வேலையற்ற பட்டதாரிகள் காயா பழமா? : சிக்மலிங்கம் றெஜினோல்ட்

வேலையற்ற பட்டதாரிகள் …..
காயா பழமா?   –    சிக்மலிங்கம் றெஜினோல்ட்

“பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுவோர் முதலில் சேர்ந்து கொள்வது வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில்தான்” என்று சொல்வார் ஒரு நண்பர். இதை அவர் நகைச்சுவையாகச் சொல்கிறாரா? அல்லது வேதனையோடு சொல்கிறாரா? அல்லது கோபத்தோடு சொல்கிறாரா? என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு.

உண்மையில் இந்த மூன்றும் இதில் கலந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் சுயமாக வேலைகளைத் தேடிக் கொள்வது அல்லது உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக அரசாங்கமே வேலையைத் தரவேண்டும். அதுவும் அரச உத்தியோகமாக இருக்க வேண்டும். அதுவும் சொந்த மாவட்டத்திற்குள் அல்லது தாமிருக்கும் மாகாணத்துக்குள்ளேயே தரப்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பதை (வலியுறுத்துவதை அல்லது அடம்பிடிப்பதை)  என்னவென்று சொல்வது? இதைச் சற்று ஆழமாக யோசித்தால் உங்களுக்கே சிரிப்பு வரும். ஏனென்றால் படித்தவர்களே இப்படிச் சிந்திக்கிறார்கள். அதிலும் எங்கும் செல்வோம். எதிலும் வெல்வோம் என்று துணிச்சலோடு எதற்கும் தயாராக முன்னிற்க வேண்டிய இளைய தலைமுறையினர் இப்படி ஊருக்குள் குதிரையோட்டுவதற்காகக் குறுகிச் சிந்திப்பதையிட்டுச் சிரிப்புத்தானே வரும்!  பரந்து விரிந்து சிந்திப்பதற்குப் பதிலாகக் குழந்தைப் பிள்ளைத்தனமாக இவர்கள் யோசிக்கிறார்களே! இவர்களுடைய உலக ஞானம் இவ்வளவுதானா? என்று கேள்வியும் கூடவே எழும்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், பல்கலைக்கழகத்தில் படித்த பிறகும் இந்தப் பிள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கவில்லையே. வயது ஏறிக்கொண்டிருக்கிறதே. திருமணத்தைக் கூடச் செய்வதற்குப் படித்தும் தொழிலற்றிருக்கிறார்களே என்று வேதனை ஏற்படும். பெரும்பாலான பட்டதாரிகளுடைய பெற்றோரின் பெருங்கவலை இது. அரசாங்கம் எப்போது படியளக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடும் கவலையோடும் இவர்கள் (குடும்பமாகவே) காத்திருக்கிறார்கள்.

இதை வேறொரு விதமாகப் பார்த்தால், இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரையில் படித்துத் தேறிய பிறகும் வேலைக்கும் அரசாங்கத்தையே தஞ்சமென்று நம்பிக் காத்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தவறு? என்று புரியும். இது அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் மேலதிக சுமையல்லவா! பல்கலைக்கழகக் கல்வி என்பது அதிலே படித்துப் பட்டதாரிகளாகும் ஒவ்வொரு இளையோரையும் துறைசார் அறிவு, ஆற்றல், ஆளுமை, வினைத்திறன், தன்னம்பிக்கை, சமூகப் பங்களிப்பு, அதற்கான பொறுப்புணர்வு என்பற்றுக்கான வளமூட்டலையல்லவா செய்து விடுகிறது? அப்படியென்றால், இவற்றைப் பெற்றவர்கள் எப்படி இவற்றின் அடிப்படையில் செயற்படாமல் அரசாங்கத்திடம் ஒரு உத்தியோகத்தைத் தாருங்கள் என்று கேட்க முடியும்? இதிலே என்ன நியாயமிருக்கிறது? சமூகத்துக்கும் நாட்டுக்கும் தாங்கள் பெற்றுக்கொண்ட இலவசக் கல்வியின் பயனை, வளத்தை செலுத்தாமல் இப்படி அடம் பிடிப்பது சரியானதா? என்ற கோபம் ஏற்படும்.

