார் விசித்ரா.

“எப்படி செஞ்சாலும் இவிய்ங்க எதையாவது சொல்லிட்டுதானே இருக்காங்க?’ என்று நிக்சன் சொன்னதை தன்னுடைய சமையல் மீதான குறையாக எடுத்துக் கொண்ட விசித்ரா “என் கிட்ட இப்படில்லாம் அவமரியாதையா பேசாத.. இப்பத்தான் இவனோட உண்மையான நிறம் வெளிய வருது’ என்றெல்லாம் பேசி உஷ்ணமாகி விட்டார். சின்னப் பையன்தானே என்று விட்டுக் கொடுத்திருக்கலாம். ‘அவன் அந்த அர்த்தத்துல சொல்லல’ என்று நிக்சனின் தரப்பு நியாயத்தை யுகேந்திரன் கொண்டு வந்தது நல்ல விஷயம். ‘நீயேன் அவனை புரொடக்ட் பண்றே?’ என்று அவரையும் போட்டு காய்ச்சினார் விசித்ரா. இந்த விவகாரத்தில் வெளிப்பட்டது என்னமோ விசித்ராவின் உண்மையான நிறம்தான்.

Leave A Reply

Your email address will not be published.