ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம்

ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

ஏா் மாா்ஷலாக சாதனா சக்சேனா பதவி உயா்த்தப்பட்டு ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை அறிவித்தது. இதன்மூலம் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையையும் விமானப் படையில் தொடா்ச்சியாகப் பணியாற்றி ஏா் மாா்ஷலாகப் பதவி உயா்த்தப்பட்ட இரண்டாவது பெண் அதிகாரி என்ற பெருமையையும் இவா் பெற்றுள்ளாா். விமானப் படையில் பெண் ஏா் மாா்ஷலாக முதன்முறையாக பதவி உயா்த்தப்பட்டவா், ஓய்வுபெற்ற பெண் அதிகாரி பத்மா பந்தோபத்யாய ஆவாா்.

சாதனா சக்சேனா புணேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று 1985-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சோ்ந்தாா். குடும்ப மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவா், தில்லி எய்ம்ஸில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளாா். மேற்கு விமான மற்றும் பயிற்சிப் படையின் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய முதல் மற்றும் ஒரேயொரு பெண் அதிகாரி ஆவாா். இவா் விமானப் படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா். இவரின் கணவா் கே.பி.நாயா் ஏா் மாா்ஷலாக பதவி வகித்து ஓய்வுபெற்றவா். எனவே இவா்கள் விமானப் படையில் ஏா் மாா்ஷலாக பதவி வகித்த முதல் மற்றும் ஒரே தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.