அதிகார அரசியல் – சமநிலை அரசியல் : ஒரு சிங்களச் சிறுகதை – கருணாகரன்

அதிகார அரசியல் – சமநிலை அரசியல்
ஒரு சிங்களச் சிறுகதையை முன்வைத்த தமிழ் நோக்கு நிலை அல்லது வாசிப்பு
– கருணாகரன்

சிங்கள எழுத்தாளர் இஸூரு சாமர சோமவீரவின் “திருமதி பெரேரா” என்ற சிறுகதை ஆண்நிலை நோக்கை, பெண்பார்வை சார்ந்து பேசுவது மட்டுமல்ல, மரபுசார்ந்த அதிகாரநிலைப்பட்ட அத்தனை விதங்களையும் நிராகரிக்கும் விளிம்பு நிலை சார்ந்த பார்வையை முன்வைக்கிறது. இந்தக் கதையில் திருமதி பெரேரா மட்டுமல்ல, அதில் வரும் பூனைகள் கூட விளிம்பு நிலையினரின் வாழ்க்கையை அதிகாரத் தரப்புகள் எப்படி நோக்குகின்றன என்றும் சொல்கிறது. உதாரணமாக கதையில் வரும் ஒரு பகுதி – “ப்ளாக்கிக்கு (பூனைக்கு) நேரத்துக்கு ஊசி மருந்து ஏற்றப்படுகிறது. வாலை மீனைச் சோற்றோடு பிசைந்து ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் வழங்கப்படுகின்றது. கிழமைக்கு ஒரு தடவை குளிப்பாட்டப்படுகிறது. பிரதான நுழைவாயிற்கதவை மூடி வைத்து விட்டு, கூட்டின் கதவைத் திறந்து விட்டு வீடு முழுவதும் இஷ்டம் போல நடமாடித் திரிய அனுமதிக்கப்படுகிறது. ஒரு பெண் பூனைக்கு இன்னும் வேறு என்னதான் வேண்டும்?” என்பது இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் நிலையை சிங்களப் பேரினவாதச் சிந்தனையினர் நோக்கும் விதம் இது என்று சொல்கிறது.

බහුතරයක් අතර සුළුතරය වීම අතිශයින් වේදනාකාරීයි' - ඉසුරු චාමර

தமிழ் பேசும் சமூகத்தினருக்கு என்னதான் வேண்டும்? ஒரு பூனைக்குள்ள சாதாரண தேவைகளைப்போல, அவர்களுடைய அபிவிருத்தி, வாழ்க்கைத் தேவைகள் போன்றவற்றை சரிசெய்து விட்டால் போதும். அதற்கு மேல் வேறென்ன வேண்டியிருக்கிறது? என்றே சிங்கள அதிகார வர்க்கம் சிந்திக்கிறது. அல்லது அவர்களுடைய புரிதல் அப்படித்தானுள்ளது.

என்றபடியால்தான் அவர்கள் எப்போதும் (வெட்கமோ கூச்சமோ இல்லாமல்) ஜனநாயகத்தையும் பன்மைத்துவத்தையும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அதற்கு மாறாக (தங்களுடைய) பௌத்த மதத்திற்கும் தங்களுடைய நலன்களுக்கும் மரபுசார் அடையாளங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை என்று வாதிடுகிறார்கள். பிற மதங்களோ, பிற அடையாளங்களோ, பிற தரப்புகளின் உணர்வுகளோ, பிரத்தியேகமான தேவைகளோ பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்று சிந்திக்கிறார்கள்.

இப்பொழுது 20 ஆவது திருத்தம் பற்றிப் பலமான நிலையில் பேசப்படுகிறது. இதற்கு முன்பு “நல்லாட்சி” அரசின் காலத்தில் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிப் பேசப்பட்டது. இரண்டின்போதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் தேவைகள், உணர்வுகள், சுதந்திரம் போன்ற நியாயமான அடிப்படைகளைக் குறித்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையாளர்களின் நோக்கு நிலை குறுகலானதாகவே – சுயநலன் சார்ந்தே உள்ளது. அது மிகச் செறிவாக இந்தக் கதையில் வரும் ப்ளாக்கியை அல்லது பொதுவாகப் பூனைகளைப் பற்றி குறிப்பிடுவதை ஒத்ததாகவே உள்ளது.

