கொரோனாக் கொள்ளைநோயும் புலம்பெயர் தமிழர்களும் : சண் தவராஜா

தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவைக் காட்சியொன்று இடம்பெற்றிருக்கும். வைகைப்புயல் வடிவேல் அவர்கள் ஓடும் பேருந்து ஒன்றில் கைகளை வீசிக் கொண்டு நின்றிருப்பார். ‘நாங்களெல்லாம் “ஓடுற பஸ்ஸில கைகளைப் பிடிப்பதே இல்லை” என்று வடிவேல் சொல்லிக் கொண்டிருக்க, ஓட்டுனர் திடீரென பேருந்தை நிறுத்த, வடிவேல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழுவார். புலம்பெயர் தமிழ் மக்களில் அநேகர் கொரோனாக் கொள்ளைநோயை அலட்சியமாக அணுகுவதைப் பார்க்கும்போது மேலே குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சி ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

கொள்ளைநோய் என்பதை சாதாரண தடுமல், இருமல் போல நினைத்து அதனை எதிர்கொண்டதன் ஆபத்தை கடந்த ஆறேழு மாதங்களில் அனுபவித்துத் தெரிந்து கொண்ட பின்னரும், உலகெங்கும் பத்து இலட்சம் பேர் மரணத்தைத் தழுவிக் கொண்ட பின்னரும் கூட “நீராவி பிடித்தால், கொரோனவை விரட்டி விடலாம்” எனச் சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரவ விடுவதும், அதனைப் பகிர்ந்து கொண்டு சுயநிறைவு பெறுவதும் தொடரவே செய்கிறது. முகக் கவசத்தை அணிந்து கொள்ளச் சொல்லி அரசாங்கங்கள் அறிவுறுத்தினால், அதனை முழங்கையில் போட்டுக்கொண்டு கொண்டாட்டங்களை நடாத்துவதும், ஆளையாள் கட்டித் தழுவுவதுமாக அன்றாடச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. தவிர, ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிட்டால், அதனை மிகப்பெரிய அவமானமாகக் கருதி அடுத்தவருக்குத் தெரியாமல் மறைப்பதுவும், ஒழித்து விளையாடுவதுமாகப் புலம்பெயர் தமிழ் மக்களின் அலப்பறைகள் தொடர்கின்றன.

அன்றாடச் செய்திகளைப் பார்ப்பதில் ஆர்வம் இல்லாதுவிட்டாலும் கூட, அயலில் என்ன நடக்கின்றது என்பதை அறியும் ஆர்வமாவது இருப்பதில்லையா? எமக்குத்தான் மொழியறிவு போதாமல் இருக்கின்றது, மொழியில் வல்லமைமிக்க சொந்தப் பிள்ளைகளிடத்திலாவது விடயங்களைக் கேட்டு அறிய வேண்டுமே என்ற சிந்தனையாவது இருக்கக் கூடாதா?
நான் எழுதும் பத்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர் ஒருவர் “புலம்பெயர் தமிழர்களும், கொரோனாவும்” என்ற பெயரில் ஒரு கட்டுரையை நீங்கள் நிச்சயமாக எழுதியே ஆகவேண்டும் என்ற அன்புக் கட்டளையை இட்டார். சொன்னவர் கொரோனா நோயின் தாக்கத்திற்கு ஆளாகி மீண்டவர். அதனால் அவருக்கு அந்த நோயின் தீவிரம், அதன் பாதிப்பு என்பவை பற்றிய புரிதல் உள்ளது. தவிர, நோயில் இருந்து மீண்ட பின்னரும் தொடரும் உடல் உபாதைகள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பவர். அவர் வேலை செய்த தொழிற்சாலையில் 200 பேருக்கு மேல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் மூவருக்கு மாத்திரமே – இன்றுவரை – கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது. இருவர் இலங்கையர்கள், மற்றவர் இந்தியர்.

இந்தத் தகவல் சொல்லுகின்ற சேதி என்ன? அவர்கள் மூவரும் ஒழுங்காக ரசம் குடிக்கவில்லை என்றோ, கடவுளுக்கு நேர்த்தி வைக்கவில்லை என்றோ புத்திசாலித்தனமாக(?) யாராவது வாதிட்டால் எதுவும் செய்ய முடியாது. மாறாக, இந்தத் தகவலை வைத்துக் கொண்டு அறிவுபூர்வமாகச் சிந்திக்க முனைபவர்களுக்காக மாத்திரம் ஒருசில தகவல்களைப் பகிர்ந்து கொள்வது நல்லதென நினைக்கிறேன்.

