ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சர் மரணம்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்து யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து போனது என்று இரானிய அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியாளர்கள் திங்கள்கிழமை காலை சம்பவ இடத்தை அடைந்தனர். அப்போது ‘நிலைமை சரியில்லை’ என்று இரானின் ரெட் கிரசென்ட் சொசைட்டியின் தலைவர் கூறியிருந்தார்.

இந்த விபத்து நடந்த இடத்தில் வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க துருக்கி தனது ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) அனுப்பியது. ஓரிடத்தில் ‘வெப்ப மூலம்’ கண்டறியப்பட்ட படங்களை துருக்கி செய்தி முகமை ‘அனடோலு’ பகிர்ந்துள்ளது.

‘வெப்ப மூலம்’ என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நெருப்பு அல்லது அதிக வெப்பம் காணப்படுவதாகும். அதாவது ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் போது அதிலிருந்து எழும் தீ அல்லது புகையை இது குறிக்கிறது.

துருக்கிக்கு கிடைத்த இந்தத் தகவல் இரானுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இரவில் ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் ‘அனடோலு’ வெளியிட்டது. ஓரிடத்தில் கரும்புள்ளி தெரிவதை அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.