`வீட்டுக்குள் தொடங்கிய காதல் சர்ச்சை!’ – கல்லை வைத்து கலகம் செய்யும் பிக் பாஸ்.

‘இந்த மாதிரி பையன் கிடைச்சா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன’ என்று பிரதீப் தொடர்ந்த போது முதலில் எரிச்சலுடன் சிரித்த ஐஷூ `இது தப்பா இருக்கு..

என் கேரக்ட்டரை ஜட்ஜ் பண்ணாதீங்க..பிக் பாஸ் வீடு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறது. அதாவது, இரண்டு நாட்களாக சற்று அமைதியாக இருந்த வீட்டில் மறுபடியும் ரத்தப் பிறாண்டல்களும் குடுமிப்பிடி சண்டைகளும் அகங்கார மோதல்களும் நிகழ ஆரம்பித்திருக்கின்றன.

யாருக்கு, யாரைப் பிடிக்கவில்லை என்பதை வரைபடமாக வரைந்தால் அது குறுக்கும், நெடுக்குமாக இடியாப்பச் சிக்கலைக் கொண்ட படமாக இருக்கும் போலிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

அக்ஷயா ஸ்டார் வென்றது அங்குள்ள பலருக்கும் பிடிக்கவில்லை. இந்த விஷயம் வீட்டிற்குள் ஆட்சேபக் கொப்புளங்களாக அவ்வப்போது வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. மணியும் ரவீனாவும் இது பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அக்ஷயாவிற்கு ஸ்டார் தரப்பட்டது biased-ஆ இருக்கு. அக்ஷயா கதையும் ஐஷூ கதையும் முழுசாவே இல்ல. விசித்ரா சொன்ன கதை ஃபர்பெக்ட்டா இருந்தது” என்ற இவர்கள், அந்தப் பேச்சை சட்டென்று வெட்டி ரொமான்ஸிற்கு உடனே தாவி விட்டார்கள்.
“இப்பத்தான் நமக்கு டைம் நிறைய கிடைக்குது. உன் டைமை நிறைய எடுத்துக்கறனா?” என்று கிளுகிளுப்பு ஏரியாவில் பேச்சு தொடர்ந்தது. ‘யாரும் கூடயும் கனெக்ட் ஆகாதே’ என்று ரவீனாவிற்கு முன்பு அட்வைஸ் செய்த மணி, இப்போதோ “உன் கூடத்தான் அதிகம் கனெக்ட் ஆகறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாகவே சுத்துவதை வீட்டிலுள்ள பல கண்கள் வயிற்றெரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

‘சேட்டை’ என்கிற படத்திலிருந்து ‘அடி நீதாண்டி ஒஸ்தி பொண்ணா’ என்கிற காதுகளை பதம் பார்க்கும் குத்துப் பாடலுடன் நாள் 17 விடிந்தது. ஸ்பிரிங் பொம்மை போல் துள்ளிக் குதித்து ஆடினார் ரவீனா. அக்ஷயாவிற்கு ஸ்டார் பட்டம் கிடைத்தது குறித்து ஏற்கெனவே பலருக்கு ஆட்சேபம் இருக்கும் சூழலில், அதில் மேலும் நெருப்பைக் கொட்டி வேடிக்கை பார்த்தார் பிக் பாஸ்.
‘ஸ்டார் வென்ற அக்ஷயா மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமாம்’. ‘இந்தப் பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு யாரு கண்டது?’ என்கிற மோடில் மற்றவர்கள் அமர்ந்து அக்ஷயா பேசுவதை அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“மொதல்ல ஐஷூ கிட்ட பேசணும். உங்க டான்ஸ் ஆர்வத்துக்கு வீட்ல தடை சொன்னதா சொன்னீங்க. பொண்ணா பொறந்தது ஒரு குத்தமான்னு வருத்தப்பட்டீங்க. நம்ம ஆர்வத்தை பெற்றவர்களுக்கு புரிய வெச்சுட்டம்னா போதும். அப்புறம் அவங்க நிச்சயம் ஆதரவளிப்பாங்க.. ஆனா அதுக்கு போராடணும்.. அப்புறம்.. கூல் சுரேஷ் அண்ணா.. நீங்க பண்ற பாடி ஷேமிங் காமெடி கிடையாது” என்கிற சரியான அறிவுரையை அக்ஷயா சொல்ல, ‘அப்ப படத்துல வந்தா மட்டும் சரியா?’ என்று அபத்தமாக இடைமறித்தார் சுரேஷ். இப்படியாக சிலருக்கு அட்வைஸ் சொல்லி ‘டிங்டிங்கடிங்’ வாயால் இசை எழுப்பி தனது உரையை முடித்தார் அக்ஷயா. ‘நேரம்தான்..’ என்று முனகியபடியே மக்கள் கலைந்து சென்றார்கள்.

