அரசியலாகும் வானிலை முன்னறிவிப்பு..வானிலை ஆய்வு மையம் கொடுத்த பதிலடி!

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 95 சென்டி மீட்டர் மழை பெய்தது. 200 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெய்த பெரு மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே சரியாக கணிக்கத் தவறியதால் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், 21 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்தால் அதன் அளவு சரியாக கணிக்க முடியாது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை குறித்து கணிக்க தவறிவிட்டதாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றம் சாட்டினார். இதை ஆமோதிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் குற்றம் சாட்டினார். இதேபோன்று, நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய பின் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரு படி மேலே சென்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தையே மூடி விடலாம் என கடுமையாக சாடினார்.

இதற்கிடையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையை முன்கூட்டிய கணிக்க தவறியதாக கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

மழை முன்அறிவிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், வானிலை மையம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைக்கோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உலகத்தரத்திற்கு ஒப்பானவை என்றும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்திலும், இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென் தமிழ்நாட்டை கண்காணிக்க 3 டாப்ளர் டேரார்களும் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் சர்வதேச தரம் வாய்ந்தது என உலக வானிலை அமைப்பு பாராட்டியுள்ளதாகவும், வர்தா, கஜா, மிக்ஜாம் புயல்கள் குறித்து விடுத்த எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தை குறிவைத்து செய்யப்படும் விமர்சனங்கள், தமிழ்நாட்டு வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.