அலை கடலென அதிகரிக்கும் கொரோனா பரவல் : சிக்மலிங்கம் றெஜினோல்ட்

கொரோனாவின் (கொவிட் 19) இரண்டாவது அலை பலமாக எழுந்துள்ளது. தினமும் தொற்றாளர்களுடைய எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் புள்ளி விவரங்களைக் கவனித்தால் நாட்டின் நிலவரம் நெருக்கடியை நோக்கிச் செல்வதை உணர முடியும். முக்கியமாகத் தொற்றாளர்களுக்கான மருத்துவத்துக்கும் தொற்றுக் குறித்த சந்தேக நபர்களைப் பரிசீலிப்பதற்குமே பெருமளவு நிதியும் மனித வளமும் தேவைப்படும்.

இதை விட தொற்றுக்குறித்த சந்தேகத்துக்குரியவர்களைத் தனிமைப்படுத்திப் பராமரிப்பதற்கும் செலவும் ஆளணியும் பெருமளவில் வேண்டும். கூடவே பெரிய பொருளாதார நெருக்கடியும் வரப்போகிறது. இப்போதே பொருட்களின் விலை உச்சத்துக்குப் போயிருக்கிறது. ஒரு கிலோ உழுந்தின் விலை 900 ரூபாய்க்கும் கூட. பிஸ்கற் வகைகளும் சற்று உயர்ந்தேயுள்ளன. மஞ்சள் ஒரு கிலோ 6000 ரூபாய் என்றால் ஏலக்காய் 19000 ஆயிரமாக ஏறியிருக்கிறது. ஏலக்காய் அத்தியாவசியப் பொருள் இல்லைத்தான். ஆனால், உழுந்து அவசியமான உணவுப் பொருள்களில் ஒன்று. ஊட்டத்துக்கு அவசியமானது. இப்பொழுது கடைகளில் உழுந்து வடையைக் காணவே முடியாது. கொழும்பில் ஒரு சிறிய வடை 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்கிறார் ஒரு நண்பர். கோயில்களிலும் உழுந்து வடை அரிதாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. யுத்த காலத்தில் கூட இந்த மாதிரி உழுந்துக்குத் தட்டுப்பாடும் கட்டுப்பாடும் வந்ததில்லை.

ஆனால், முதல் அலையின்போது அரசாங்கம் துடித்துப் பதைத்துச் செயற்பட்டதைப்போல இந்த இரண்டாவது அலையில் செயற்படவில்லை என்றே தோன்றுகிறது. சனங்களும் அப்படித்தானிருக்கிறார்கள். தொற்றுக்கான எச்சரிக்கை உணர்வில் மட்டுமல்ல, தொழில் மற்றும் பொருளாாதாரத்தைக் குறித்தும் உரிய முறையில் சிந்தித்துச் செயற்படுவதாகக் காணவில்லை. விழாக்களும் சடங்குகளும் கொண்டாட்டங்களும் வழமையைப்போலவே நடக்கின்றன. எல்லாமே ஏனோதானோ என்பதாக.

இதனால்தான் சுகாதார விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், உலகமோ இன்னும் ஒடுக்கத்திலிருந்த மீளவில்லை. அவுஸ்திரேலியாவில் அந்த நாட்டுப் பிரதமரே அடுத்த மாநிலத்துக்குப் போவதற்கு முடியாமலிருக்கிறார். அந்தளவுக்கு அங்க கொவிட் 19 நடைமுறைகள் இறுக்கமாகப் பேணப்படுகிறது. மெல்பேர்ணில் ஐந்து கிலோ மீற்றருக்கு அப்பால் எவரும் செல்ல முடியாது. இப்பொழுது அதை 25 கிலோ மீற்றராகத் தளர்த்தியுள்ளதாக நண்பர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். இவ்வளவுக்கும் இந்த மாதிரி நாடுகள் எதையும் தாக்குப் பிடிக்கக் கூடிய பொருளாதாரப் பலமுள்ளவை. நாமோ கடனில் அவதிப்படும் சமூகத்தினர். நாடோ கடனில் தாண்டு கொண்டிருக்கும் தீவு.

புலம்பெயர் உறவுகளும் முதல் அலையின்போது இங்கே நாட்டிலுள்ள நாளாந்த உழைப்பாளர்களுக்கும் பொருளாதார நிலையில் பின்தங்கியோருக்கும் உதவ முன்வந்ததைப்போல இரண்டாவது அலையில் எழுச்சியடையவில்லை. இதற்குக் காரணம், அவர்களுடைய வாழ்க்கைச் சூழலும் கொவிட் 19 இனால் நெரு்ககடியைச் சந்தித்ததாக இருக்கலாம். இன்னொரு காரணம், கொரோனா மரணங்கள் பெரிதாக நிகழவில்லை என்பதாக இருக்கலாம்.