‘வீடு அமைதியா இருக்கற மாதிரி இருக்குது.. இது.. தப்பாச்சே’ என்று கவலையடைந்த பிக் பாஸ், பாறாங்கல்லை தூக்கிப் போடுவது மாதிரியான ஒரு ஐடியாவை யோசித்து உடனே செயல்படுத்த ஆரம்பித்தார். அதுதான் ‘சாபக் கல் டாஸ்க்’.
சிறிய சைஸ் கருங்கல் மாதிரியாக ஒரு பிராப்பர்ட்டி இருந்தது. ‘வீட்டில் உள்ளவர்கள் கூடிப் பேசி இந்த சாபக்கல்லை ஒருவருக்கு தர வேண்டும். அவர் உடனே சின்ன வீட்டுக்கு ஷிஃப்ட் ஆவதோடு நேரடி நாமினேஷனிலும் இடம் பெறுவார். அந்தக் கல்லை அவர் எப்போதும் தன் கூடவே சுமந்து கொண்டிருக்க வேண்டும். கீழே வைத்தால் அதற்கு அடுத்த வாரமும் நாமினேஷன்தான்’. இப்படியான அதிரடி விதிகளுடன் ‘சாபக் கல்’ டாஸ்க் துவங்கியது.

முதலில் எழுந்த விசித்ரா, ‘கூல்’ சுரேஷ்தான் இதுவரை நாமினேட் ஆனதில்லை. அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமே வெளில இருக்கு. ஸோ.. எலிமினேட் ஆக மாட்டாரு என்று காரணம் சொல்ல, சட்டென்று இடைமறித்த பிக் பாஸ், ‘மோட்டிவேஷனுக்கு நன்றி. சரியான காரணத்தைச் சொல்லுங்க’ என்று கடுகடுத்தார். இன்று பிக் பாஸிற்கு மூடு சரியில்லை போல.
சரியான காரணத்தைச் சொல்லாதவர்களிடம் எல்லாம் எரிச்சலைக் காட்டினார். “சுரேஷ்ஷோட மனசு முழுக்க அந்த வீட்டுப்பக்கம்தான் இருக்கு. அதனால அந்தப் பக்கமே அவர் போகட்டும்” என்று அமர்ந்தார் விசித்ரா.

அடுத்து வந்த நிக்சனும் ‘கூல்’ சுரேஷ் பெயரைச் சொல்ல, கடுப்பான சுரேஷ், ‘ஹாட்’ சுரேஷ் ஆகி விட்டார். “என்னைப் பார்த்தா இளிச்சவாயனா தெரியுதா.. ஸ்டார் கொடுக்கும் போது மட்டும் நான் கண்ணுக்குத் தெரியலையா.. இப்ப மட்டும்தான் எனக்கு ரசிகர்கள் இருக்காங்கன்னு தெரியுமா.. எதையோ பேசி அப்புறம் முடிவை மாத்தி அக்ஷயாவிற்கு ஸ்டார் கொடுத்திட்டீங்க.. ஙொப்பன் மவனே.. நான் சீரியசாத்தான் கேக்கறேன்” என்று சுரேஷ் உஷ்ணமாக, முகச்சுளிப்புடன் அமர்ந்திருந்தார் அக்ஷயா. வாக்கெடுப்பு முடிவதற்கு முன்பே ‘சரிப்பா.. நானே இந்தக் கல்லை எடுத்துக்கறேன்’ என்று சுரேஷ் சீன் போட்டதைத் தடுக்காமல் ‘உர்’ரென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கேப்டன் யுகேந்திரன்.

