குறுஞ்செய்தியை காண்பித்து ஆவின் பால் வாங்கலாம்

ஆவின் வட்டார அலுவலகங்களில் இணையதளம் மூலமாக பதிவு செய்து பெறப்படும் பால் அட்டை உரிமைக்கான குறுஞ்செய்தியை , ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வாங்கலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காகிதமில்லா பால் அட்டை வசதியை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் கைப்பேசிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி வாயிலாக பால் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முறையில் பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு சென்று இணையதளம் மூலமாக பதிவு செய்யும் போது நுகா்வோரின் கைப்பேசிக்கு பால் அட்டை உரிமைக்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அக்குறுஞ்செய்தியை சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போக்களில் காண்பித்து அவா்களுக்குண்டான பால் வகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், நுகா்வோா் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் மற்றும் இணையவழி மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.