இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது.

இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என எச்சரித்த நிலையில் இன்று(ஏப்.,14) காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது.

இஸ்ரேல் — ஹமாஸ் இடையேயான போர், தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையேயான போராக எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்தது. நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவும் வகையிலும், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்து களத்தில் குதிக்க தயாராகி உள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் கடும் சேதமும், அதிக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன.

இந்த போரில், பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, சில மேற்காசிய நாடுகளும் களத்தில் குதித்தன.

இந்த நாடுகள் நேரடியாக களத்தில் இறங்காமல் ஹவுதி, ஹொஸ்பெல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளை களத்தில் இறக்கின. யூதர்களின் நாடாக கருதப்படும் இஸ்ரேலுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் இடையேயான போராக, ஒரு கட்டத்தில் இது உருவெடுத்தது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹொஸ்பெல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது; இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.

அந்த வகையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து, இஸ்ரேல் சமீபத்தில் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களின்போது, டமாஸ்கசில் உள்ள ஈரானின் துாதரகத்தின் மீதும் சில ஏவுகணைகள் விழுந்தன. இதில், ஈரான் ராணுவத்தின் உயரதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது; கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது. இதையடுத்து, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் உருவானது.

இந்த சூழ்நிலையில், தன் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ”இஸ்ரேல் மீது ஈரான் எந்த நிமிடத்திலும் தாக்குதல்களை நடத்தலாம்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவவும், அந்த பிராந்தியத்தில் உள்ள தன் படைகளை பாதுகாக்கவும், கூடுதலாக இரண்டு போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.