ரவியின் “குமிழி”யை முன்வைத்து உரையாடலுக்கான சில முற்குறிப்புகள் – கருணாகரன்

கடக்க முடியாத முள்வழியாக நம்முடைய துயர்க்காலம் (கொடுங்காலம்) நீண்டு கிடக்கிறது என்பதை மேலும் நிரூபித்திருக்கிறது, ரவி (சுவிஸ்) எழுதியிருக்கும் “குமிழி”யும். “குமிழி” விடுதலை இயக்கமொன்றின் உட்சிதைவைச் சொல்லும் பிரதி. தொடர்ந்து வருகின்ற இந்த மாதிரிப் பிரதிகள் ஒரு வகையில் மன அமைதியை இழக்கச் செய்கின்றன. அந்தளவுக்கு இருளும் துயரும் அவமானங்களும் கொடுமைகளும் அநாகரீகங்களும் கசடும் கசப்புகளும் அலங்கோலங்களும் கீழ்மைகளும் நிறைந்தது நம்முடைய கடந்த காலம். இதன்போது சிந்தப்பட்ட குருதியும் பெருகிய கண்ணீரும் இன்னும் நம்முடைய நினைவுப் பரப்பிலிருந்து காயவில்லை. அப்போது எழுந்த ஓலக்குரல்களின் ஒலி இன்னும் அடங்கவில்லை. அன்று சிதைந்த மனங்கள் இன்னும் சீராகியதில்லை. பலியிடப்பட்ட போராளிகள் இன்னும் திரும்பத்திரும்ப மனதில் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.

மாபெரும் கனவுகளோடு தொடங்கப்பட்ட விடுதலைப்போராட்டம் நம் கண்முன்னே சிதைந்தது. சிதைந்தது என்று இதைச் சொல்வதை விடச் சிதைக்கப்பட்டது என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இந்தச் சிதைவு புறவழியில் – வெளியாரினால் நடந்தது என்பதையும் விட அகவழியில் நடந்தது என்பதே உண்மை. பிற சக்திகளும் அதைச் சிதைப்பதில் பங்காற்றியிருக்கின்றன என்றாலும் அதையும் விட நம்முள்ளிருந்த அகச் சிக்கல்களும் அரசியல் போதாமைகளும் அதிகார வெறியுமே அதைச் சிதைத்தன. அல்லது இந்தச் சிதைவிற்குப் பெரும் பங்காற்றின.

இதனால் “கனவு” இயக்கங்கள் மட்டுமல்ல, இந்தப் போராட்டத்தில் அர்ப்பணிப்புணர்வோடு இணைந்து கொண்ட இளைய தலைமுறையினரும் காயடிக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்ட, சிதைந்த வரலாறு அது. இதை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதன் ஒரு பகுதியையே ரவி எழுதியிருக்கிறார், எழுதிக் கடக்க முற்பட்டிருக்கிறார். அல்லது தன்னுள் தீராத வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைக்க முற்பட்டிருக்கிறார்.

அதேவேளை இதை வாசிக்கும் நாமோ இந்தச் சுமையை ஏற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் நமக்குள் அமைதியின்மை ஏற்படுகிறது. இந்தக் கசப்பிலிருந்து, இந்த துயர் நினைவுகளிலிருந்து விலகிச் செல்லத்துடிக்கின்ற நம்மை மீள இழுத்து இது அலைக்கழிக்கிறது. ஆனாலும் இதை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். அதுதான் வரலாற்று நிபந்தனை. எப்படி இந்தப் பிரதியும் இதன் ஆசிரியரும் தம்மைச் சுயவிமர்சனத்துக்குள்ளாக்குகின்றமை முக்கியமாக உள்ளதோ அந்தளவுக்கு நாமும் நம்மை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இந்தப் பிரதியை ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டோர், அதனோடு சம்மந்தப்பட்டோர் வாசிப்பதற்கும் இதற்கு வெளியே இருந்தோரும் இருப்போரும் வாசிப்பதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன். உள்ளே இருந்தோருடைய உளநிலையே நான் முன்னர் குறிப்பிட்டிருப்பது. வெளியே இருந்தோரும் இருப்போரும் இதை வாசிப்புச் சுவாரசியம், அறிதலார்வத்தோடு வாசித்து இன்புறக்கூடும். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றும் கூட. விடுதலைப் போராட்டத்துக்கும் இயக்கங்களுக்கும் அதில் இணைந்திருந்த போராளிகளுக்கும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாசல். எனவே இந்தப் பிரதிக்கு முக்கியமாக இரண்டு வகையான அணுகல்கள், அனுபவங்கள் நிகழலாம். இதை மனதிற் கொண்டே “குமிழி”யின் மீதான பார்வையை நாம் முன்வைக்க வேண்டும். அதுவே நியாயமானது.

