நீர் நிரப்பும் புதினமான கிணறு – சிக்மலிங்கம் றெஜினோல்ட்

கிணற்றுக்குள்ளிருந்து தண்ணீர் எடுப்பது ஒன்றும் புதினமில்லை. ஆனால், கிணறுகளுக்குள் தண்ணீர் நிரப்புவது புதினம். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால், அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

இதென்ன முட்டாள் தனமான வேலையாக இருக்கே! என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். இது வேறு எங்கும் இல்லை. கிளிநொச்சியில்தான் நடக்கிறது.

கிளிநொச்சி நகருக்கு அண்மையாக உள்ள அம்பாள்குளத்தில் உள்ள சுலோசனாவின் வீட்டில் மூன்று லட்சம் ரூபாய் செலவழித்துக் கட்டப்பட்ட கிணற்றில் நீரில்லை. இவ்வளவுக்கும் இந்தக் கிணற்றுக்கும் அம்பாள்குளத்துக்குமிடையிலான தூரம் 300 மீற்றர்தான். இவ்வளவு அண்மையில் குளம் இருக்கும்போது எப்படிக் கிணற்றுக்குள் தண்ணீரில்லாமல் போனது என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். சுலோசனாவின் வீட்டில் மட்டுமல்ல, வசந்தராஜாவின் வீட்டுக் கிணற்றிலும் நீரில்லை. அப்படியே ரகுநாதன், மாயழகு, கணேசு, நீக்கிலஸ்பிள்ளை, போலம்மா, மாயாண்டி எல்லோருடைய கிணறுகளும் வரண்டு காய்ந்தே கிடக்கின்றன.

என்ன செய்வது? குளத்து நீரை, தேக்கி வைக்க வேண்டிய அளவிலும் விடக்குறைவாக வைத்திருக்க முற்பட்டதன் விளைவே இது. அதாவது, நீர் முகாமைத்துவத்தில் உள்ள தவறே இதற்குக் காரணம். இந்த மாதிரியான செயற்பாடுகளால்தான் கிளிநொச்சியில் உள்ள பல கிணறுகள் இந்தக் கோடையில் காய்ந்து போய்க்கிடக்கின்றன. விவேகானந்தநகர், உதயநகர், செல்வாநகர், மலையாளபுரம், செல்லபுரம், முறிப்பு, சாந்தபுரம், பொன்னகர், அறிவியல்நகர், அம்பாள்குளம், ஆனந்தநகர், கனகபுரம் என்று பல கிராமங்கள் இன்று வரட்சியில் துவண்டுபோய்க்கிடக்கி்ன்றன. இங்கே உள்ள தென்னை, மா, பலா போன்ற வான்பயிர்கள் கூட வாடிச் சாகின்றன. பூங்கன்றுகளின் கதையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பக்குவம் பார்த்து கஸ்ரப்பட்டு வளர்த்த தென்னைகள் எல்லாம் வட்டுச் சரிந்து பட்டுப்போகின்றன.

வேறு வழியில்லாமல் சனங்கள் காசு கொடுத்துத் தங்கள் கிணறுகளுக்குத் தண்ணீரை நிரப்புகிறார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்த காலம் போய் இப்பொழுது கிணற்றுக்குத் தண்ணீரை நிரப்பும் விசித்திரமான காலம் வந்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்று கிளிநொச்சி சிந்தனைக் குழாத்தின் சந்திப்பொன்றின்போது நீர்ப்பாசனப் பொறியாளரும் கிளிநொச்சி –  பொறியியற் பீடத்தின் விரிவுரையாளருமான சிவகுமாரிடம் கேட்டோம். அவர் சொன்னார், “சரியான நீர்க்கொள்கையும் நீர்முகாமைத்துவமும் இல்லாதிருப்பதே இதற்குக் காரணம்” என்று. “பயிர்ச்செய்கைக்கான நீர், குடிநீர்த்தேவைக்கான நீர், பிற தொழிற்துறைகளுக்கான நீர் என நீர் முகாமைத்துவம் திட்டமிடப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும். முக்கியமாக நிலத்தடி நீர்ச் சேகரிப்பைப் பற்றிய கவனமிருக்க வேணும். இதில் நீர்ப்பாசனத்திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, நீர் முகாமைத்துவத் திணைக்களம், விவசாயத்திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம் எனச் சம்மந்தப்பட்ட அதிகார நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்த நீர்ப்பங்கீட்டுக் கொள்கையை வகுப்பது அவசியம். முக்கியமாக பொருத்தமான நீர்க்கொள்கை உருவாக்கப்பட வேண்டும்” என்றார் அவர் மேலும்.