‘பக்கத்து வீட்டுல இருக்கற ஆறு பேருக்கு மட்டுமல்ல.. அறுபது கோடி (எதே?!) தமிழர்களுக்கும் சொல்லிக்கறேன்.. தமிழன்டா.’ என்று சுரேஷ் ஹைடெஸிபலில் கத்த ‘ண்ணா. எச்ச துப்பாம பேசுண்ணா’ என்றார் மணி. மீண்டும் வாக்கெடுப்பு தொடர்ந்தது. ரவீனாவைத் தேர்ந்தெடுத்த யுகேந்திரன், அதற்கான காரணத்தைச் சொல்ல ‘உக்காருங்க. கேப்டன் பதவியை நீங்க இன்னமும் புரிஞ்சுக்கல’ என்று டெரர் மோடில் யுகேந்திரனிடம் எரிச்சலைக் காட்டினார் பிக் பாஸ்.

இந்த வாக்கெடுப்பு ஒருவழியாக முடிந்ததும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற சுரேஷிற்கு சாபக்கல் கிடைத்தது. ‘குளிக்கும் போது என்ன பண்றது?’ என்று சுரேஷ் கேட்ட நக்கலான சந்தேகத்தை பிக் பாஸ் சட்டையே செய்யவில்லை. ‘ஏதோ ஷூட்டிங் வந்த மாதிரி சப்பாத்தில ஆயில் போடாம சுட்டுக் கொடுங்க’ன்னு அக்ஷயா சொன்னாங்க’ என்பது தனது நாமினேஷனின் போது சுரேஷ் சொன்ன காரணம்.

டாஸ்க் முடிந்ததும் இதைப் பற்றி சுரேஷிடம் தொடர்ந்து பேச முயன்றார் அக்ஷயா. ஆனால் சுரேஷ் இதைப் பற்றி விவாதிக்க தயாராக இல்லை. ‘சுரேஷ் அண்ணா.. சுரேஷ்ஜி.. ஒரு நிமிஷம்..’ என்று விடாமல் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் அக்ஷயா.
ஆக.. சுரேஷிற்குத்தான் இந்த ‘சாபக்கல்’ தண்டனை என்பது மாதிரியான முடிவு ஏற்பட்ட போது அதில் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். சுரேஷ் தன்னிச்சையாக முடிவு செய்து இரண்டு நபர்களைத் தேர்வு செய்து இந்த சாபத்தைக் கைமாற்றி விடலாம் என்று அறிவித்தவுடன் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மணி மற்றும் ரவீனாவைத் தேர்ந்தெடுத்த சுரேஷ், அதற்கான காரணத்தைச் சொல்ல முற்பட்ட போது ‘காமெடி முடிஞ்சிடுச்சுன்னா.. சரியான காரணத்தைச் சொல்லுங்க’ என்று சுரேஷை பங்கமாக கலாய்த்தார் பிக் பாஸ்.

ஒருவழியாக மணி மற்றும் ரவீனாவை தேர்ந்தெடுத்து சாபக்கற்களை அவர்களிடம் கைமாற்றினார் சுரேஷ். ஆனால் அந்த இளம் ஜோடிக்கு இது சாபமாகவே தெரியவில்லை. ‘ஹைய்யா.. ஜாலி.. அங்க போய் சேர்ந்து சுத்தலாம்’ என்கிற மூடில்தான் இருந்தார்கள். ஆனால் ‘செத்து செத்து விளையாடும் இந்த ஆட்டம் இப்போதைக்கு முடியாது’ என்பது அப்போதே தெரிந்து விட்டது. மக்கள் எதிர்பார்த்ததைப் போலவே மீண்டும் இதில் டிவிஸ்ட்டைக் கூட்டினார் பிக் பாஸ். மணியும் ரவீனாவும் சேர்ந்து மூன்று நபர்களைத் தேர்ந்தெடுத்து சாபத்தைக் கைமாற்றலாம். அவர்கள் தேர்ந்தெடுத்தது, அக்ஷயா, ஐஷூ மற்றும் விஜய் ஆகியோரை.
‘சின்ன வீட்டுப் பக்கம் யாரும் வராதீங்க.. ஏற்கெனவே இங்க ஹவுஸ்ஃபுல்லா இருக்கு’ என்று ஜாலியாக எச்சரித்தார் பிரதீப். மீண்டும் இந்த பரமபத ஆட்டம் தொடர்ந்தது. அந்த மூவரும் சேர்ந்து இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இந்த முறை மணியும் சுரேஷூம் தேர்வானார்கள். அது சாபக்கல்லா அல்லது நாமக்கல்லுக்கு போகும் பஸ்ஸா என்று தெரியவில்லை. பிரேக் பிடிக்காமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. இதுதான் கடைசி சுற்று. மணியும் சுரேஷூம் சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் அக்ஷயாவை பலியாடாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள்.

