13 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்.

13 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
காங்கேசன்துறைக்கு ஜாலிய சேனாரத்ன

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன உள்ளிட்ட 13 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் இந்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உதவியாளராக காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அண்மையில், விடுதலை செய்யப்பட்ட ரியாஜ் பதியுதீன் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டமை தொடர்பில்  ஜாலிய சேனாரத்ன மீது விசனம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அது தவிர, 8 பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 3 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் சட்ட ஒழுங்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, குறித்த பொறுப்புக்கு மேலதிகமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.என்.ஜே. வெதசிங்க, மேல் மாகாண வடக்கு பிரிவுக்கான பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்ட ஜாலிய சேனாரத்ன, தனது குறித்த பதவிக் காலத்தில் பங்களிப்பு வழங்கிய ஊடக நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.