மேலும் ஒரு உதாரணமாக – “பல காலங்களாக திருமதி. பெரேரா வாங்கிச் சேகரித்து வைத்த வெள்ளை நிறப் பாவாடைகள், சட்டைகள் ஏராளமிருக்கின்றன. திரு. பெரேரா என்றைக்கும் சாப்பாட்டிலோ, உடுதுணி, ஆபரணங்களிலோ திருமதி. பெரேராவுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. திரு. பெரேரா அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தார். உணவு, பானங்கள், ஆடை, ஆபரணங்கள், வருடத்துக்கு ஒரு தடவை ஒரு சுற்றுப் பயணம், நல்லதொரு வீடு, மின்சார சாதனங்கள். இவையெல்லாம் இருந்தால் அனைத்தும் சம்பூரணமாகி விடும். உண்மையில், ஒரு பெண்ணுக்கு இவை தவிர இன்னும் வேறு என்னதான் வேண்டும்” எனவும்.

ஆனால், இதை நிராகரிப்புச் செய்கிறார் திருமதி பெரேரா. கதையில் பெரேராவின் மனநிலை வெளிப்படுத்தும் மையம் குறிப்பிடுவது அதைத்தான். ஆனாலும் தற்போது அவருடைய (திருமதி பெரேராவினுடைய) அடையாளம் சட்ட அடிப்படையிலும் மரபு நிலைப்பட்ட வழக்கத்தினாலும் “என்னதான் இருந்தாலும் திருமதி. பெரேரா என்பது திரு. பெரேரா செத்துப் போனாலும் கூட மாறாது” என்பது, என்னதானிருந்தாலும் தமிழ்மொழிச் சமூகங்கள் இலங்கையர்கள் என்றே நோக்கப்படுவதாகவும் நோக்கப்படும் என்றுமே வாசிப்புச் செய்ய வைக்கிறது.

அதாவது, திருமதி பெரேராவை அவருடைய முந்திய அடையாளமான “குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன” என்பதை பின்னர், திருமணம் என்ற சட்டரீதியான வலுவினூடாக திருமதி பெரேரா என்ற அடையாளம் விழுங்கி விட்டது. இதுதான் ஒற்றையாட்சி என்ற பதம் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாகக் குறிப்பிடும் மகத்துவமாகும்.

அதற்கு மேல் அவர்கள் (தமிழ் மொழிச் சமூகத்தினர்), “திரு. பெரேராவுடன் சண்டை போட்டுவிட்டு எங்கேயென்றுதான் போவது? இருக்க ஒரு இடம், தொழில் ஒன்று இரண்டுமே இல்லாத பெண்ணொருத்தி பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்வது?” என்ற திருமதி பெராவின் நிலையே தமிழ் மொழிச் சமூகங்களுக்கு இன்றுள்ளது.

இந்தக் கதையிலிருந்து மேலும் ஒன்றைச் சொல்லி விட்டு அப்பால் செல்லலாம். “நேரத்துக்கு தேனீர், நேரத்துக்கு சாப்பாடு, கூட்டிப் பெருக்குதல், தூசி தட்டுதல், துணிகளைக் கழுவி, காய்த்து, மடித்து நேர்த்தியாக அலமாரியில் வைத்தல், சாரங்கள் தனியாக, சட்டைகள் தனியாக, களிசான்கள் தனியாக, உள்ளாடைகள் தனியாக.. இப்படி. திருமதி. பெரேரா சில சிறிய சிறிய விடயங்களில் மாற்றங்களைச் செய்த போதும், தவிடு நீக்காத சிவப்புச் சோறு, சீனி போடாத தேனீர் போன்ற பெரிய பெரிய தீர்மானங்களை எப்போதும் எடுப்பது திரு. பெரேராதான்.” என்பது இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்கள் எந்த அரசியல் தீர்மானங்களையும் எடுப்பதற்கு வலுவற்றவர்கள், உரிமையற்றவர்கள். அதற்கான அதிகார பலம் நியாயத்தின் அடிப்படையில் பார்க்கப்படுவதில்லை. பெரும்பான்மை என்ற நோக்கின் அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஆகவே, இந்த ஒரு கதையே போதும் சிங்கள அதிகாரத்தரப்பினரின் மனநிலை, அரசியல் நோக்கு, இலங்கை அரசியல் சட்டங்கள், நடைமுறை போன்றவற்றை எல்லாம் தெளிவாக்குவதற்கும் விமர்சிப்பதற்குமாக.