மரணம் நிகழ்ந்தால்தான் எல்லோரும் எதையும் சீரியஸாக எடுப்பார்கள் என்றால், இது ஒரு விசப்பரீட்சை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், ஏற்கனவே நாடு மரணங்களோடுதான் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக விளையாடியிருக்கிறது. புரட்சி, கிளர்ச்சி, போராட்டம், யுத்தம், சுனாமி என்று இலங்கைத்தீவைப் புரட்டிப் போட்ட மரண விளையாட்டு இப்போதுதான் சற்று ஓய்ந்தது. அதற்குள் கொரோனா மரணங்களும் கூடுமாக இருந்தால் அதை நாடு தாங்காது. நாமும் தாங்கிக் கொள்ள முடியாது.

கடந்த கால மரணங்களின் மூலம் இலங்கைத்தீவின் இளைய தலைமுறை உள்பட பல்லாயிரக்கணக்கானோரை இழந்ததன் மூலம் மனித வளத்தை நாடு இழந்திருக்கிறது. போதாக்குறைக்கு அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் லட்சக்கணக்கானோரை நாட்டை விட்டு வெளியேற வைத்துள்ளது. இந்த நிலையில் கொரோவின் பாதிப்பும் நிகழுமென்றால், அதனால் நாடு மிக மோசமாகவே பின்தள்ளப்படும். இதைப் புரிந்து கொள்வதற்கு அதிகமாக ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை. மிக எளிதாக எவராலும் இந்த நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். இந்த இடத்தில் கூட நம்முடைய அரசியல் மேதைகளும் பொருதார வல்லுநர்களும் இதைக்குறித்து அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் கொரோனா ஒடுக்குத்தையும் விட மோசமாக அடங்கி ஒடுங்கிப் போய்க்கிடக்கிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலையைப் பற்றிய பேச்சை விட, அதில் செலுத்த வேண்டிய கரிசனையை விட அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20 ஆவது திருத்தம் பற்றிய கவனமும் கவலையுமே பலருக்குமுள்ளது. 20 ம் கொவிட் 19 ஐப் போல பயங்கரமான ஒரு வைரஸ்தான். கொவிட் 19, ஆட்களைக் கொல்லும். திருத்தம் 20, நாட்டைக் கொல்லும். இவ்வளவுதான் வேறுபாடு என்கிறார் ஒரு நண்பர். அவர் இதைப் பகடியாகச் சொன்னாலும் இது புறக்கணிக்க முடியாத, கடந்து செல்ல முடியாதவோர் உண்மை.

அப்படியென்றால் இப்போது இரண்டு நெருக்கடிகளுக்குள் நாடு சிக்கியிருக்கிறது எனலாம். கொவிட் 19 ஆ, அல்லது அரசியலமைப்புத்திருத்தம் 20 ஆ நாட்டுக்கு ஆபத்தாக உள்ளது? என்றால் இரண்டாலும்தான். இரண்டுமே ஆபத்தானவை. இரண்டைக்குறித்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரண்டினாலும் மக்களே பாதிப்படையப்போகிறார்கள். ஆகவே இரண்டும் தொடர்பாக விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் அவசியமாக உள்ளது.

கொவிட் 19 இலிருந்து மாஸ்க்கை அணிந்தும் கைகளைச் சுத்தப்படுத்தியும் சுகாதார வழிமுறைகளைப் பேணியும் ஓரளவுக்குப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முடியும். இதையும் மிஞ்சித் தொற்று வந்தால் சிகிச்சைக்கான வழிகளும் ஓரளவுக்கு உண்டு.

ஆனால், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அப்படியானதல்ல. அது பொல்லாதது. அதை கொவிட் 19 க்கு மாஸ்க் போடுவதைப்போல இலகுவாக அடக்கிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது. ஏனென்றால் அது ஆட்சி அதிகாரத்தோடு சம்மந்தப்பட்டது. தலைமுறைகளாகத் தொடரக்கூடிய அபாயமுள்ளது.

கொவிட் 19 க்கு இன்றோ நாளையோ பொருத்தமான மருந்தொன்றை யாராவது வெற்றிகரமாகக் கண்டு பிடித்து விடலாம். அதன் மூலம் அம்மைக்குத் தடுப்பு ஊசி போடுவதைப்போல, எபோலாவுக்கு தடுப்பைக் கண்டு பிடித்ததைப்போன்று இதற்கும் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளலாம். அதன் மூலம் கொவிட் 19 ஐ தடுக்கலாம். அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கலாம.