“குமிழி” புளொட் (PLOT) என்றழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மீதான விமர்சனத்தை முன்னிறுத்துகிறது. புளொட் மீதான இந்த விமர்சனம் கோவிந்தனின் ”புதியதோர் உலக”த்திலிருந்து தொடர்கிறது. புதியதோர் உலகம் வெளியானது 1985 இல். அப்படியென்றால் முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்த விமர்சனம் தொடர்கிறது எனலாம். இது மேலும் தொடரும். அந்த நினைவுகளின் உத்தரிப்பு உள்ளவரை இதற்கு முடிவேயில்லை.

கோவிந்தனும் ரவியும் புளொட்டின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற வகையில் அந்த அமைப்பின் உள்முரண்பாடுகளின் நேரடிச் சாட்சியங்களாக உள்ளனர். கோவிந்தனையும் (நோபேட்) ரவியையும் விட சீலன் உட்பட வேறு சிலரும் புளொட்டின் உட்சிதைவுகளைப் பற்றி எழுதியிருக்கின்றனர். இன்னும் எழுதியும் வருகின்றனர். எனவே ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கத்திற்குள்ளிருந்த உட்(கட்சி) முரண்பாடுகளையும் சுயவிமர்சனத்தையும் முன்வைத்த பிரதிகள் வாயிலான பாரம்பரியத்தின் தொடக்கம் புளொட்டுக்குள்ளிருந்தே – புளொட்டிலிருந்தவர்களிடமிருந்தே – நிகழ்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு வேறு இயக்கத்தினரிடமிருந்து இத்தகைய (சுய) விமர்சனங்களும் நேர்மையான சாட்சியங்களும் வரவில்லை. புலிகள் இயக்கத்திலிருந்தவர்களில் ஷோபாசக்தி, யோ. கர்ணன், தமிழ்க்கவி போன்றவர்கள் புலிகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் ஓரளவுக்கு புனைவின் மூலம் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளனர். குறைந்த அளவில் தமிழினி பிந்திய புலிகள் அமைப்பையும் அதனுடைய நடவடிக்கைகளையும் “கூர்வாளின் நிழலில்” வெளிப்படுத்தியுள்ளார். புலிகளின் தொடக்ககாலத்தை கணேசன் ஐயரின் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” விமர்சிக்க முற்படுகிறது. சி.புஸ்பராஜா (ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்), நடேசன் (எக்ஸைல்) போன்றவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினூடாகத் தங்களுடைய அனுபவங்களைச் சாட்சியமாக்கியிருக்கிறார்கள். ஆனால், புளொட்டில் இருந்தோர் முன்வைத்த அளவுக்கு ஏனைய இயக்கத்தினர் தங்களைச் சுயவிமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. ரெலோவினுள்ளே பொபி – தாஸ் பிரச்சினை (மோதல்) வந்த காலத்தில் மேலோட்டமான முறையில் சில விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஈரோஸில் எஸ்.ஏ. உதயனின் “UP 83” ஒரு பகுதிச் சூழலை விவரிக்கிறது. மற்றும்படி அமைப்புக்குள் சுயவிமர்சனத்தை வலியுறுத்திய இந்த இயக்கங்கள் இன்னும் அந்தக் கதவுகளைச் சாத்தி விட்டுக் கள்ள மௌனத்தோடுதானிருக்கின்றன. இந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சென்றோரும் கூட எதைப் பற்றியும் வாய் திறப்பதில்லை. எல்லோரும் மௌனசாட்சிகளாகி விட்டனர். இதில் ஒரு சாரார் இனி எதைப் பேசித்தான் என்ற விடுபடல் மனோநிலைக்குச் சென்று விட்டனர். இன்னொரு சாரார், சாதி அபிமானம், மதப்பற்றுப்போல சரியோ தவறோ தாங்கள் இருந்த இயக்கம், தங்களுடைய இயக்கம் (என்ன இருந்தாலும் அது எங்களுடைய சாதி, எங்களுடைய மதம்) என்ற மனநிலையில் எல்லாவற்றையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய இயக்க விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் தங்களையும் தங்களுடைய அமைப்பையும் புனித நிலையில் வைத்திருக்க முற்படுகின்றனர்.

