சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பும் முயற்சி : என் தாயின் நிலை, எந்தத் தாய்க்கும் வராமலிருக்கட்டும் : சாந்தனின் சகோதரன் மதி சுதா

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அவரது சகோதரர் மதி சுதா , முகப்புத்தக தளத்தில் பதிவிட்டுள்ளார்.


“இறுதியாக இந்த ஒன்றரை வருடமாகப் போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை. அண்ணாவின் மரணச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது. அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கின்றேன். என் தாயின் நிலை இனிமேலாவது எந்தத் தாய்க்கும் வராமலிருக்கட்டும்.”

– இவ்வாறு மறைந்த  சாந்தனின் சகோதரன் மதி சுதா, உருக்கமான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் என்றழைக்கப்படும் சுதேந்திரராஜா (வயது 55) நேற்று திடீரென உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு இலங்கை வரவிருந்த நிலையிலேயே காலை 7.50 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

சாந்தன் நாடு திரும்பவிருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தமை அவரின் குடும்பத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவரின் சகோதரன் மதி சுதா மேற்கண்டவாறு உருக்கமான பதிவை இட்டுள்ளார்.

சாந்தன் , விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் – வைகோ

சாந்தன் மிக நல்ல எழுத்தாளர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். தன் தாயாரைப் பார்க்க

வேண்டும் என்பதையே இறுதி ஆசையாகக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய தாயார் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் தமிழகத்தில் நேற்று காலமனார்.

இந்தநிலையில், அவர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாந்தன் உடல் நல குறைவால் மரணம் ஆனார் என்று கூறுவது தவறு.
இது ஒரு வகையான படுகொலை : சட்டத்தரணி ஜான்சன்

ரஜீல் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட சாந்தன் நேற்று காலை உயிரிழந்தார்.

இது உடல் நல குறைவால் ஏற்பட்ட மரணம் என்று கூறுவது தவறு. இது ஒரு வகையான படுகொலையாகத்தான் பார்க்க வேண்டும் என சட்டத்தரணி ஜான்சன் கூறியுள்ளார்.

எப்படி உயிரிழந்தார் சாந்தன்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 55. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் சிகிச்சைபெற்றுவந்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர் சாந்தன் என்ற சுதேந்திரராஜா. இவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவரையும் இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பதால் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

தங்களுக்கு தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி, தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென நால்வரும் கோரிவந்தனர்.

32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனுக்கு பல உடல்நல பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அவருக்கு இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், “சாந்தனுக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது,” என்றார்.

“அவருக்கு Cryptogenic cirrhosis பிரச்சனை ஏற்பட்டிருந்ததால் அந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதை அறிய முயற்சித்துவந்தோம்.

“கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் சுயநினைவு இழப்பதும் இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று இரவு (பிப்ரவரி 27) பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

“அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்,” என்று கூறினார்.

சாந்தன் தனக்கு தற்காலிக பயண ஆவணங்களைக் கோரிவந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழக்கிழமை, அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று வெளிநாட்டவருக்கான பிராந்திய பதிவு அலுவலகத்தில் இருந்து பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் தீவிரமடைந்தன.

உடல்நலம் சரியானதும் அவர் இலங்கைக்கே திரும்பிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருடைய உடல்நலம் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, உயிரிழந்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி வழக்கில் கைதானது பற்றி சாந்தன் கூறியது?

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிவராசனின் உதவியாளராகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் சாந்தன் என்ற சுதேந்திரராஜா சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். கடந்த 1990-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கையிலிருந்து இந்தியா வந்த சாந்தன், கோடம்பாக்கத்தில் இருந்த மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இஞ்சினீயரிங் டெக்னாலஜியில் படித்தார்.

இந்த காலகட்டத்தில் சிவராசனுக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். போராளிக் குழுவினரை உளவு பார்த்ததாக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் கூறின. பத்மநாபாவின் படுகொலைக்குப் பிறகு, இலங்கைக்குத் திரும்பிச் சென்ற சாந்தன், மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிவந்து ராஜீவ் காந்தியின் கொலையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், அடையாள மாறுபாட்டின் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக சாந்தன் தொடர்ந்து கூறி வந்தார்.

சாந்தன் விடுதலையான பிறகு, அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் மகேஸ்வரி தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார். இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனும் கோரிக்கை வைத்திருந்தார்.

சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 30-ஆம் தேதியன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, சாந்தனை இலங்கைக்கு வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். கடந்த 33 ஆண்டுகளாகத் மகனைக் காணாது பரிதவித்த சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்த்துவிட துடித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

சாந்தனின் குடும்பத்தினர் யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் வசித்துவருகின்றனர். சாந்தனின் உடலை ‘எம்பாமிங்’ செய்து இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.