தாய்க்கு சொத்தில் பங்கு கிடையாது – உயர்நீதிமன்றன் அதிரடி உத்தரவு!

சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் 2012-ம் ஆண்டு உயிர் பிரிந்தார். அவரது தாய் பவுலின் இருதய மேரி என்பவர் மகனின் சொத்தில் பங்கு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதனை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் மித்ரா நேஷா நியமிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், செந்தில்குமார் விசாரணை நடத்தினர். அதில், வாரிசுரிமை சட்டம் 42வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குதான் சொத்தில் பங்கு உள்ளது என்று வழக்கறிஞர் மித்ரா நேஷா தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, வழக்கறிஞர் கூறுகையில், “இறந்தவரின் மனைவியோ குழந்தைகளோ இல்லை என்றால் தந்தை சொத்துக்கு உரியவர் ஆவார். தந்தையும் இல்லை என்றால்தான், தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆகலாம்” என்று தெரிவித்தார்.

திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை எனவும், மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக நாகை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து வழக்கில் உதவியாக இருந்த வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.