ஆகவே சாபக்கல் தந்த தண்டனையின் படி ‘சின்ன வீட்டுக்கு’ செல்ல இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்ஷயா. அவர் இந்த வாரத்தில் நேரடியாகவும் நாமினேட் ஆவார். நேற்று ஸ்டார் பட்டம் வாங்கிய அக்ஷயாவிற்கு மறுநாளே தண்டனை கொடுத்து ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்கிற தத்துவத்தை பிக் பாஸ் வீடு மீண்டும் நிரூபித்தது. ‘வாங்க.. வாங்க.. வீடு சின்னதா இருக்கலாம்… ஆனா எங்க மனசு பெரிசு’ என்று அக்ஷயாவை பாசத்துடன் வரவேற்றார் விஷ்ணு.

வீட்டில் ஏற்கெனவே இருக்கிற ரொமான்ஸ் டிராக் போதாதென்று இந்தப் பட்டியலில் மாயாவும் குதித்திருக்கிறார் போல. குரூப் ஃபோட்டோவில் எட்டிப் பார்ப்பது போல பூர்ணிமாவும் அதில் கலந்திருக்கிறார் என்பதுதான் குழப்பமான டிராக்காக இருக்கிறது. “விஜய்யை எனக்குப் பிடிக்கும். ஆனா நீங்க எதிர்பார்க்கற அர்த்தத்துல இல்ல” என்று தன்னைக் கலாய்த்துக் கொண்டிருந்த விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிற்கு பூரிப்புடன் விளக்கம் தந்து கொண்டிருந்தார் மாயா. (அப்ப அதானே ஜெஸ்ஸி?!).

பூர்ணிமா தன்னைக் கலாய்ப்பதால் அவரை ஜாலியாக பழிவாங்க முடிவு செய்த மாயா ‘நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா.. அடிக்கடி சண்டை போட்டுக்கறீங்க.. மோதலுக்கு அப்புறம்தான் காதல் வரும்’ என்று விஷ்ணுவுடன் இணைத்து முடிச்சுப் போட, இப்போது பழிவாங்குவது பூர்ணிமாவின் டர்ன். `மாயாவோட மாயக்காதல் தெரியுமா?’ என்று கூட்டத்தில் கட்டுச்சோற்றை அவிழ்க்க அவர் முயன்ற போது, டைமிங்கில் அங்கு வந்து நின்றார் விஜய். ‘என் மூஞ்சுல ஏதாச்சும் ரொமான்ஸ் தெரியுதா.. பாருங்க.. அவன் மூஞ்சுலயும் ஏதாவது தெரியுதா.. இல்லல்ல..’ என்று மாயா இந்தச் சூழலை சமாளித்தார். இஞ்சி தின்ற முகபாவத்துடன் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் விஜய்.

மக்களுக்குள் கோள் மூட்ட வேண்டுமென்ற உத்வேகத்துடன் இன்னொரு டாஸ்க்கை தூசு தட்டி ஆரம்பித்தார் பிக் பாஸ். சின்ன வீட்டில் அதிக நாட்களைக் கழித்தவர்கள், பெரிய வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய behaviour analysis செய்ய வேண்டுமாம். இதில் மாஸ்டர் ஆன பிரதீப் முதலில் ஆரம்பித்தார். “யுகேந்திரன்.. நீங்க நல்ல பெயர் வாங்கணும்ன்ற ஜோன்ல இருக்கீங்க.. விசித்ரா. நீங்க அட்வைஸ் பண்ற ஜோன்ல இருக்கீங்க.. விஜய்.. நீங்க வேற ஒரு ஜோன்ல இருக்கீங்க. ரவீனா.. நீங்க ஹாப்பி ஜோன்ல இருக்கீங்க.” என்று Zonal Officer மாதிரி ஒவ்வொருவரையும் ஒரு ஜோனில் அடைத்த பிரதீப், ‘நிக்சன், ஜோவிகா போன்றோர் தங்கள் ஆட்டத்தைச் சரியாக ஆடுகிறார்கள்’ என்று சான்றிதழ் தந்தார்.

