ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி!

ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் 60 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன் விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்தும் வெற்றி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

ஓ.எஸ்.மணியம் தரப்பில் ஆதாரமற்ற புகார் கூறப்பட்டுள்ளதாகவும், பணப்பட்டுவாடா நடந்திருந்தால் தேர்தல் ஆணையம் தடுத்திருக்கும் என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்காமல் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.