நேபாள பிரதமரைச் சந்தித்த ரணில்! – இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சு.

அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (20) நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது உதவும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், இரு நாட்டு நாடாளுமன்ற விவகாரங்களை ஆய்வு செய்வதற்கு இரு நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டிருந்தார். அந்தப் பதிவில் “கம்பாலா நகரில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் பாராட்டத்தக்கது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை ‘சாகர்’ கொள்கை பிரதிபலிக்கின்றது.” – என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.