அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

20க்கும் மேற்பட்ட கார் மற்றும் வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன், 200-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கல்வி நிறுவன வளாகத்தில் காலை சுமார் 6 மணியளவில் நுழைந்தனர். வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கணினி பதிவேற்றம் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள், அமைச்சர் எ.வ.வேலு, மகன் குமரனிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2021ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் திருவண்ணாமலையில் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலு மீதும் வருமான வரித் துறை சோதனையில் சிக்கியதால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பா அல்லது வரி ஏய்ப்பா என்பது சோதனையின் முடிவில் தெரியவரும். இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில், அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், பொதுப்பணித்துறையில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்த அப்பாசாமி மற்றும் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி தினகர் வீட்டில் சோதனை நடைபெற்றது.

அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணன் கோட்டூர்புரத்தில் வசித்து வரும் நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதேபோன்று அப்பாசாமி குழுமத்திற்கு சொந்தமான ரெசிடென்சி ஹோட்டலிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வாடிக்கையாளர்களை போன்று ஒரு நாள் முன்னதாகவே இந்த ஹோட்டலில் வந்து தங்கியிருந்த வருமாவரித்துறை அதிகாரிகள் காலையில் சோதனையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் அமித் வீட்டிலும், அண்ணா நகரில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் ரெட்டி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே, கோவையில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஸ்ரீராமின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கோவை சிங்காநல்லூரை சேர்ந்த திமுக பிரமுகரும், எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளருமான எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரத்தில் உள்ள அனெக்ஸ் பேப்ரிக்ஸ் நிறுவனம் மற்றும் ஒரு நிதி நிறுவனம் என மூன்று இடங்களில் வருமான வரித்துறை சோதனை நீடித்து வருகிறது. நேற்று தொடங்கிய சோதனையில், கிண்டி நெடுஞ்சாலை துறை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.