4 இளைஞர்கள்.. 8 செல்போன்.. ரூ.854 கோடி மோசடி.. இந்தியாவையே அலறவிட்ட ஹைடெக் கொள்ளையர்கள்

ஸ்மார்ட்போன் இருந்தால் வீட்டிலேயே வேலை… விளம்பரம் பார்த்தால் வருமானம்… யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்தால் நாள்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்… இது போன்ற எண்ணற்ற விளம்பரங்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பஞ்சமில்லை. விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசைக்கு தூண்டில் போட்டு, ஆன்லைன் மோசடிகள் உலகம் முழுவதும் பெருகி வருகின்றன. வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி, டெலிகிராம் குரூப்பில் இணைத்து வித்தியாசமாக மோசடி செய்வது அண்மைகாலத்தில் அதிகரித்துள்ளது. இதே முறையில், வாடகை வீட்டில் இருந்து கொண்டு, இந்தியா முழுவதும் 854 கோடி ரூபாயை சுருட்டியுள்ளது பெங்களூரைச் சேர்ந்த ஒரு கும்பல்.

உலகம் முழுவதும் பங்குச் சந்தை மற்றும் தங்கத்திற்கு அடுத்ததாக, மிக வேகமாக லாபம் ஈட்டித் தருவதாக கூறப்படுவது கிரிப்டோ கரன்சி… அதையே, தங்களது மோசடிக்கு ஆதாரமாக பயன்படுத்தி இருக்கின்றனர் பெங்களூரைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான மனோஜ் சீனிவாசும், எம்.சி.ஏ., பட்டதாரியான பணீந்திராவும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்கப் போவதாகக் கூறி, பெங்களூரு யெலஹங்கா பகுதியில் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர் இருவரும்..

பெயரே வைக்காத தங்களது நிறுவனத்திற்கு 4 இளைஞர்களை டெலிகாலர்களாக வேலைக்குச் சேர்த்து, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது குறித்து பொதுமக்களிடம் பேச வைத்துள்ளனர். கள்ளச்சந்தையில் டேட்டா விற்பவர்களிடம் செல்போன் எண்களை வாங்கி, கொஞ்சம் முதலீடு செய்தால், கோடியில் புரளும் வாய்ப்பு என்ற ரீதியில் வாட்ஸ் அப் மூலம் மக்களுக்கு வலைவிரிக்கத் தொடங்கினர்.

கிரிப்டோ கரன்சியில் ஒருமுறை ரூ,10,000 முதலீடு செய்தால், வீட்டில் இருந்தபடி, வேலையே செய்யாமல் நாள்தோறும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களது ஸ்லோகன்… ஆரம்பத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு, சொன்னபடி பணத்தை கொடுத்து, நம்பிக்கையை பெருக்கி கொண்டது இந்த மோசடி கும்பல்…

வருமானம் பெற்ற முதலீட்டாளர்களை பேச வைத்து, அதை வீடியோவாக்கி, சமூகவலைதளங்களில் பரவ விட, மேலும் பலர் இந்த மோசடி கும்பலின் வலையில் விழத் தொடங்கினர்.ஆரம்பத்தில் சில ஆயிரங்களை அள்ளிவீசும் இந்த கும்பல், ஒவ்வொருவரிடமும் பெரிய தொகையை வாங்கியதும் கம்பி நீட்டுவது வாடிக்கையாகிவிட்டது. முதலில் பெங்களூரை மையமாக வைத்து மோசடியை ஆரம்பித்த இந்த கும்பல், கொஞ்சம் கொஞ்சமாக எல்லையை விரிவுபடுத்தி, இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமே பணத்தை சுருட்டத் தொடங்கியது. ஒரு சின்னஞ்சிறு வீட்டில், 8 செல்போன்களை வைத்து மோசடி தொழிலை செய்து வந்த இந்த கும்பலின் கையில், வெறும் இரண்டு ஆண்டுகளில் குவிந்த தொகை மொத்தம் 854 கோடி ரூபாய்.

இந்த மோசடி கும்பல் பணத்தில் கொழித்துக் கொண்டிருந்த நேரத்தில், காவல்துறைக்கும் புகார்கள் குவியத் தொடங்கின. பெங்களூரு சரகத்தில் வெறும் 17 புகார்கள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், கர்நாடகா முழுவதும் இந்த கும்பல் மீது குவிந்த புகார்களின் எண்ணிக்கை 487.அதிகபட்சமாக தெலங்கானாவில் 719 புகார்களும், குஜராத்தில் 642 புகார்களும், உத்தரபிரதேசத்தில் 505 புகார்களும் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 472 புகார்கள் என இந்தியா முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருந்தாலும், இந்த கும்பலால் மோசடி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திற்கும் மேல் என்கிறார்கள் காவல்துறையினர்.

இதையடுத்து, விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த வங்கிக் கணக்குகளை கண்டறிந்து முடக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவ்வாறு முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த தொகை வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே என்பதால், மீதம் 850 கோடி ரூபாய் எங்கே போனது என்று விசாரணையை தொடங்கினர். அப்போதுதான், அதிர்ச்சியான விவரங்கள் காவல்துறையினருக்கு கிடைக்கத் தொடங்கியது..

முதலீட்டாளர்களிடம் இருந்து 84 வங்கிக் கணக்குகளில் பணத்தை வாங்கிய அந்த மோசடி கும்பல், அதை அப்படியே விட்டுவைக்காமல் கிரிப்டோ கரன்சி, பேமெண்ட் கேட்வே மற்றும் கேமிங் ஆப்களில் முதலீடுகளாக மாற்றியுள்ளது. பணம் வாங்க பயன்படுத்திய 84 வங்கிக் கணக்குகளும் பிற நபர்களின் போலி ஆவணங்களை பயன்படுத்தி தொடங்கப்பட்டது என்ற அதிர்ச்சியான உண்மையும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மனோஜ் சீனிவாஸ், பணீந்திரா உள்பட 6 பேரை கைது செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இனியும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம், விளம்பரம் பார்த்தால் வருமானம் போன்ற விளம்பரங்களை நம்பாமல் இருக்க வேண்டியது கட்டாயம்.

Leave A Reply

Your email address will not be published.