’20’இல் மேலும் 3 திருத்தங்கள்! – அமைச்சரவை இன்று அங்கீகாரம்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில் அதில் மேலும் 3 திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தத் தகவலை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்ததாவது:-

“மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி இன்று அமைச்சரவையில் சில திருத்தங்களைக் கூறினார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு மேலதிகமாக கணக்காய்வுச் சட்டத்தை தற்போது நடைமுறையில் உள்ளவாறே முன்னெடுப்பதற்கும், அவசர சட்டங்களை தேசிய இடர் நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நடைமுறை சட்டத்துக்கு அமைய, அரசமைப்பு தொடர்பில் எப்படியும் அவசர சட்டங்களை நிறைவேற்ற முடியாது. 19ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அமைச்சரவையின் எண்ணிக்கை தொடர்பான விடயங்களை மாற்றமின்றி முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அந்த முற்போக்கான 3 திருத்தங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது” – என்றார்.

இதேவேளை, நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடுகின்றது. இதன்போது அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் அறிவிப்பார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீது எதிர்வரும் புதன்கிழமையும், மறுநாள் வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடைபெறவுள்ளது. வியாழக்கிழமை இரவு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.