உண்மையில் இதிலே நாம் மேலே குறிப்பிட்டுள்ள முதலாவதையும் இரண்டாவதையுமே இணைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், “வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்” என்பதே சிரிப்புக்குரிய ஒன்றாகும் . பட்டதாரி ஒருவர் வேலையற்றிருக்கிறார் என்றால் அவர் பட்டதாரி இல்லை என்றே அர்த்தமாகும். பட்டதாரி என்றால், அவர் சுயாதீனமாக இயங்கக் கூடிய ஆற்றலுள்ளவர். அறிவுள்ளவர். திறனுள்ளவர், துணிச்சலுள்ளவர். ஆளுமையுடையவர். தன்னம்பிக்கை மிக்கவர் என்றே பொருளாகும்.

இதற்கு மாறாக ஒருவர் இருந்தால் அவரை எப்படி நாம் பட்டதாரி என்று கொள்ள முடியும்? இவ்வளவும் இல்லாத ஒருவரை அல்லது இவை இல்லாதோரை எப்படி நாட்டின் நிர்வாக இயந்திரத்தில் – அரச உத்தியோகத்தில் இணைத்துக் கொள்ள முடியும்? துறைசார் பொறுப்புகளை இவர்களுக்கு எப்படி வழங்குவது? மட்டுமல்ல, இவ்வளவு படித்த பிறகும் கையைப் பிடித்து இந்தா உனக்கு இதுதான் வேலை என்றுதான் கொடுக்க வேண்டும் என்றால், இதையிட்டுச் சிரிப்பதா அழுவதா?

இந்த மாதிரியான தடுமாற்றங்கள், தன்னம்பிக்கையீனங்களாலேயே படித்த துறைக்கு மாறான துறைகளில் இவர்களில் பலரும் வேலை (அரச உத்தியோகத்தை) பார்க்க வேண்டியுள்ளது. சங்கீதத்துறையில் படித்தவர் சுகாதாரத் திணைக்களத்தில் வேலைசெய்கிறார். ஓவியத்துறைப்பட்டதாரி விவசாயத்திணைக்களத்தில் உத்தியோகத்தராக இருக்கிறார். விவசாயத்துறையைப் படித்தவர் நிர்வாகத்துறையில் முகாமைத்துவ உதவியாளராக வேலை செய்கிறார். முகாமைத்துவம் படித்தவர் எந்தத்துறைக்கு, எந்தத் தொழிலுக்குப் போவதென்று தெரியாமல் ஏதோ கிடைக்கும் தொழிலுக்குப்போவோம் என்று நீர்ப்பாசனத்திணைக்களத்தில் இணைகிறார்.

2வது நாளாகவும் தொடர்கின்றது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் | Virakesari.lk

அரசும் பொருத்தமானவர்களுக்கென்று தகுதியைப் பார்த்து வேலைகளை வழங்குவதில்லை. தனக்கு இவர்களால் ஏற்படும் அரசியல் நெருக்கடியைத் தணித்துக்கொள்வதற்காக ஏதோ சமாளித்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் ஆட்களை கண்டபாட்டுக்கு நியமித்து விடுகிறது. இவர்களைப் பகிர்ந்து நியமனங்களை வழங்குவதென்பது அதிகாரிகளுக்குப் பெரிய சவால். தொடர்ச்சியாகப் பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கி வழங்கி வழங்கி வழங்கி… இப்பொழுது அலுவலகங்களில் இடமும் இல்லை. கதிரையும் இல்லை என்ற நிலை வேறு. யாருக்கு எந்த வேலையைப் பகிர்ந்து கொடுப்பது என்று தங்களுக்குத் தெரியவில்லை என அதிகாரிகள் அழுகிறார்கள். எலிகள் கூடினால் வளையெடுப்பு நடக்காது என்ற மாதிரி ஆட்கள் கூடினால் வேலை நடப்பதில்லை என்ற பிரச்சினை வேறு தோன்றியுள்ளது. இதனால் “முன்பு வேலையற்ற பட்டதாரிகளாக இருந்தவர்கள், உத்தியோகம் கிடைத்த பிறகு வேலையில்லாப் பட்டதாரிகளாக சம்பளத்தோடிருக்கிறார்கள்” என்கிறார் ஒரு முதுநிலை அதிகாரி.

