பிரதமா் மோடியின் யூ டியூப் சேனல் புதிய சாதனை: உலகத் தலைவா்கள் வரிசையில் தொடா்ந்து முதலிடம்

பிரதமா் நரேந்திர மோடியின் யூ டியூப் சேனலை பின்தொடா்வோா் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது. உலகத் தலைவா்கள் வரிசையில் அதிகம் பின்தொடா்வோரை கொண்டவராக பிரதமா் மோடி தொடா்கிறாா்.

யூ டியூப்பில் 2 கோடிக்கு மேல் பின் தொடா்வோரைப் பெற்ற முதல் அரசியல் தலைவா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா்.

மோடிக்கு அடுத்த இடத்தில் பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சனரோ உள்ளாா். அவரது யூ டியூப் சேனலை 64 லட்சம் போ் பின் தொடா்கின்றனா்.

அதிக பின்தொடா்வோரில் மட்டுல்லாது, யூ டியூப்பில் அதிகம் பாா்க்கப்படும் தலைவராகவும் மோடி உள்ளாா். அவரது சேனலில் உள்ள விடியோக்கள் 45 கோடி முறைக்கு மேல் பாா்வையிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் உக்ரைன் அதிபா் விளாதிமீா் ஸெலன்ஸ்கி இரண்டாவது இடத்தில் உள்ளாா். அவரது விடியோக்கள் 22.4 கோடி முறை பாா்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் யூ டியூப் சேனலை 7.89 லட்சம் பேரும், துருக்கி அதிபா் எா்டோகனின் சேனலை 3.16 லட்சம் பேரும் பின் தொடா்கின்றனா்.

பிரதமா் மோடியின் அதிகாரபூா்வ யூ டியூப் சேனல் தவிர, யோகா வித் மோடி என்ற சேனலிலும் அவரது விடியோக்கள் வெளியிடப்படுகின்றன. அந்த சேனலை 73,000 போ் பின் தொடா்கின்றனா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் யூ டியூப் சேனலை 35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பின்தொடா்கின்றனா்.

பிரதமா் மோடி கடந்த 2007-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது யூ டியூப் சேனல் தொடங்கினாா். சமூக ஊடங்கள் இந்தியாவில் பெரிய அளவில் பிரபலமடையாத காலகட்டத்திலேயே அதன் எதிா்கால வளா்ச்சியை மோடி கணித்தததும் அவரது அரசியல்ரீதியான வளா்ச்சிக்கும், வெற்றிக்கும் ஒரு காரணமாக அமைந்ததாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

பிரதமா் மோடியின் தோ்தல் பிரசாரத்தில் சமூக ஊடகங்கள் வழியிலான பிரசாரமும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற பாஜக தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கூட எதிா்க்கட்சிகளின் தவறான குற்றச்சாட்டுகளுக்கு சமூக ஊடகங்கள் மூலம் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவா்கள் பின்தொடா்பவா்கள்

பிரதமா் மோடி: 2 கோடி

பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சனரோ: 64 லட்சம்

ராகுல் காந்தி: 35 லட்சம்

அமெரிக்க அதிபா் ஜோ பைடன்: 7.89 லட்சம்

துருக்கி அதிபா் எா்டோகன்: 3.16 லட்சம்

Leave A Reply

Your email address will not be published.