இசை நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு… கேரளாவில் சோகம்!

கேரளாவில் பல்கலைக்கழகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 4 மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அரசு அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில், டெக் பெஸ்ட் எனப்படும் நிகழ்ச்சி 3 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 2வது நாளான நேற்று மாலை, ஆடிட்டோரியத்தில் பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இசை நிகழ்ச்சியைக் காண அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் நுழைவாயிலில் நின்றபடியே, இசை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மழை பெய்ததால், வாசலில் நின்றிருந்த மாணவ, மாணவிகள் பலரும் முண்டியடித்தபடி ஆடிட்டோரியத்திற்குள் நுழைய முயன்றதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 2 மாணவர்கள், 2 மாணவிகள் என மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 46 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக, ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த அனைவரும் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சிலரின் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி, மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம், கேரளா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து நடந்த இடத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.