இது இப்படியென்றால், மறுபக்கத்தில் இந்தப் பட்டதாரிகள் வேலைக்காக அரசியல்வாதிகளுக்குப் பின்னே அலைவதிருக்கிறதே…அதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் தேர்தல் காலங்களில் இவர்களை நீங்கள் பார்க்க வேண்டும். அதுவரையிலும் (பல்கலைக்கழக மாணவர்களாகவும் மாணவர் அமைப்புப் பிரதிநிதிகளாகவும் இருக்கும் வரையிலும்) வீராவேசமாக தமிழின அரசியல் உணர்வோடிருந்தவர்கள் எல்லாம் பிறகு அரசுக்குச் சார்பான அரசியற் தரப்புகளின் வாசலில் போய் நிற்கிறார்கள். கேட்டால், அது அப்ப இது இப்ப என்று சொல்வார்கள். மேலும் வாழ்க்கை என்று வந்து விட்டால் கொள்கை கோட்பாடுகளையெல்லாம் பார்க்க முடியாது என்ற தத்துவ விளக்கம் வேறு வருகிறது.

படித்துப் பட்டம் பெற்ற பிறகு கையாலாகதவர்களைப்போல இப்படி அரசியல்வாதிகளுக்குப் பின்னும் கட்சிகளுக்குப் பிறகாலும் கெஞ்சுமாற்போல அலைவது எவ்வளவு ஆற்றற்குறைவானது. அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுவது மிக மோசமானது. இப்படி அரசியல்வாதிகள், கட்சிகளின் வழியாக நியமனத்தைப் பெற்றால் பிறகு எப்படி முறையற்ற அரசியல் தலையீடுகளை சுயாதீனமாகவும் திராணியோடும் எதிர்க்க முடியும்? எப்படி தலையீடுகளைத்தட்டிக் கேட்கவியலும்?

கொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் | Athavan News

இதற்கெல்லாம் என்ன காரணம்?

