இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகின்றன. இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 10 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக்கொள்ளும்.

இது ஒருபுறம் இருக்க இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால்ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக மொகமது ஷமி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவரது வேகம், ஸ்விங் ஆகியவை தரம்சாலா ஆடுகளத்துக்கு தகுந்தவாறு இருக்கக்கூடும். மேலும் நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த காலங்களில் ஷமி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டங்களிலும், நியூஸிலாந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன.

எனினும் இம்முறை நியூஸிலாந்து அணி சமபலத்துடன் உள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடாத நிலையில் டேவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். டாம்லேதம், கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

சுழற்பந்து வீச்சில் 11 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள மிட்செல் சாண்ட்னர், நடு ஓவர்களில் ரன் குவிப்வை வெகுவாக கட்டுப்படுத்துபவராக திகழ்கிறார். அவருடன் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் ஆகியோரும் சுழலில் கை கொடுக்கின்றனர். நியூஸிலாந்து அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.