ஆனால் எல்லா இயக்கங்களிலும் அதிகாரப்போட்டியும் ஜனநாயகப் போதாமைகளும் அணிகளின் உருவாக்கமும் பிளவுகளும் பகைமனநிலையும் இருந்தது. நம்பிக்கையோடும் கனவோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் போராடச் சென்றவர்களை வஞ்சகமில்லாமல் அத்தனை இயக்கங்களும் சிதைத்திருக்கின்றன. கூடிக் குறைந்திருக்கலாமே தவிர, எல்லா இயக்கங்களும் சனங்களிலும் கைவைத்தே உள்ளன. ஆகவே அத்தனை இயக்கங்களிலும் பொறுப்புக் கூறலுக்கான இடமுண்டு. கற்றுக்கொண்ட பாடங்களுக்குரிய அவசியமிருக்கிறது. இதிலிருந்து விலக முடியாத வரலாற்று நிபந்தனை உண்டு. இந்தப் பொறுப்பை இவர்கள் எப்போது ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள்? எப்பொழுது இதற்கான கதவுகள் திறக்கப்படும்?

புளொட்டின் உட்சிதைவுகளை புதியதோர் உலகமும் தீப்பொறிகளும் வெளிப்படுத்தத் தொடங்கிய துணிச்சலான – நேர்மையான அந்த மரபின் தொடர்ச்சியில் குமிழி வந்திருக்கும்போது இந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன. அப்படியென்றால், இயக்க அரசியலில் ஜனநாயகத்துக்கான போராட்டமும் அறைகூவலும் இவர்களால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இதில் கோவிந்தன் தன்னுடைய பிரதியை முன்வைத்த காலம் மிகச் சவாலானது. அப்பொழுது புளொட் மிக வலுவான நிலையிலிருந்தது. அதை இந்தக் குமிழியும் சொல்கிறது. அன்றைய அந்தச் சூழலில் தன்னுடைய உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டநிலையிலேயே புதியதோர் உலகத்தை கோவிந்தன் (நோபேட்) எழுதினார். அது எல்லாப் பக்கத்தாலும் அபாயக் கத்திகள் சூழ்ந்திருந்த காலம். பின்னர் நோபேட் புலிகளால் கொல்லப்பட்டும் விட்டார். ரவிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அல்லது குறைவு. ரவியின் வாழ்காலமும் களமும் கூட வேறு. புளொட்டும் புலிகளும் இப்பொழுது பல்லில்லாத பாம்புகளாகி விட்டன என்றாகி விட்டது.

