பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளையர் அடித்துக்கொலை

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த குடுப்பு கிராமத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளையர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கிராமத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

அந்த நேரத்தில் இளையர் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அவரைச் சரமாரியாக அடித்ததுடன் உருட்டுக்கட்டையாலும் தாக்கினர்.

அதில் முதுகு, அடிவயிற்றில் பலத்த காயம் அடைந்த அந்த இளையரை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 28ஆம் தேதி, அந்த இளையர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மங்களூரு புறநகர் காவல்துறையினர் இளையரின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதலில் மர்மமான முறையில் இளையர் மாண்டதாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மேலும் மாண்ட இளையரின் அடையாளம் முதலில் தெரியாமலிருந்தது.

விசாரணையில், அவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 28 வயது அஷ்ரப் என்று தெரியவந்தது.

அவர் மங்களூரில் தனியாகத் தங்கியிருந்து கூலி வேலை செய்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 20 பேர் மீது ஏழு பிரிவுகளின்கீழ் விசாரணை நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.