சென்னை சென்ட்ரலில் நள்ளிரவில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு!

ஒடிசா மாநிலம் காந்தம்மால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த நந்தினி கண்காகர் – லங்கேஸ்வர் தம்பதியினர். இத்தம்பதியினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஜூஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் செல்வதற்காக நந்தினி கண்காகர் தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் தனியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று இரவு வந்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த நந்தினி காலை 6:30 மணி அளவில் கொல்கத்தா செல்லும் விரைவு ரயிலான ஹவுரா எக்ஸ்பிரஸில் செல்ல திட்டமிட்டுள்ளார். நள்ளிரவு 12 மணி என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் படுத்து உறங்கி உள்ளார். அப்போது ஒரு தம்பதியினர் நந்தினியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.தாங்களும் ஒடிசாவுக்கு செல்லவிருப்பதாகவும் ஹவுரா விரைவு ரயிலில் கொல்கத்தா வரை வந்து அதன் பின்பு ஒடிசா செல்வதாகவும் கூறி பழக்கமாகி உள்ளனர்.

நள்ளிரவில் கடத்தப்பட்ட குழந்தை:

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் குழந்தையின் தாய் நந்தினி, அத்தம்பதியினரிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும். தான் கழிவறைக்கு சென்று வருவதாகவும் கூறி சென்றுள்ளார்.பின் திரும்ப வந்து பார்த்தபோது குழந்தையும், அந்த தம்பதியினரும் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் நிலையம் முழுவதும் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்காததால் சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் சரியாக 2.30 மணியளவில் நந்தினி புகார் அளித்தார்.சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை தூக்கி செல்வதும், வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் ஒரு ஆட்டோவில் ஏறுவதும் பதிவாகி இருந்தது.

குன்றத்தூரில் மீட்பு:

இதனையடுத்து ஆட்டோ எண்ணை கண்டறிந்து ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது குன்றத்தூர் அருகே தம்பதியினரை இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.ரயில்வே உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.போலீசார் தேடுதல் வேட்டையில் குன்றத்தூர் அடுத்த ஏரிக்கரை பகுதியில் வாடகை வீடு ஒன்றில் இருந்த குழந்தை கடத்தல் தம்பதியினரை கைது செய்து குழந்தையை அதிகாலை 5.30 மணியளவில் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையை கடத்திய கடத்தல் தம்பதியினரிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பராபஸ் மண்டல்(44) நமீதா(26) ஆகியோர் என்பது தெரியவந்தது.குழந்தை கடத்துவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் வந்த அவர்கள், அங்கு நோட்டமிட்டு குழந்தையை தனியாக வைத்திருந்த நந்தினியை குறிவைத்து திசைமாற்றி குழந்தையை கடத்தியது தெரிய வந்தது.

கடத்தியவர்கள் கணவன் மனைவியா..?

குழந்தையை கடத்திய நபர்கள் இருவரும் கணவன் மனைவியா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து செண்ட்ரல் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தை கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட மூன்று மணி நேரத்தில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் குழந்தையை மீட்டு குழந்தை கடத்தல் தம்பதிகளை கைது செய்துள்ள சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் சென்ட்ரல் ரயில் நிலைய காவல்துறையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.