‘நீங்க பண்றது அட்வைஸ் மாதிரி இருக்கு’ என்று பிரதீப்பின் பொழிப்புரைக்கு பெரிய வீடு ஆட்சேபணை செய்தது. ‘பொதுவாகவே பெண்கள் ஒப்பனையின் மூலம் தங்களை முன்னுறுத்திக்கற மாதிரி தெரியுது. மேக்கப்பிற்கு ரொம்ப டைம் எடுத்துக்கறாங்க’ என்கிற குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்தார் பிரதீப்.

கடைசியாக ஐசு பற்றி பிரதீப் பேசியது சர்ச்சையாக மாறியது.. `உன்னைப் பத்தி என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியல. ஒண்ணும் தோணலை. முதல்ல என்னை சார்ன்னு கூப்ட்ட.. அப்புறம் அண்ணான்னு சொன்ன.. அப்புறம் பிளையிங் கிஸ் கொடுத்த. ‘இந்த மாதிரி பையன் கிடைச்சா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன’ என்று பிரதீப் தொடர்ந்த போது முதலில் எரிச்சலுடன் சிரித்த ஐஷூ `இது தப்பா இருக்கு.. என் காரெக்ட்டரை ஜட்ஜ் பண்ணாதீங்க.. நான் ஜாலியாத்தான் அதைப் பண்ணேன்.. உங்களுக்கே தெரியும். அதை வெச்சு என்னைத் தப்பா காட்டாதீங்க’ என்று கடுமையான ஆட்சேபத்தை தெரிவிக்க `நான் உன் அண்ணனா கூட இருக்கேன். ஒன்றும் பிரச்சினையில்லை’ என்று அந்த ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்டார் பிரதீப்.
“நீ கூடத்தான் அடிக்கடி கண்ணடிக்கற.. நாங்க அதை தப்பாவா எடுத்துக்கறோம்..? ஏதோ கிராக்குத்தனமா பண்றேன்னு எடுத்துக்கலை?” என்று விசித்ராவும் தன் ஆட்சேபத்தை இணைந்து பதிவு செய்ய `சரி.. இனி அப்படி பண்ணலை’ என்று அவசரமாக ரிவர்ஸ் கியர் போட்டு சமாளித்தார் பிரதீப்.

நடத்தை பகுப்பாய்வு செய்ய அடுத்து வந்தவர் மாயா. `முதல் வாரம் விசித்ரா கூட ஜோவிகா சண்டை போட்ட போது நான் கூட கைத்தட்டி சில்லறையை சிதற விட்டேன். ஆனா ஸ்ட்ரைக் டாஸ்க் முடிஞ்சப்போ, அவங்க மட்டும் என் கூட வந்து பேசலை. மணி.. பிற்போக்குவாதின்னு தோணுது. ஒரு தவறான கேள்வியை என் கிட்ட கேட்டார். கண்ணைப் பார்த்தே பேச மாட்டேன்றார். நிக்சன் சின்ன விஷயத்தை கூட பெரிசாக்கிடறான்… attention seeking.. ஆ இருக்கான்.. யுகேந்திரன் சார் எமோஷனலி வீக்கா இருக்கார். ஏதாவது சொன்னா அவரு மூஞ்சி சுருங்கிடுது.. எங்களுக்கு ஆனந்தமா இருக்கு. ஐஷூ வேற வேற முகம் காட்டறாங்க. சுரேஷூம் ஒரு பிற்போக்குவாதி. மத்தவங்க டைம், ஸ்பேஸை எடுத்துக்கறாரு. ரவீனா கிட்ட முதிர்ச்சியே இல்ல. விசித்ரா நல்லாப் பேசிட்டு அந்தப் பக்கம் போய் நாமினேட் பண்ணிடறாங்க. விஜய்.. கிட்ட அப்சர்வேஷன் குறைவா இருக்கு” என்று தனது ஆய்வு முடிவை தெரிவித்தார்.

‘மாயா அண்ட் பிரதீப்.. Bravo..’ என்று உச்சி முகர்ந்து இருவரையும் பாராட்டினார் பிக் பாஸ். இந்த இருவரும் பற்ற வைத்த நெருப்பு அடுத்தடுத்த நாட்களில் புகைந்து பெரிதாகலாம். ஆக வேண்டும் என்பதுதான் பிக் பாஸின் நோக்கம். அதற்காகத்தானே எல்லாம்?! பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave A Reply

Your email address will not be published.