கொரோனா மரணங்கள் உலகளாவிய அடிப்படையில் 11 இலட்சத்தைத் தாண்டிவிட்டன. 40 இலட்சத்திற்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகிவிட்டார்கள். ஆனால், தொற்றுக்கு ஆளாகியோரின் எண்ணிக்கையையும், மரணத்தைத் தழுவுவோரின் எண்ணிக்கையையும் உலகளாவிய அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆபிரிக்கக் கண்டத்திலும், இந்தியா தவிர்ந்த ஆசியக் கண்டத்திலுமேயே இந்த மரண மற்றும் தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது. மக்களின் வாழ்வியல் முறைமை, இயற்கை வழங்கியுள்ள உடலுறுதி என்பவற்றுக்கு அப்பால் அரசாங்கங்கள் மேற்கோண்ட தடுப்பு நடவடிக்கைகள் என்பவை இந்தப் பிராந்தியங்களில் சேதத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. (இந்தியாவில் இந்த இரண்டுவகை எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதில் ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான அணுகுமுறை அன்றி வேறு காரணம் இல்லை என்பதை உலகே அறியும்.)

எனினும், மேற்குலகில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள் புலம்பெயர்ந்த மக்களே என்கின்றன புள்ளி விபரங்கள். இதற்குக் காரணங்கள் பல. புலம்பெயர் நாடுகளில் அவர்களின் வாழ்க்கை முறைமை, அலட்சியமான போக்கு, சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாமை, போசாக்குள்ள உணவை உண்ணாமை, சிக்கனம் என்கின்ற போர்வையில் கடைப்பிடிக்கும் பல்வேறு நடைமுறைகள், நெருக்கமாக வாழும் போக்கு, அளவுக்கு அதிகமாகக் கூட்டம் சேருதல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாடுவிட்டு நாடுவந்து பனியிலும், குளிரிலும் பாடுபட்டு உழைத்துப் பொருள் ஈட்டி, இறுதியில் கொள்ளைநோய்க்குப் பலியாகும் பரிதாப வாழ்க்கை அவர்களது.

சற்று சுதாகரித்துக் கொண்டால் அவர்களால் சாதிக்க முடியும், கொள்ளை நோயிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். ஏன், அவ்வாறு செய்யாமல் இருக்கிறார்கள். அதற்குத் தடையாக இருப்பது எது?

புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களை முறையாக வழிநடத்தக்கூடிய ஒரு சமூகத் தலைமை இல்லை. அந்த வெற்றிடம் மிகக் கிட்டிய எதிர்காலத்தில் நிரப்பப்படக் கூடிய அறிகுறிகளும் தென்படவில்லை. சமூகத் தலைமை இல்லாதவிடத்து அந்த வெற்றிடத்தை நிறைவேற்றக் கூடிய சமூக அக்கறையுள்ள ஊடகங்களாவது ஆகக்குறைந்தது இருக்க வேண்டும். துர்வாய்ப்பாக அத்தகைய ஊடகங்கள் கூட புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத நிலைமையே தொடர்கின்றது.

ஆனால், மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு வாய்ச் சவடால் பேசும் பலர் சமூக ஊடகங்களில் உலா வருகின்றனர். அவர்கள் தங்களையும் கெடுத்துக் கொண்டு சமூகத்தையும் கெடுப்பதில் குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றனர். தனிமனித வசைபாடல், தனிமனித துதிபாடல், இன மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான செய்திகளைப் பரவச் செய்தல், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை விதைத்தல், பெண்களுக்கு எதிரான நையாண்டி என அவர்கள் அயராது செயற்பட்டு வருகின்றனர். எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன்னதாக அதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்புணர்வு எதுவும் இல்லாத அவர்கள், ஒரு தவறான தகவலைப் பகிர்ந்து கொண்டதைத் தெரிந்து கொண்டால் கூட அதற்காகக் கவலைப் படுவதுமில்லை, மன்னிப்புக் கோருவதுமில்லை. அதுவே அவர்களின் சுபாவம்.

சுவிஸ் நாட்டைப் பொறுத்தவரை தற்போது தமிழர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளதாகத் தெரிகின்றது. குடும்பம் குடும்பமாக மக்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். முதலாவது அலைத் தொற்றின் போது பாரிய அளவிலானதாக இருக்காத தொற்று இரண்டாவது அலையின் போது அதிகமாக இருப்பது இயல்பானதே. ஆனால், தமிழர்கள் மத்தியில் அதிகமாக இருக்கக் காரணங்கள் இரண்டே. ஒன்று விழாக்கள், இரண்டாவது வழிபாட்டு இடங்கள்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு நிகழ்வை நடாத்துவதற்கான வழிகாட்டுதல்களை தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. இருந்தால் என்ன? அவற்றை நாங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடித்தே ஆக வேண்டுமா என்பதே தமிழ் மக்களின் கேள்வி? கல்யாண வீட்டுக்கும், பூப்புனித நீராட்டு விழாவிற்கும் நாள் குறித்தாகிவிட்டது. விலைகூடிய உடுப்புகளும், நகைகளும் வாங்கியாகி விட்டது. சொந்த பந்தங்களுக்கும் சொல்லியாகி விட்டது. இனி எப்படி நிகழ்வை நிறுத்துவது? நிறுத்தினால் அபசகுனம் அல்லவா? நாலு பேரோடு நடத்தினால் எங்கள் பேரும், புகழும் என்னாவது? பிரான்ஸ், யேர்மனி என அயல்நாடுகளில் உள்ள சொந்த பந்தங்களும் வந்தால்தானே நிகழ்வு களைகட்டும்? கொரோனா ஒரு பக்கமாகக் கிடக்கட்டும். பரீசில் ஊரடங்கு போட்டால் என்ன? நாங்கள் பக்கத்துப் பிரதேசத்துக்குப் போகிறோம் எனப் பொய் சொல்லிவிட்டு வருவோம். நாட்டு எல்லைகளை மூடினால் என்ன? எங்களுக்கு பயணம் செய்யக் களவான வழிகள் தெரியாதா என்ன?

கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டு வந்த ஒரு கிறிஸ்தவ மதபோதகரைப் பற்றி தமிழ் ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கதறக் கதறச் செய்திகளையும் ஆய்வுகளையும் அள்ளி வழங்கியதை மக்கள் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இன்று சுவிற்சர்லாந்தில் ஒரு இந்து ஆலயம் மூடப்பட்டு இருக்கின்றது. இன்னொரு வழிபாட்டிடத்திற்கு “சீல்” வைக்கப்பட்டு இருக்கின்றது. எந்தவொரு ஊடகமும் மூச்சே விடவில்லை. சமூக ஊடகங்கள் வேறு வேலைக்குப் போய்விட்டன. இந்த வழிபாட்டிடத்துக்கும், ஆலயத்துக்கும் சென்ற பலரும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்வாய்ப்பாக கொரோனாத் தொற்று காரணமாக மரணமடைவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றது. சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை இன்றுவரை இரண்டு தமிழர்கள் மாத்திரமே கொரோனாத் தொற்று காரணமாக மரணத்தைத் தழுவியுள்ளனர். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்துள்ளனர். கொரோனாத் தொற்றுக்கு ஆளாகிய அநேகரின் அனுபவங்கள் கொடூரமானவை. வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

இது தொடர்பாக மருத்துவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். கொரோனாத் தீநுண்மி முதலில் பாதிப்பது சுவாசப்பைகளை என்பதை நாமறிவோம். வாய், மூக்கு, கண் என்பவற்றால் பரவும் இந்தக் கிருமி குறுகிய காலத்தில் பல்கிப் பெருகுவதன் ஊடாக சுவாசப்பையில் அடைப்பை ஏற்படுத்தி, சுவாசிப்பதில் சிரமத்தைத் தருகின்றது. தொடர்ந்து இரத்தத்தில் கலக்கும் கிருமி மூளையைச் சென்றடைந்து மூளையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, கொரோனாத் தொற்றில் இருந்து மீண்டாலும் கூட, அதன் பக்க விளைவுகளில் இருந்து மீள்வது கடினமாகவே இருக்கப் போகின்றது. கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்களிடம் ஞாபக மறதி நோய் ஏற்படுவது கண்டறியப் பட்டுள்ளதுடன், பெரும்பாலானோர் தாம் வாழ்வில் மகிழ்ச்சியை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலோனோருக்கு கொரோனா ஒரு தடவை வந்துவிட்டால், நோய்க்கு நிர்ப்பீடனம் ஆகிவிடலாம் என்கின்ற (மூட)நம்பிக்கை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால், மருத்துவப் புள்ளிவிபரங்களின் படி ஏற்கனவே கொரோனாப் பாதிப்புக்கு ஆளான சுமார் பத்து வீதமானோர் மீளவும் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு தடவை கொரோனாத் தொற்று ஏற்பட்டுவிட்டால் மீண்டும் அது எம்மை அணுகாது என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கானது. அது எமக்கு மட்டுமானதல்ல, எமது குடும்பத்தினருக்கும், எம்மை நேசிக்கும் அனைவருக்குமானது. எமது வாழ்க்கை ஆரோக்கியமானதாக அமையுமானால் நாம் மாத்திரமன்றி நம்மை நம்பி வாழும் அனைவருமே நலம்டைவோம். இந்த எண்ணம் மனதில் இருக்குமானால் நாம் ஓரளவேனும் பொறுப்புணர்வுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இது கொரோனாக் கொள்ளைநோய்க்கு மாத்திரமானதல்ல பொதுவான வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடியது.

இல்லை நாங்கள் வைகைப்புயல் வடிவேலைப் போன்று கையில் எதனையும் பிடிக்காமல் பேருந்தில் நின்றுகொண்டுதான் பயணிக்கப் போகின்றோம் என்று நீங்கள் பிடிவாதம் பிடித்தால் பாதிக்கப்படப் போவது நீங்கள் மாத்திரமல்ல, உங்களை நம்பியிருப்போரும்தான்.

Leave A Reply

Your email address will not be published.