மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மாவின் சதம் வீணானது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு ரகானே (5) ஏமாற்றினார். முகமது நபி பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கோயட்சீ வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ரச்சின் (21) ஓரளவு கைகொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ஷிவம் துபே, ஷெப்பர்ட் வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். கோயட்சீ பந்தை சிக்சருக்கு அனுப்பிய ருதுராஜ் 33 பந்தில் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய துபே, 28 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்த போது ஹர்திக் பந்தில் ருதுராஜ் (69) அவுட்டானார். டேரில் மிட்செல் (17) நிலைக்கவில்லை. அடுத்து வந்த ‘தல’ தோனி, ஹர்திக் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் உட்பட 4 பந்தில் 20 ரன் குவித்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது. துபே (66), தோனி (20) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஷர்துல் தாகூர் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டினார் இஷான். முஸ்தபிஜுர் வீசிய 5வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரோகித், ஷர்துல் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது பதிரானா ‘வேகத்தில்’ இஷான் (23) வெளியேறினார். சூர்யகுமார் ‘டக்-அவுட்’ ஆனார். ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரோகித், 30 பந்தில் அரைசதம் கடந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மா 20 பந்தில் 31 ரன் விளாசினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (2), டிம் டேவிட் (13), ஷெப்பர்ட் (1) சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 34 ரன் தேவைப்பட்டன. பதிரானா பந்துவீசினார். முதலிரண்டு பந்தில் ஒரு ரன் கிடைத்தது. மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் 61 பந்தில் சதத்தை எட்டினார். கடைசி 3 பந்தில் 8 ரன் எடுக்கப்பட்டது. இந்த ஓவரில் 13 ரன் மட்டும் கிடைத்தன.
மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 186 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ரோகித் (105), நபி (4) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் பதிரானா 4 விக்கெட் சாய்த்தார்.

மும்பைக்கு எதிராக களமிறங்கிய சென்னையின் தோனி, ‘டி-20’ அரங்கில் ஒரு அணி சார்பில் 250 போட்டியில் பங்கேற்ற 2வது வீரரானார். ஏற்கனவே பெங்களூருவின் விராத் கோலி (258 போட்டி) இச்சாதனை படைத்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.