மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று குஷ்பு உறுதி

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் தெரிவித்த இழிவான கருத்துகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்தார்.

லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மிகவும் சர்ச்சையான கருத்துகளைக் கூறினார். அதையடுத்து நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நான் ஏற்கனவே மன்சூர் அலிகான் பேசிய கருத்துகள் குறித்து ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளேன்.

அவரின் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற இழிவான சிந்தனையுடன் உள்ள யாரும் தப்பிக்க முடியாது. இந்த நேரத்தில் மன்சூர் அலிகான் இழிவாகப் பேசிய த்ரிஷா மற்றும் மற்ற பெண்களுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன்.

பெண்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு கண்ணியம் அளிக்கவும் நாம் போராடி வருகிறோம். ஆனால் இவரைப் போன்றவர்கள் சமூகத்தில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளைக் கூறி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில், லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என்று வருந்துவதாக சர்சைக் கருத்தை தெரிவித்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.