உண்மைதான். கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் ஒன்பதுக்கு மேற்பட்ட நீர்ப்பாசனக்குளங்கள் உண்டு. வன்னிமுழுவதிலும் நாற்பதுக்கும் அதிகமான குளங்கள் உள்ளன. கனகராயன் ஆறு, கலவரப்பாறு, மண்டக்கண்ணாறு, குடமுருட்டியாறு, பாலியாறு, பறங்கியாறு, பேராறு, பிரமந்தனாறு, நெத்தலியாறு என்று ஏராளம் ஆறுகள் வேறுண்டு. மாரியில் வெள்ளம் குளங்களை நிரப்பியபிறகு, வான்பாய்ந்து புரண்டோடி, ஊர்களை மேவி, வயல்களை மேவிக் கடலில் போய்ச் சேருகிறது பெருமளவு தண்ணீர். இதில் வெள்ள அனர்த்தம் வேறு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து அதற்கான இழப்பீடும்  (நிவாரணம்) வழங்கப்படுகிறது. ஆனால், கோடையில் சனங்கள் குடிநீருக்கே ஆலாய்ப்பறக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் இதுதான் கதை. மாரியில் வெள்ளத்தில் மூழ்குவதும் பெருமளவு நீரைக் கடலுக்கு விடுவதும். கோடையில் தண்ணீருக்குள் தவிப்பதுமாக.

ஒரு அறிவார்ந்த சமூகத்தில் இந்த மாதிரியான அவலை நிலை நீடிக்குமா?

இதற்குள்தான் அபிவிருத்தியைப் பற்றிப் பெருமெடுப்பில் பேசப்படுகிறது. ஆயிரமாயிரம் அபிவிருத்தித்திட்டங்கள் வந்து போகின்றன. இந்த அபிவிருத்திப் பேச்சுகளோடும் அதியற்புதமான திட்டங்களோடும் அமைச்சர்கள் வருகிறார்கள். போகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்ற பேரில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என்று வேறு ஏராளம் பேர் பெருங்கதையாடல்களோடு உள்ளனர்.

ஆனால், ஊருக்குள் கிணறுகளில் தண்ணீரில்லை. பல இடங்களிலும் குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கிளிநொச்சியில் மட்டுமல்ல, தீவுப்பகுதியில், வடமராட்சியில், வலிகாமம் மேற்கில், முத்தையன்கட்டில், மல்லாவியில், வலையன்கட்டில், மன்னாரில், வவுனியாவின் சில கிராமங்களில் எனப் பல இடங்களிலும் தண்ணீர்ப்பிரச்சினை உள்ளது.  இதைப்பற்றிப் பேசினால், உடனடித்தீர்வாக தண்ணீரை பவுசரில் கொண்டு வந்து கிணற்றை நிரப்பலாம் என்ற மகத்தான ஆலோசனை வழங்கப்படுகிறது. அப்படித்தான் நடந்து கொண்டுமிருக்கிறது.

இந்தத் தீராத தண்ணீர்ப்பிரச்சினையால் சனங்கள் வேறுவழியில்லாமல்  குழாய்க்கிணறுகளையே அமைக்க வேண்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் குழாய்க்கிணறுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. குழாய்க்கிணறுகளை அமைக்கும்போது அக்கம் பக்கத்தில் உள்ள சாதாரண கிணறுகளில் நீர் வற்றிப் போகிறது. இது அந்தக் கிணறுகளைக் கைவிட வேண்டிய நிலைக்குள்ளாக்குகிறது. ஆகவே இதற்குரிய தீர்வு குழாய்க்கிணறுகளில்லை. ஏனெனில், குழாய்க்கிணறுகள் நிலத்தின், நீரின் புதைகுழிகளே. அப்படியென்றால் நாங்கள் இந்த நீர்ப்புதைகுழிகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா? அபிவிருத்தி என்பது நீர்ப்புதைகுழிகளை அமைப்பதையும் உள்ளடக்குகிறதா?

இந்தப் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தத்தைச் சாட்டாகச் சொல்லிச் சமாளிக்க முடியாது. அல்லது இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 20 ஐச் சொல்லித் தப்பவும் முடியாது.

இது மிக இலகுவாகத்தீர்க்கக்கூடிய ஒரு விசயம். மிக அவசியமாகவும் மிக வேகமாகவும் தீர்க்கப்பட வேண்டியதொரு பிரச்சினை. இதற்கு உள்ளுர் மட்டத்திலேயே தீர்வைக்காண முடியும். விரிவுரையாளர் சிவகுமார் சொன்னதைப்போல சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலமாக இதற்குத் தீர்வைக் காண முடியும். மாவட்ட மட்டத்திலும் மாகாண நிலையிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைளை மேற்கொண்டால் போதும். இதற்குரிய ஏற்பாடுகளை – தூண்டல்களை – செய்து இந்தப் பணியை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குரியது. முக்கியமாகச் சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்குரியது.

