மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ராணுவ ஹெலிகாப்டர்கள்; 10 பேர் மரணம்.

மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கின.

அவற்றில் இருந்த பத்து பேரும் மாண்டுவிட்டதாக மலேசிய அரசக் கடற்படை தெரிவித்தது.

மாண்டோர் அனைவரும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் அவர்களில் மூவர் பெண்கள் என்றும் மலேசிய அரசக் கடற்படை கூறியது.

மலேசியாவின் 90வது கடற்படைத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நூர்தீன் தெரிவித்தார்.

மாண்டவர்கள் லுமுட் மற்றும் சாபா தலைநகர் கோத்தா கினபாலுவில் உள்ள கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

வெவ்வேறு பதவிகளை வகித்த அந்தக் கடற்படை அதிகாரிகள் அனைவரும் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அமைச்சர் காலிட் நூர்தீன் தெரிவித்தார்.

இந்த விபத்து ஏப்ரல் 23ஆம் தேதி காலை நிகழ்ந்தது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்களில் ஒன்று மலேசிய அரசக் கடற்படைக்குச் சொந்தமான விளையாட்டரங்கில் விழுந்து நொறுங்கியது.

மற்றொரு ஹெலிகாப்டர் அந்த விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்தது.

இரு ஹெலிகாப்டர்களும் நடுவானில் மோதிக்கொண்டதை அடுத்து, அவை விழுந்து நொறுங்கியதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த விபத்தில் மாண்டோரின் குடும்பத்தினருக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விபத்து மலேசியாவுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மலேசிய அரசக் கடற்படையும் தற்காப்பு அமைச்சும் விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தும் என அவர் உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.