බහුතරයක් අතර සුළුතරය වීම අතිශයින් වේදනාකාරීයි' - ඉසුරු චාමරஒடுக்கப்படுவோர் சார்பாகச் சிந்திப்போர் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராகச் சிந்திப்போர் எப்போதும் சரியான நோக்கையே கொண்டிருப்பர் என்பது உலகம் முழுவதிலும் திரும்பத்திரும்ப மெய்ப்பிக்கப்படும் உண்மை. அவர்களுக்கு சாதி, மதம், பிரதேசம், மொழி, இனம், தேசம் என்ற வரையறைகள் கிடையாது. அவர்கள் மேற்சொன்ன அடையாளப் பரப்பிற்குள் ஒரு போதும் தங்களைக் குறுக்கிக் கொள்வதில்லை. அவர்களுடைய சிறகுகள் மிக விசாலமானவை.

போருக்குப் பிந்திய இலங்கைச் சமூகங்கள், பொறுப்புக்கூறுதல், பகை மறப்பு, புரிந்துணர்வு, நல்லிணக்கம், சமாதானத்தை நோக்கி நகர்தல், பன்மைத்துவத்தை ஏற்றல், பல்லினத்தன்மையை அங்கீகரித்தல், அதிகாரத்தைப் பகிர்தல், தீர்வை எட்டுதல் என்றே செயற்பட வேண்டும் என்கிறது வரலாற்றுச் சூழல். இதையே வெளியுலகமும் நிர்ப்பந்திக்கிறது, வலியுறுத்துகிறது. இது போருக்குப் பிந்திய கோரிக்கை மட்டுமல்ல, போருக்கு முந்திய கோரிக்கையும் தேவையுமாகும்.

ஆனால், அப்போது இதைக் கேட்கக் கூடிய நிலையில் சூழல் இருக்கவில்லை. போரின்போது புலன்கள் அடைபடுகின்றன. அல்லது அடைக்கப்படுகின்றன. அப்பொழுது போரின் சத்தமே பெரிதாகக் கேட்கும். போரில் தென்படும் இலக்கு – குறி – வேறு.

ஆனால், போருக்குப் பிந்திய அனுபவங்கள் இலங்கைச் சமூகங்களை இதைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. சனங்களுடைய நலனுக்கும் தேசத்தினுடைய நலனுக்கும் இது தேவை. அவசியம். கட்டாயம். அரசியல் அதிகாரத்திலிருப்போரும் அதற்காக முனைவோரும் இதைப் புறக்கணிக்கின்றனர். அதாவது, அவர்கள் சனங்களுடைய தேவைகளுக்கும் நலன்களுக்கும் நாட்டின் தேவைக்கும் நலனுக்கும் பாதுகாப்புக்கும் எதிராகவே சிந்திக்கிறார்கள். இவர்கள் முன்பும் இப்படித்தான் சிந்தித்தார்கள். இப்படித் தவறாகச் சிந்தித்தே இந்த நாட்டில் போரை உருவாக்கினார்கள். இப்படியான சிந்தனையின் வழியில் செயற்பட்டே பெரும்போரை வளர்த்தெடுத்தார்கள். அந்தப் போரினால் ஒரு பெரிய இளைய தலைமுறையை குரூரமாகக் கொன்றொழித்தனர். நாட்டின் பொருளாதாரத்தையும் வளங்களையும் இயற்கைச் சூழலையும் அழிவுக்குள்ளாக்கினர்.

இதைத் தவறென்று உணர்வதும் இதற்குப் பொறுப்புச் சொல்லுதலுமே இன்று நாட்டிலுள்ள முதன்மைப் பணியாகும். இதைச் செய்வதே ஏனையவற்றுக்குச் செல்வதற்கான வாசலாகும். இங்கே நடப்பது என்னவென்றால், திறக்க வேண்டிய கதவை மூடி வைத்துக் கொண்டு புதிய பயணங்களைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதுமாகும். அப்படியென்றால் அது எதிர்பார்க்கப்படும் நற்பயன்களைத் தரப்போவதில்லை. என்பதால்தான் தொடர்ந்தும் சமூகப் பதற்றங்கள் நீடிக்கின்றன. சமூகப்பதற்றங்களை தணிப்பதற்கு படையினரோ படை ஏற்பாடுகளோ பதிலாகாது. அல்லது தவறான அரசியல் சட்டங்கள் உதவாது. நம்முடைய வரலாற்று அனுபவங்கள் இதை திரும்பத்திரும்ப வலுவாக உணர்த்துகின்றன. வரலாற்றுஅறிவு மிகப் பிரகாசமாக இந்த உண்மையைக் காட்டுகிறது.

