இஸ்ரேலை ஹமாஸ் இடையே போர் பதற்றம் : என்ன நடக்கிறது? (WAR VIDEO)

பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இன்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வரும் நிலையில் போர் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து இதோ ஒரு பார்வை.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து நடந்து வந்த மோதல் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இன்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதனால் காசா பகுதியில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அதிகாலை முதல் 5000க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத அமைப்பு ஏவியுள்ளது. இது பாலஸ்தீனத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் அமைப்பாகும்.

மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பாரசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகி உள்ளது. இஸ்ரேல் ‛ஸ்டேட் ஆப் வார்’ என அறிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த போர் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவம் பல நாடுகள் இறங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஈரான், கத்தார், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து, சூடான், மலேசியா, இந்தோனேசியா, அல்ஜிரியா, துனிசியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக இருப்பதாக மேலை நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன.

இதில் ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவிகளை ஹமாசுக்கு வழங்கி வருவதாகவும், துருக்கி, எகிப்து உள்பட பிற நாடுகள் அதிகாரிகள் மட்டத்திலும், ஹமாஸ் தீவிரவாதிகளை சேர்ந்தவர்களை அந்நாடுகளின் எல்லையில் செயல்பட அனுமதிப்பதாக மேலை நாடுகள் குற்றம் சுமத்தி உள்ளன.

அதேவேளையில் சில நாடுகள் ஹமாசின் செயல்பாட்டுக்கு மட்டுமே ஆதரவை தெரிவித்துள்ளன. அதாவது நிதி, ராணுவம் உள்ளிட்ட உதவிகளை வழங்காமல் ஹமாசின் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. உதாரணமாக எகிப்து தனது நாட்டின் ஹமாஸ் செயல்பாட்டை அனுமதிக்காத நிலையில் தற்போது ஹமாசின் தாக்குதலுக்கு ஆதரவாக உள்ளதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

அதேபோல் சில மேலை நாடுகள் ஹமாசுக்கு எதிராக உள்ளன. அதன்படி பார்த்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து, பராகுவே உள்ளிட்ட நாடுகள் ஹமாசுக்கு எதிராக இருக்கின்றன. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறது. ஆனாலும் கூட இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹமாஸ் அமைப்பை பொறுத்தமட்டில் சில நாடுகள் அதனை தீவிரவாத அமைப்பாக அங்கீகரித்துள்ளன. அதேவேளையில் பல நாடுகள் ஹமாஸ் என்பது ஒரு அரசியல் கட்சி போன்றது எனவும், சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் இயக்கம் என்பதையும் அங்கீரித்துள்ளன. இதனால் தான் காசாவை கட்டுப்பாட்டில் வைத்து செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு தொடர்பாக உலக நாடுகளால் ஒரே மாதிரியான முடிவை எடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், காசா பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை பல முனைகளிலும் சரமாரியாக ஏவியதில், 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் இன்று ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா ஃப்ளட்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் நேரப்படி காலை 6.30 மணியளவில் தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் என பல முனைகளில் இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில், பெண்கள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் ஓபிர் லிப்ஸ்டீனும் கொல்லப்பட்டுள்ளார். ஐநூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பல முனைகளிலும் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலால், ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் விமானப்படை விமானங்கள் மூலம் காசா நகரில் தாக்குதலை துவக்கி உள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் குடிமக்களே நாமும் போரில் இருக்கிறோம். போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டெரோட் நகரில் பாலஸ்தீன போராளிகள் வழிப்போக்கர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சமூக ஊடகங்களில் பரவிய காட்சிகள் சீருடையில் பாலஸ்தீனியர்கள் எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்டதைக் காட்டுகின்றன. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ராக்கெட்களை ஏவி இஸ்ரேலை ஹமாஸ் போராளிகள் நிலைக்குலைய செய்துள்ளனர். மட்டுமல்லாது இந்த போராளிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் இஸ்ரேல் விமர்சித்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது. இத்துடன் நின்றுவிடாமல் பதில் தாக்குதலிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்த ஆப்ரேஷனுக்கு ‘இரும்பு வாள்’ என இஸ்ரேல் பெயரிட்டுள்ளது. உலகின் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவம் கொண்ட முதல் 20 நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.

Leave A Reply

Your email address will not be published.