ரணில் போட்டியிடமாட்டாராம்! – மீண்டும் கூறுகின்றார் கம்மன்பில.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

“படுதோல்வியைத் தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பஸில் ராஜபக்ஷ கோருகின்றார். ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.” – என்றும் உதய கம்மன்பில கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:-

“மொட்டுக் கட்சிக்கு ஆதரவு உள்ளது, மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர் மாயையை உருவாக்கி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி ஏற்படும் என்பது பஸிலுக்குத் தெரியும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள். அதனால் மொட்டுத் தரப்பினருக்கு மேலும் பின்னடைவு ஏற்படும். இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் கோரப்பட்டுள்ளது.

இரண்டாவது அரச ஊடகம் மற்றும் அரச அதிகாரிகள், பொலிஸார் ஊடாக ஏதேனும் ஒத்துழைப்பைப் பெறலாம் என பஸில் கருதுகின்றார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற மாட்டாது.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதி.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.