பொன்முடி சொத்துகளை முடக்க அவசியமில்லை: உயர்நீதிமன்றம்

பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுவித்து 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீா்ப்பளித்தது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையால் முடக்கப்பட்ட பொன்முடியின் சொத்துளையும் விடுவித்தது.

பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை மற்றும் சொத்துகளை விடுவித்ததை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு காவல்துரையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகளாக மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரும் குற்றவாளிகள் என டிச.19-ஆம் தேதி தீா்ப்பளித்து தண்டனை விவரங்களை வியாழக்கிழமை அறிவித்தாா்.

பொன்முடிக்கும், அவரின் மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ஜனவரி 22-ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கீழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சொத்துகள் விடுவித்ததை எதிர்த்த வழக்கில் இன்று காலை நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

அதில், “சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது. சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துகளை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.