08. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 08

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தின் பின் சென்னை – டெல்லியில் நடந்த மற்றங்கள்!

1983 ஆண்டு மார்சில்  பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுவிக்கப் பட்ட பொழுது மதுரையில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றார்கள் .

அதனால் ஏப்ரல் மாதக் இறுதியில்  உமாமகேஸ்வரன் ,கண்ணன் என்ற சோதிஸ்வரன், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரன் மூவரையும் சென்னை போலீசார் கைது செய்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தார்கள்.

எம்ஜிஆர் ஆட்சியில் இவர்கள் கைது செய்யப்பட்டதோடு  இலங்கை போலீசாரோடு தமிழ்நாட்டு டிஜிபி மோகனதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பதற்ற சூழலில் பல உள்ளூர் தலைவர்களின் ஆலோசனைப்படி ஜூலை மாதம் சந்ததியர் கலைஞர் கருணாநிதியை சந்தித்த பொழுது அவரின் ஆலோசனைப்படி, பின்பு  என்னையும் கூட்டிக்கொண்டு செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ சந்தித்தோம்.

அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த டெல்லி ராஜ்யசபா எம்பி ஆன L.கணேசன் அவர்களை எமக்குஅறிமுகப்படுத்தினார். அவர் தான் 22 ஆம் தேதி ஜூலை மாசம் டெல்லி போவதாகவும் தனக்கு முழு விபரங்களையும் கூறி உதவி செய்ய ஒருவரை தன்னோடு அனுப்பும்படி கூறினார்.

சந்ததியார் என்னைத்தான் அனுப்பினார்.  23ஆம் தேதி காலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நான், L.கணேசன் எம்பி, செஞ்சி ராமச்சந்திரன் எம்எல்ஏ, திமுக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் டெல்லி பயணமானோம்.

24ஆம் தேதி மாலை டெல்லியில் இறங்கியவுடன், இல கணேசனின்டெல்லி வீட்டுக்குப்போய் விட்டு, உடன் கணேசன் எம்பி எங்களைக் கூட்டிக்கொண்டு பாராளுமன்ற திமுக அலுவலகத்திற்கு போனோம்.

அங்கு பல திமுக எம்பிக்கள் இருந்தார்கள் குறிப்பாக முரசொலி மாறன், வை. கோபாலசாமி, மாயத்தேவர் தி மு க பாராளமன்ற குழுத் தலைவர் அண்ணன் C.T தண்டபாணி இவர்களோடு என்னை அறிமுகப்படுத்திவிட்டு எல் கணேசன் அண்ணா இவர்களோடு தமிழ்நாட்டு அரசாங்கம் செய்யும் சதி பற்றி ஆலோசனை நடத்தி அடுத்தநாள் பாராளுமன்றத்தில் இதுபற்றி பேச ஏற்பாடு நடத்தினார்

அதோடு பிரதம மந்திரி இந்திரா காந்தியை சந்தித்து உமா மகேஸ்வரன் உட்பட மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது என ஒரு மனு தயாரித்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தார். அடுத்த நாள் விடியும் போது நிலைமையே வேறு, வெலிக்கடை சிறையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் பரபரப்பாக இருந்தது.

உடனடியாக என் கணேசன் என்னையும் செஞ்சி ராமச்சந்திரன் கூட்டிக்கொண்டு மற்றவர்களையும் உடன் பாராளுமன்ற திமுக அலுவலகத்துக்கு வரும்படி கூறி அங்கு ஆலோசனையில் ஈடு பட்டார்.

உடனடியாக பாராளுமன்றத்தில் இலங்கை இனப் படுகொலையையும் சேர்த்து பேசவும் பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையாரை சந்தித்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும்படி கேட்கவும் அவர்கள் முடிவு செய்தார்கள்.

அன்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் ராஜ்யசபா அமர்வில் என்னையும் கூட்டிக்கொண்டு போய் பார்வையாளர்கள் இடத்தில் என்னை வை கோபால்சாமி அண்ணா அமர்த்தினார் பாராளுமன்றத்தில் கணேசன் வை கோபால்சாமி மிக உணர்ச்சி வசமாக பேசினார்கள்.

காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிரதம மந்திரி இந்திரா காந்தி அம்மையார் எழுந்து தனது கட்சிக்காரர்களை அமைதியாக இருக்கும்படி கூறி இவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்தார். பின்பு அவர் பதிலளிக்கும்போது முதல்முறையாக இலங்கையில் நடப்பதுஇனக்கலவரம் இல்லை, இனப்படுகொலை என பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறினார்

பின்பு 88ஆம் ஆண்டு வரை பல எம்பி மார் என்னை இலங்கை விவாதம் நடக்கும்போது பாராளுமன்றத்துக்கு ராஜ்ய சபா லோக் சபா பார்வையாளர் அரங்கில் கூட்டிக் கொண்டு போவார்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு என்னிடம் தான் கூடுதலாக அவ்வப்போது நடக்கும் இலங்கை சம்பந்தப்பட்ட செய்திகளை குறிப்பு எடுத்துக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டு திமுக எம்பிக்கள் இலங்கை விடயமாக பரபரப்பாக இருந்த போது ,27ஆம் திகதி காலை அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. திரும்பவும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை இந்திய பாராளுமன்றமே இலங்கைப் பிரச்சினையில் பரபரப்பாக இருந்தது.

வேறு எந்த விடயங்களும் பாராளுமன்றத்தில் எடுக்கவில்லை. .கலைஞரின் வேண்டுகோளின்படி டெல்லியில் மிகப் பிரம்மாண்ட எதிர்ப்பு ஊர்வலம்இலங்கை தூதுவர் ஆலயத்திற்கு முன்பாகநடத்த முடிவு செய்தனர். இரவோடிரவாக கணேசனின் உறவினர் பையன் நான் மற்றும் சில தமிழ் இளைஞர்கள் சேர்ந்து விடிய விடிய கருப்பு , சிவப்புதுணி வாங்கி கையாலேயே திமுக கொடி தயாரித்து கிட்டத்தட்ட 150 கொடிகள்.அடுத்த நாள் மிக பிரம்மாண்டமான ஊர்வலம் டெல்லி வாழ் தமிழர்கள் எல்லாப் பகுதியிலிருந்தும் வந்தார்கள்.

டெல்லி வாழ் மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ,நோர்த் அவென்யூ எம்பி மார் குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் அளவிலிருந்த சாணக்கிய puri என்ற இடத்தில் இருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு ஊர்வலமாக எதிர்ப்பு கோஷங்களோடு போனோம்.

நாம் அங்கும் போகும் போது எமக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லிக் கிளையினர் இலங்கை அரசின் தூதுவராலயத்தின்முன்பாக மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் எம் பசியின் வெளியில் உள்ள கேட்டை உடைக்கும்அளவுக்குப் போய்விட்டார்கள். நான் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சென்னை வந்தபோது தான் ,முதல் நாள் 31ஆம் திகதி எம்ஜிஆர் அவசர அவசரமாக உமா மகேஸ்வரனையும்.தோழர்களையும் விடுதலை செய்தார்.

விடுதலை செய்த உடன் உமா மகேஸ்வரன் கலைஞரிடம் போகாமல் இருக்க, தனது மந்திரி சபையில் இருந்த காளிமுத்து வையும் அவரின் தம்பியையும்அனுப்பி ஜெயிலில் இருந்து நேரடியாக உமாமகேஸ்வரனை தனது தோட்டத்துக்கு கூட்டி வரச் செய்து கட்டிப்பிடித்து கவலைப்பட்டு தான் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னார்.

பல மாதங்கள் உமாமகேஸ்வரன் இடம் மிக நெருக்கமாக இருந்தவர் தான் எம்ஜிஆர் . எம்ஜிஆர் உமா மகேஸ்வரன் கூட்டை திட்டமிட்டு பிரித்தவர் டிஜபி மோகனதாஸ்.

மேலே கூறிய சம்பவங்களுக்கு பின்பு டெல்லியில் ஏற்பட்ட தொடர்புகளால் நான் டெல்லியில் எல் கணேசன் எம்பி வீட்டிலும் பின்னர் ஆலடி அருணா எம்பி வீட்டிலும் தமிழீழ மக்கள்

விடுதலை கழக டில்லி அலுவலகத்தைத் திறந்து 1988 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட முடிந்தது. கீழே உள்ள இரு படங்களும் திமுக எம்பிக்கள் டெல்லியில் நடத்திய போராட்டங்களின் போது எடுத்தது.

தொடரும் ………..


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.