குமிழியின் கதை, வரலாற்றின் போக்கினை மாற்ற முற்பட்டோர், அது இருந்ததையும் விடக் கீழிறக்கியதை, கீழிறக்கப்பட்ட விதத்தைச் சொல்கிறது. மாற்றத்துக்கான புரட்சியைச் செய்ய முற்பட்ட அமைப்பின் சிதைவையும் அந்த அமைப்பில் இணைந்திருந்த போராளிகளின் சிதைவையும் சாட்சியமாக விரிக்கிறது. ஒவ்வொரு போராளியையும் அது தனிமனிதர்களாகவும் அமைப்பாகவும் அமைப்பைச் சேர்ந்தோராகவும் சமூகப் பிரதிநிதிகளாகவும் நோக்குகிறது. அமைப்புக்குள் (கழகத்துக்குள்) முக்கியமாக மூன்று விதமான போக்குடையோர் உள்ளனர். ஒரு தரப்பிரனர் இயக்கத்தின் அதிகாரத்தை வலுவாக்கம் செய்வோர். தலைமைக்கு விசுவாசம் என்ற பேரில் போராளிகளையே ஒடுக்குவோர். மாற்று அபிப்பிராயிகளைக் கொன்றொழிப்போர். மற்றத்தரப்பினர் இதற்கு எதிரானவர்கள். அவர்கள் இயக்கத்துக்குள் ஜனநாயகத்துக்காகப் போராடுவோர். குறிப்பாக சந்ததியார் போன்றோர். மூன்றாவது தரப்பினர் அமைப்புக்குள்  என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்திலிருப்போர். அச்சமும் கேள்விகளும் இவர்களைச் சூழ்ந்திருக்கிறது. புதியதோர் உலகம் பிரதானமாக மையப்படுத்தியது இரண்டாவது தரப்பினரான ஜனநாயகவாதிகளின் அடையாளத்தை, அவர்களுடைய போராட்டத்தை. அதன் மூலமாக தலைமையின் அதிகார வெறியையும் துரோகத்தையும் மூடத்தனத்தையும். குமிழி அடையாளப்படுத்த முற்படுத்துவது மூன்றாவது தரப்பினரை. அவர்களின் வழியாக தலைமையின் குற்றங்களை. இங்கே புதியதோர் உலகத்தையும் குமிழியையும் நாம் ஒப்பிட்டுப் பேசவரவில்லை.

ஆனால், குமிழியை வாசிக்கும்போதும் அதைப்பற்றிச் சிந்திக்கும்போதும் இந்த உரையாடலை, இந்த நினைவுகொள்ளலைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் இந்த இரண்டு பிரதிகளிலும் வருகின்ற மனிதர்கள் (பாத்திரங்கள்) களம், அமைப்பு, காலம், நிகழ்வுகளில் பலவும் என ஏராளமான விசயங்கள் ஒன்றாக இருப்பதால் இயல்பாக இரண்டு பிரதிகளையும் அருகருகாக வைத்துப் பார்க்கும் சூழல் உருவாகிறது. புதியதோர் உலகத்தில் பல பாத்திரங்கள் புனைபெயரில் உள்ளனர். உதாரணமாகச் சந்ததியார் அதில் கலாதரனாக வருகிறார். குமிழியில் சந்ததியாராகவே வருகிறார். புதியதோர் உலகத்தில் செயலதிபர் அல்லது பெரியய்யாவாகச் சித்திரிக்கப்படும் உமாமகேஸ்வரன் இங்கே உமாமகேஸ்வரனாகவே குறிப்பிடப்படுகிறார். இப்படிப் பல பாத்திரங்கள் குமிழியில் மெய் அடையாளத்தோடு நேரடியாக வருகின்றன.

ஆனால், இரண்டுக்குமிடையில் வேறுபட்டிருப்பது காலமுதிர்வு. ரவி ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 60 களை நெருங்கிய வயதில் இந்தப் பிரதியை நம்முன் வைக்கிறார். இது ஏற்கனவே எழுதப்பட்டிருக்கவும் கூடும். இருந்தாலும் ரவியின் 50 களுக்குப் பிறகே இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. இந்தக் கால இடைவெளியில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், சிந்தனைகள் குமிழியில் வலுவாகத் தெரிகின்றன. வயதின் முதிர்வும் இதில் சேர்த்தி. என்பதால்தான் குமிழி செழிப்பாக வந்திருக்கிறது.

குமிழி ஒரு நாவலா? நல்லதொரு இலக்கியப்பிரதியா? அல்லது போராட்ட வரலாற்றுப் பதிவா? அல்லது ரவி என்ற முன்னாள் இயக்க உறுப்பினர் (போராளி) ஒருவருடைய சாட்சியமா? அல்லது இந்தக் காலம் கோருகின்ற கற்றுக் கொண்ட பாடங்களுக்கான முன்மாதிரி ஆவணமா? அல்லது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றா? இவற்றுக்கு அப்பாலான மெய்யுள் வடிவமா?

இதைக்குறித்த கேள்விகளும் தூண்டல்களும் நமக்குள் உண்டாக்கப்போகின்ற விவாதங்கள் எவையாக இருக்கப்போகிறது?

(தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.