ஆனால், அரசியலமைப்பில் 20 ஐ நிறைவேற்றி ஓரிடத்தில் அதிகாரத்தைக் குவித்து விட்டால் அவ்வளவுதான், கதை அம்போவாகி விடும். பிறகு நாம் மட்டுல்ல, நம்முடைய பிள்ளைகளும் தலைகுனிந்தே இருக்க வேண்டும். அந்த நிலையே இப்பொழுது உருவாகியிருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன செய்யலாம்? என்பதே இன்று எல்லோருடைய கேள்விகளும் உள்ளன. இதற்கு தற்போதுள்ள ஒரே வழி, நாட்டின் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திப்போர், மக்களின் நலன் குறித்த கரிசனையுடையோர் ஒரு முகம் கொண்டு செயற்படுவதேயாகும். இந்த நெருக்கடிகள் நாடு முழுவதற்கும் ஆபத்தானவை என்பதால், நாடு தழுவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குரிய சிந்தனையும் பொறிமுறையும் அவசியம். இது அரசியல் ரீதியானதும் அதற்கு அப்பால், சமூக, பொருளாதார, மருத்துவ பொறிமுறைகளோடு சம்மந்தப்பட்டதுமாகும். எனவே இந்தத் துறைகளில் ஆற்றலும் அறிவும் உள்ளோரும் இவற்றின் செயற்பாட்டுக் கட்டமைப்பில் ஈடுபடுவோரும் மிக அவசரமாக இவற்றில் செயற்பட வேண்டும்.

ஆனால், அரசாங்கமோ கொவிட் 19 க்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கொண்டுள்ள கரிசனத்தையும் விட திருத்தம் 20 இல் கொண்டுள்ள கரிசனமே அதிகமாகதாக உள்ளது. ஆட்சியிலிருப்போருக்கு எது அவசியமாகத் தேவையோ அதை அவர்கள் செய்ய முனைகிறார்கள். அதை வெற்றிகரமாகச் செய்தும் விட்டனர். இப்பொழுது ஜனாதிபதியின் அதிகாரங்கள் மன்னரின் அதிகாரங்களுக்கு நிகராகி விட்டன. இனி மன்னர் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும். இது ராஜபக்ஸக்களுடைய நான்காவது வெற்றியாகும். முதல் வெற்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிட்டியது. பிறகு ஜனாதிபதித் தேர்தலில். மூன்றாவது வெற்றி பாராளுமன்றத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை. இப்பொழு திருத்தம் 20 மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றி.

இந்த இடத்தில்தான் நாம் ஒன்றை அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. இதை அழுத்தமாக பிற அரசியற் தரப்பினரும் மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆட்சியிருப்போருக்கு எது தேவை என்று கருதி அதைச் செய்வதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்களோ, அதைப்போல மக்களாகிய நமக்கு எது அல்லது எவை தேவை என்று உணர்ந்து நாம் அதற்கு அல்லது அவற்றுக்கு முன்னுரிமை அளித்துச் செயற்பட வேண்டும்.

ஆகவே இப்போது இதற்கான வழிகளைக் காட்டி, தலைமை ஏற்க வேண்டியவர்கள் தாமதிக்காமல் துணிகரமாக முன்வர வேண்டும். அது ஒன்றும் இலகுவான விசயமல்ல. நாட்டிலுள்ள தற்போதைய நிலையில் மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களையோ எழுச்சி நடவடிக்கைகளையே செய்ய முடியாது. அப்படியென்றால், என்ன செய்யலாம்? வேண்டுமானால் அரசாங்கத்துக்கு ஒத்துழையாமை மூலம் எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தலாம். அதன் மூலம் அரசாங்கத்தை முடக்கலாம். அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கலாம். இதுவும் எளிய சங்கதியல்ல. இதற்கும் விலைகளைக் கொடுக்க வேண்டும். பல தடைகளைக் கடக்க வேண்டியதாக இருக்கும்.

எந்தப் போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கையும் கடினமான வழிகளின் ஊடாகவே வெற்றி இலக்கை எட்டக் கூடியதாக இருப்பதுண்டு. அந்த வகையில் இலங்கைச் சமூகங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளம் விலைகளைக் கொடுக்க வேண்டும். தலைகளையும் தலைமுறைகளையும் கொடுப்பதை விடவும் சில விலைகளைக் கொடுப்பதொன்றும் பெரிதல்ல.

– சிக்மலிங்கம் றெஜினோல்ட்

Leave A Reply

Your email address will not be published.