ஆனால், இதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்பதே மக்களுடைய கேள்வி. ஏனென்றால், ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான  குடிநீரை கிளிநொச்சியில் இருந்தே பெற முடியாதிருக்கிறது. இதற்கான ஒருமைப்பாட்டைக் காணமுடியாதுள்ளது. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுவித்திட்டத்தின் கீழ் இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது. இருந்தும் நீர்ப்பங்கீடு நடைமுறைக்கு வரவில்லை.

இதற்குச் சொல்லப்படும் காரணம் ஏற்கனவே பலரும் அறிந்ததே. அப்படி இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கப்படுமாக இருந்தால் கிளிநொச்சியின் விவசாயச் செய்கை பாதிக்கப்படும். அது நெல் விவசாயத்தில் தங்கியிருக்கும் விவசாயிகளைப் பாதிக்கும் என்பதாகும். இதற்கு மாற்றுத்திட்டத்தை – மாற்றுப் பொறிமுறையையும் அறிமுகமாக்குவதாக தெரிவிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் அதை உத்தரவாதப்படுத்தியுமிருந்தன. நெல் விவசாயத்தில் மட்டும் தங்கியிருக்காமல் குறைந்தளவு நீர்ப்பயன்பாட்டில் கூடுதலான மாற்றுப் பயிர்ச்செய்கை முறையைப் பின்பற்றுமாறு. ஆனால், இதை மேற்கொள்வதற்கு பெரும்பாலான விவசாயிகள் தயாரில்லை. அப்படி விவசாயிகள் தயாராக இருந்தாலும் அதற்கு இடமளிக்காத வகையிலேயே அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். நீர்ப்பிரச்சினை, மாற்றுப் பயிர்ச்செய்கை, புதிய அணுகுமுறை போன்றவற்றுக்கு சமூகத்தை முன்னகர்த்தத் தடையாக இருப்பதே இன்று நம்முடைய தமிழ் அரசியல்வாதிகள்தான். தங்களுடைய அரசியல் நலன்களுக்காக இதை அவர்கள் செய்கிறார்கள். அதாவது சமூகத் தேவைகள், நிலைமைகள், பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்குப் பொருத்தமான தீர்வைக் காண்பதற்குப் பதிலாக பிரச்சினைகளை மேலும் மேலும் உருவாக்கி வளர்ப்பதையே இவர்கள் தங்களுடைய அரசியல் வழியாகப் பின்பற்றுகிறார்கள்.

இதுவரையிலும் காலபோகம், சிறுபோகம் என்று இரண்டு போகச் செய்கை செய்யப்பட்டு வந்த நெற்செய்கை இந்த ஆண்டு மூன்று போகமாக மாறுவதற்கான முன்னோட்டம் நடந்துள்ளது. இது இடைப்போகமாகும். வன்னேரிக்குளத்தில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி இது அடுத்த ஆண்டுகளில் ஏனைய குளங்களின் கீழும் நடக்கக்கூடிய ஏதுநிலைகளே காணப்படுகின்றன.

வன்னேரிக்குளத்தின் பாசனத்தில் மூன்று போகச் செய்கையைச் செய்ய முடியும் என்றால், முறிப்புக்குளத்தின் கீழ் ஏன் அப்படிச் செய்ய முடியாது என்று இப்போது பல விவசாயிகளும் கேட்கத் தொடங்கி விட்டார்கள். இரணைமடுவில் இரண்டு போக அறுவடையும் முடிந்த பிறகு இந்த ஆண்டு வரையறுக்கப்பட்ட அளவில் சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கான நீர் வழங்கங்கப்பட்டது.

இதெல்லாம் குளத்தில் அடிப்படையாகச் சேகரித்து வைத்திருக்க வேண்டிய நீரின் அளவு மட்டத்தைக் குறைப்பதாகவே அமையும். அடியொட்ட இறைப்பது என்று சொல்வார்களே அப்படி குளத்தில் இருக்கும் நீரை அடியொட்ட எடுப்பதே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் மேலதிகமாக இருந்தால் அதை யாழ்ப்பாணத்துக்குக் கொடுக்க வேண்டி வரும் என்ற உள்நோக்கமும் இதற்குள் செயற்படுகிறது. யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீரைக் கொடுப்பதா இல்லையா என்பது தனியான பிரச்சினை. ஆனால், அதற்காகக் குளத்தில் நீரை முழுவதுமாக எடுக்கக் கூடாது. அது நிலத்தடி நீர்ச் சேகரிப்பில் பாதிப்பை உண்டாக்கும். குளத்தின் நிலப்படுகையையும் சிதைத்து விடும். சூழலில் உள்ள மரங்கள், காடு, கால்நடைகள், பறவைகள் போன்ற உயிரினங்கள் போன்ற அனைத்தையும் அழித்து விடும். ஆகவே இது ஒரு முட்டாள்தனமான அழிவு வேலையாகவே போய் முடியும்.

எனவே உடனடியாக இதற்குப்பொருத்தமான தீர்வைக் காண வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.