அதிர்ச்சி தரும் பாரிஸின் புறநகரான நுவாசி – லூ- செக் கொலை வெறியாட்டம்

பாரிஸின் புறநகரான நுவாசி – லூ- செக்கில் (Noisy-le-Sec) நிகழ்ந்த உள் குடும்ப உயிரிழப்புகள் அந்தப்பகுதியில் மட்டுமன்றி பிரான்ஸ் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பத்து வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் கூட்டாகக் கொலையுண்ட சம்பவம் குறித்து நுவாசி- லூ- செக் நகரின் மேயர் ஒலிவியர் சறாபேரூஸ் (Olivier Sarrabeyrouse) அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டிருக்கிறார்.

“அமைதியான பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை தன்னால் நம்ப முடியாதுள்ளது” என்று மேயர் தனது ரூவீற்றரில் பதிவிட்டிருக்கிறார்.

அண்மையில் மேயராகப் பதவி ஏற்பதற்கு முன்னரான காலத்தில் அந்தச் சிறுவர்கள் சிலரது பாடசாலைத் தலைமை ஆசிரியராகத் தான் பணிபுரிந்ததை மேயர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள், குடும்பத்தவர்கள், அயலவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக மனநல உதவி மையம் ஒன்று (cellule psychologique) உடனடியாகத் திறக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பொபினி(Bobigny) நீதி நிர்வாகப்பிரிவுக்குட்பட்ட புலன் விசாரணையாளர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர். கொலைகளுக்கான மூல காரணம் என்ன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

புலம் பெயர்ந்து வசிக்கும் தமிழரான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இந்தப் படுகொலைகளைப் புரிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தனது மனைவி, கைக்குழந்தை உட்பட இரு குழந்தைகள் மற்றும் அவரது மூத்த சகோதரியின் இரு குழந்தைகள் (5, 9வயது) ஆகிய ஐவரையுமே கத்தி மற்றும் சுத்தியல் என்பவற்றால் தாக்கிக் கொலை செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.18 மாதங்களேயான தனது கைக்குழந்தையைக் கொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர் இருந்திருக்கிறார்.

முதலில் தனது வீட்டுக்குள் வைத்து மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அருகே மற்றொரு வீட்டில் வசிக்கும் தனது சகோதரி குடும்பத்தினரை அங்கு வரவழைத்து அவர்களையும் தாக்கியுள்ளார்.

சகோதரியும் அவரது கணவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களது ஐந்து மற்றும் 9 வயதான இரு குழந்தைகள் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். 13 ,15 வயதுகளையுடைய ஏனைய இரு வளர்ந்த பிள்ளைகள் ஒருவாறு தமது மாமனாரின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

அவ்வாறு காயத்துடன் தப்பியோடிய சிறுவர்களில் ஒருவனே அருகே அமைந்திருந்த மது அருந்தகம் ஒன்றுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளான். தனது மாமனார் எல்லோரையும் தாக்கிக் கொல்கின்றார் என்ற தகவலை அச்சிறுவனே அங்கிருந்தோரிடம் முதலில் தெரியப்படுத்தி உள்ளான்.
அந்த மது அருந்தகத்தின் உரிமையாளரான மொஹமெட் ஹெமானி (Mohamed Hemani) என்பவர் ஊடகம் ஒன்றிடம் கூறுகையில் ,

“13 வயதான சிறுவன் பதற்றத்துடன் ஓடி வருகிறான், தலையில் இரத்தம் வழிகிறது. மாமா என்னை சுத்தியலால் தாக்குகின்றார் என்று அவன் கதறுகிறான்”

“அவனுக்குப் பின்னால் யாரும் வரவில்லை. நான் அவனைப்பாதுகாத்துக் கொண்டு பொலீஸாருக்கும் அவசர சேவையினருக்கும் அழைப்பு விடுத்தேன்”

புற்றி நுவாசி(Petit-Noisy) என்னும் பகுதியில் இயங்கும் அந்த அருந்தக உரிமையாளர் இப்படி விவரிக்கிறார்,

சம்பவங்களை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த வேறு சிலரும் இவ்வாறு தமது அனுபவங்களை ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

கொலைகளைப் புரிந்த இளம் குடும்பஸ்தர் மிகவும் அமைதியானவர் என்று அயலவர்கள் கூறுகின்றனர். இப்படிக் கோரமாகக் கொலைகளைப் புரிந்தாரா என்பதை அவர்கள் நம்ப மறுக்கின்றனர்.

அவர்களுக்குள் குடும்பப் பிணக்குகள் இருப்பதாகத் தாங்கள் அறியவில்லை என்கின்றனர். உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த அவர் கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்துக்கு ஆளானவர் போன்று காணப்பட்டார் என்ற ஒரு தகவலும் அயலவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
கொலைகளைப் புரிந்த அவர் தன்னைத் தானே கொல்லும் நோக்குடன் உடலில் பல இடங்களில் வெட்டிக் காயப்படுத்தியிருக்கிறார். அவசர சேவையினர் அவரை மீட்டபோது அவர் சுய நினைவிழந்து கோமா நிலையில் கிடந்துள்ளார். தற்சமயம் பாரிஸின் புறநகரப் பகுதி மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

புலம் பெயர் தமிழ் சூழலில் உள்குடும்பங்களில் நிகழும் இத்தகைய கொலைகள் அதிகரித்துவருகின்றன. பெற்றவர்களே தமது சிறு பிஞ்சுகளை கோரமாகக் கொல்லும் அளவுக்கு நிலைமை செல்கிறது.

ஏற்கனவே நெருக்கடிகள், மன அழுத்தங்கள் மிகுந்த புலம்பெயர் வாழ்வு மேலும் சிதைவடைந்து செல்கின்றதா?

கொரோனா வைரஸ் முடக்கங்களின் பின்னர் நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும் நெருக்கடிகளும் அவை உருவாக்கும் மன அழுத்தங்களும் சிலரை இது போன்ற குரூரமான முடிவுகளை நோக்கித் தள்ளிவிடக் காரணமாகின்றனவா?
லண்டன் உட்பட தமிழர்கள் மத்தியில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த இதுபோன்ற உள் குடும்பப் படுகொலைச் சம்பவங்களுக்கான காரணிகளைக் கவனத்தில் எடுக்காமலேயே அவற்றை கடந்த போய்க் கொண்டிருக்கின்றோமா?

“மிருக வெறி” என்று மேலெழுந்தவாரியாகக் கருத்துச் சொல்லிவிட்டுப் போகின்ற ஒரு விவகாரமா இது? (மிருகங்கள் தம் குட்டிகளைக் கொல்வதில்லை) குற்றம் கண்டுபிடிக்கும் சட்டரீதியான விசாரணைகளுக்குப் புறம்பாகச் சிலர் சமூக நோக்கு சார்ந்த இத்தகைய முக்கிய கேள்விகளையும் முன்வைக்கின்றனர்.

 

  • பாரீசிலிருந்து குமாரதாசன்

Leave A Reply

Your email address will not be published.