வெடுக்குநாறிமலை கோயிலுக்குள் புகுந்த பொலிஸார் : பூசகர் உட்பட 8 பேர் கைது (Photos)

வெடுக்குநாறிமலை கோயிலுக்குள் புகுந்து பொலிஸார் வெறியாட்டம்!
* சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றம் * கஜேந்திரன் எம்.பி. மீதும் தாக்குதல் * ஆலய நிர்வாகிகள், பூசகர் உட்பட 8 பேர் கைது

சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த
தமிழர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றம்
* கஜேந்திரன் எம்.பி. மீதும் தாக்குதல்
* ஆலய நிர்வாகிகள், பூசகர் உட்பட 8 பேர் கைது

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் இன்று மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழர்கள், பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர்.

இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர் என ஆயுதம் தாங்கிய படையினர் வெடுக்குநாறிமலையில் குவிக்கப்பட்டு பௌத்த பிக்குகள் சூழ்ந்து நிற்க பொலிஸாரின் அராஜகம் அரங்கேற்றப்பட்டது.

கோயில் நிர்வாகிகள், பூசகர், அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரதேச இளைஞர்கள் என 8 பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் இன்று மகா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை மாலை 6 மணிக்கு அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது.

கோயிலுக்குள் துப்பாக்கிகள், பொல்லுகள் தாங்கியவாறு சப்பாத்து அணிந்து உள்நுழைந்த பொலிஸார், வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களைப் பலாத்காரமாக – குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு சென்றனர்.

இதன்போது மிகவும் மோசமாக ஆலயத்துக்கு மரபு ரீதியில் வேட்டி அணிந்து வந்த இருவரின் வேட்டிகள் முழுமையாகப் பொலிஸாரால் உருவி எடுக்கப்பட்டன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் பொலிஸார் தாக்கினர். அவரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற பொலிஸார், வாகனத்தின் முன்னால் போட்டுவிட்டுச் சென்றனர்.

கோயிலில் அன்னதானத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்த உணவுப் பொருட்களையும் பொலிஸார் பறித்தனர். கோயிலில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கோயில் நிர்வாகிகள், பூசகர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர், பொதுமக்கள் என 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.