காற்றுக் கொந்தளிப்பால் ஆட்டங்கண்ட கத்தார் ஏர்வேஸ் விமானம்; 12 பேர் காயம்.

காற்றுக் கொந்தளிப்பால் டோஹாவிலிருந்து அயர்லாந்துக்குச் சென்றுகொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் ஆட்டங்கண்டது.

இதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக மே 26ஆம் தேதி டப்லின் விமான நிலையம் தெரிவித்தது.

இதற்கிடையே, குறித்த நேரத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமானம் கியூஆர்017 சுமார் 20 விநாடிகளுக்கும் குறைவான நேரத்திற்கு ஆட்டங்கண்டதாகக் கூறப்படுகிறது.

துருக்கியின் வான்வெளியில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பயணிகளுக்கு உணவு, பானச் சேவை வழங்கப்பட்டது.

அப்போது காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டு விமானம் ஆட்டம் கண்டதாக அயர்லாந்து தொலைக்காட்சி நிறுவனம் ‘ஆர்டிஇ’, டப்லின் விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளிடமிருந்து அறிந்துவந்தது.

பயணிகள் அறுவருடன் விமானப் பணியாளர்கள் அறுவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஐந்து நாள்களுக்கு முன்புதான் லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், காற்றுக் கொந்தளிப்பால் ஆட்டங்கண்டது.

அதில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் உயிரிழந்ததுடன் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.