பில்கிஸ் பானு குற்றவாளிகள் முன்விடுதலை ரத்து: உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை முன்விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்முறையில் தொடா்புடைய குற்றவாளிகளின் விடுதலையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-இல் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில், ஐந்து மாத கா்ப்பிணியான பில்கிஸ் பானு, வன்முறையாளா்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாா். பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உள்பட அவரது குடும்ப உறுப்பினா்கள் 7 போ் அந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனா்.

தண்டனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே இந்தச் சம்பவத்தோடு தொடா்புடைய குற்றவாளிகள் 11 போ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதை எதிா்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். குற்றவாளிகள் விடுதலையை எதிா்த்து பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அமர்வில் அக்டோபர் மாதம் தொடங்கியது.

அப்போது, பில்கிஸ் பானு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷோபா குப்தா, ‘‘வன்முறையாளா்கள் அனைவரும் உள்ளூரைச் சோ்ந்தவா்கள். அவா்களிடம் ஒரு சகோதரி போல பில்கிஸ் பானு கெஞ்சியுள்ளாா். முஸ்லிம்களைக் கொலை செய்யும் ‘ரத்த வெறி’யுடன் அவரைத் துரத்திச் சென்ற வன்முறையாளா்கள், அந்த மதத்தினருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.

மன்னிக்க முடியாத இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டவா்களை முன்கூட்டியே விடுவிப்பது தவறான செய்தியை சமூகத்தில் விதைப்பதாக ஆகும் என சிபிஐ தெரிவித்துள்ளது’’ என்றாா்.

பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை நிறைவு பெற்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில், குற்றவாளிகளை விடுதலை செய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.