ஈரானின் தாக்குதலுக்கு ,இஸ்ரேல் பதில் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இன்று (19) காலை ஈரானின் இஸ்பஹான் நகருக்கு அருகில் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

விரைவில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் முன்கூட்டியே அறிவித்துவிட்டதாகவும், அந்த முடிவை அமெரிக்கா ஊக்குவிக்கவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் பற்றிய அறிவிப்பின் போது இஸ்ரேல், ​​ மக்கள் வசிக்கும் பகுதி மீது தாக்குதல் நடத்தாது என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பியதாகத் தெரிவித்தனர்.

ஈரானுக்கு பதிலடி கொடுத்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் எச்சரித்த சில மணி நேரங்களில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் மத்திய ஈரானில் உள்ள இஸ்பஹான் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமைக்கும், இஸ்பஹான் நகரின் கிழக்குப் பகுதிக்கும் ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இதுவரை இரண்டு இடங்களில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவமும் தற்போது அறிக்கை வெளியிட மறுத்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை விரைவில் மோசமடையக்கூடும் என்பதால், பாதுகாப்பானதாக இருந்தால், உடனடியாக இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை விட்டு வெளியேறுமாறு ஆஸ்திரேலியா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

ஈரான் தாக்குதல் நடத்தினால் வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஈரானின் தேசிய சைபர் ஸ்பேஸ் மையத்தின் செய்தி தொடர்பாளர் ஹொசைன் டாலிரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த வந்த 3 ட்ரோன்களை ஈரான் பாதுகாப்பு படையினர் அழித்ததாகவும், ஏவுகணை தாக்குதல் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தாக்குதலுக்கு முன், இஸ்ரேல் ஈரானின் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கும் என்றும் அணுமின் நிலையங்கள் அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்காது என்றும் இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.