  1. அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கையின் தவறு. சரியான பொருளாதாரக் கொள்கை இருக்குமாக இருந்தால் பிற தொழில்துறைகள் நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கும். தொழில் வாய்ப்பும் தொழில் உருவாக்கங்களும் பன்முகமாகப் பெருகியிருக்கும். இவற்றில் இளைய தலைமுறையினரும் பட்டதாரிகளும் பங்கேற்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கும்.
  1. பல்கலைக்கழகங்கள் சுயமாகச் செயற்படக் கூடிய ஆளுமையை இந்தப்பட்டதாரிகளிடையே உருவாக்கவில்லை. அத்தகைய சிந்தனைப்போக்கினை வளர்க்கவுமில்லை. தமிழில் இது இன்னும் மோசமான நிலையில் உள்ளது. உண்மையில் இது பல்கலைக்கழகங்களின் தோல்வியும் வீழ்ச்சியுமாகும். தங்களால் உருவாக்கப்படும் அறிவாளிகள் எந்தத்துறைக்கும் பங்களிப்பைச் செய்யக் கூடிய ஆற்றலர்களாகவும் திராணியுடையோராகவும் சிந்தனையற்றோராகவும் இருக்கிறார்கள் என்றால் அதற்கான பொறுப்பினை பல்கலைக்கழகங்களே ஏற்க வேண்டும். அரசாங்கத்தரப்பில் இது தொடர்பான பொருத்தமான கொள்கை மற்றும் திட்டக் குறைபாடுகளிருந்தால் அதை பல்கலைக்கழங்களும் அவற்றின் புத்திஜீவிகளுமே பேசி, போராடி தீர்வு காணவேண்டும்.
  1. அரச உத்தியோகம் என்றால் அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. சாட்டுப்போக்குகளைச் சொல்லிக் காலத்தை ஓட்டிக் கொள்ளலாம். அத்துடன் நிலையான – நிரந்தரமான உத்தரவாதப்படுத்தப்பட்ட தொழிலும் வருவாயும் உண்டு. ஓய்வு காலத்தில் தமக்கும் குடும்பத்துக்குமாகப் பென்ஸனும் கிடைக்கும். கூடவே இன்னொரு தொழிலை சைற்பிஸினஸாகவும் செய்து கொள்ளலாம்.
  1. அரச உத்தியோகம் என்ற அடையாளம் ஒரு வகையான அந்தஸ்தைத்  தருகிறது என்ற மனப்பாங்கு. அதில் உண்மையும் உண்டு. அதிகாரத்தையும் அதன் வழியான சலுகைகளையும் கையில் வைத்துக் கொள்வதற்கான வழி அரச உத்தியோகத்தில் உள்ளது. இது சௌகரியத்தை வழங்குகிறது.
  1. புதிய தொழில் முயற்சிகள், தொழில்துறை, பொருளாதாரக் கட்டமைப்பு, மனப்பாங்கில் மாற்றம், சமூக அக்கறை, நாட்டுப்பற்று போன்றவற்றை உருவாக்குவதற்கு சமூகங்களின் அரசியற் தலைமைகள் விட்ட, விட்டுக் கொண்டிருக்கும் தவறு. இதில் புலம்பெயர் சமூகத்தினருக்கும் பங்குண்டு. அவர்கள் புதிய முதலீடுகளைச் செய்திருக்க வேண்டும். தொழில் வாய்ப்புகளை உருவாக்கியிருப்பது அவசியம். பொருளாதாரச் சிந்தனையை பரிமாற்றம் செய்திருக்க வேண்டும். சுயசார்புப் பொருளாதாரத்தைக் குறித்த உரையாடல்களையாவது ஆரம்பித்திருக்கலாம்.
  1. புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், செயற்பாட்டியக்கங்கள், ஊடகங்கள் இந்த நிலையைக் குறித்து மாற்றுப் பொறிமுறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். விவாதங்கள், கருத்தாடல்கள், கருத்தரங்குகள், பிற மனப்பாங்கு விருத்திக்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும்.

இப்போது கூட இதையெல்லாம் செய்ய முடியாதென்றில்லை. நிச்சயமாகச் செய்ய முடியும். செய்ய முடியும் என்பதற்கு அப்பால், இவற்றைச் செய்தே தீர வேண்டும். ஆற்றல் மிக்க, அறிவுத்திறனுள்ள இளைய தலைமுறையை சீரழிய விடக் கூடாது.

இறுதியாக ஒரு விசயத்தை இங்கே உதாரணப்படுத்துவது பொருத்தமானது.

ஆயுதப் போராட்டத்தின்போது, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் திறன் பற்றி யாரேனும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நிர்வாகத்திறன், ஒவ்வொரு துறையிலும் துறைசார் நிபுணத்துவம், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகள், துறைசார் கட்டமைப்புகள், அவற்றின் விரிவாக்கம், வளர்ச்சி, மக்கள் நலன் என போராளிகளின் திறனும் ஆற்றலும் அக்கறையும் மேம்பட்டிருந்ததை உணர்வீர்கள். இவ்வளவுக்கும் அந்தப் போராளிகள் ஒன்றும் பெரிய படிப்புப் படித்த பட்டதாரிகளல்ல. பெருந்தொகை நிதியைச் செலவளித்துப் பயிலரங்குகளின் வழியாக தேறியவர்களல்ல. போராட்டத்திற்குள்ளால் வளர்ச்சியடைந்தவர்கள். அவர்களுடைய வெற்றிக்குக் காரணம், மக்கள் மீதான நேசமும் சமூக அக்கறையுமே.

இப்போது புதிதாக நியமனம் பெறும் பட்டதாரிகளை அரசாங்கம் ஏறக்குறைய அந்த வகையிலான முன்பயிற்சியில் – தலைமைத்துவப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்துள்ளது. இது என்ன விதமான பயனைத்தரும் என்பதை இதன்வழி உருவாகுவோர்தான் நிரூபிக்க வேண்டும்.

 

–    சிக்மலிங்கம் றெஜினோல்ட்

Leave A Reply

Your email address will not be published.