இருந்தும் போதையில் ஆடுவதைப்போல அரசியல் தலைமைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு சனங்களையும் போதையேற்றி ஆட வைத்திருக்கின்றன. இதைப் பார்த்து உலகம் சிரிக்கிறது. நீ வரலாற்றிலிருந்தும் உன் வாழ்க்கையிலிருந்தும் எதைக் கற்றுக் கொண்டாய் என்று கேட்கப்படும் கேள்விக்கு நம்முடைய பதில் என்ன? பகைக்குப் பகை. பழிக்குப் பழி என்ற பழங்குடிச் சமூகத்தின் வழிதானா நம்முடைய தெரிவு.

இலங்கை கல்வியறிவு பெற்ற வீதத்தினரை அதிகமாகக் கொண்ட நாடு. அபிவிருத்தியைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருக்கும்
தேசம். போரினால் களைத்துப் போன மக்களைக் கொண்டது. நிம்மதியாகவும் முன்னேற்றமாகவும் வாழ விரும்பும் மக்களுக்கு
நாம் எதைக் கொடுக்கப்போகிறோம்? எதைச் செய்யப்போகிறோம்? அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தேவையானதை எப்படி
வழங்குவது? என்பதே இன்று நாம் சிந்திக்க வேண்டியது.

அல்லது இந்தத் தேசத்தை நாம் எப்படி நிர்வகிக்கப்போகிறோம்? எப்படி இந்த நாட்டில் அமைதியை உருவாக்கப்போகிறோம்?
முன்னேற்றங்களைக் காணப்போகிறோம்? சமத்துவமாக வாழ்வதற்கான வழிகளை எப்படிக் காணப்போகிறோம்? என்று
சொல்ல வேண்டும். ஆனால், நிச்சயமாக ஒரு உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது பல்லின தேசம் என்பதையும் பன்மைத்துவத்தின் அடிப்படையில் எதையும் அணுக வேண்டும் என்பதையும் நிராகரிக்கும் தோறும் “திருமதி பெரேரா”வின் கதைவழியாக இஸூரு சாமர சோமவீர சொல்வதைப்போல மேல் நிலைச் சிந்தனையாளர்களையும் அதிகாரத்திலுள்ளோரையும் ஏனைய சமூகங்களின் நிராகரிப்புக்குள்ளாக்கும். கேலிப்படுத்தும்.

திரு பெரேராவின் மரணத்தை ரசிக்கும் – விரும்பும் – மனநிலை எப்படி பெரேராவின் மனைவியான திருமதி பெரேராவுக்கு உருவாகிறது என்பதை அத்தனை அரசியற் தரப்பினரும் படித்தறிய வேண்டும். இது ஏறக்குறைய தமிழ் மக்கள் அரசை எதிர்க்கும் மனநிலைக்கு ஒப்பானது. அரசின் வீழ்ச்சியை விரும்புவதற்கான பின்னணிகளைக் குறித்தது. அதற்குப் பிறகு புதிய அரசியலமைப்பைக் குறித்து சிந்திக்கலாம்.

இந்தப் பத்தியின் இறுதிக் குறிப்பாக ஒரு விடயம். திரு. இஸூரு சாமர சோமவீர, தன்னுடைய கதையை இப்படியொரு கருத்தேற்றத்துடன் அணுக முற்பட்டதைக் குறித்து வேறு அபிப்பிராயம் கொள்ளக் கூடும். அவருடைய கதையின் வெளிப்பாட்டு இலக்கு வேறாக – ஆணாதிக்கத்தைக் குறித்த பெண் மனநிலையைப் பற்றியதாக – இருக்க வேண்டும் எனவும் அவர் கருதலாம். அப்படியான நிலையில் என்னுடைய இந்த வாசிப்பைக் குறித்து ஏதாவது சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தால் அதை அவர் பொறுத்தமர வேண்டுகிறேன்.

– கருணாகரன்

Leave A Reply

Your email address will not be published.