இலங்கைக்கு ஜி.எஸ்.பி+ சலுகை பறிபோகும் அபாயம்!

மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டும் அக்கறையற்ற மற்றும் குழப்பமான அணுகுமுறை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகை பறிபோகும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து அந்தச் சட்டத்தின் கீழ் கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் கடந்த சில மாதங்களில் பலமுறை பதிவாகியுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட நிட்டம்புவ இளைஞர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், 2007ஆம் ஆண்டு நடந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாணம் ஆருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2024 செப்டம்பர் முதல் இதுவரையில் பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் முதலமைச்சருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கை சட்டவிரோதமானது என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பெற்றவர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட வரலாறு இலங்கையில் உள்ளதால், அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து அவர்களைக் கண்காணிப்பது இயல்பான நிலை.
மேலும், பிள்ளையானின் வழக்கறிஞராக செயற்பட்ட முன்னாள் அமைச்சரான சட்டத்தரணி உதய கம்மன்பிலவுக்கு எதிராகவும் அரசாங்க ஆதரவாளர்களால் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பாகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தாமல், இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை ஜி.எஸ்.பி+ நிபந்தனையான ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை’ப் பாதுகாப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பை மீறுவதாகும். இலங்கை அரசாங்கம் 2010ஆம் ஆண்டு மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை மீறியதால் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகை இடைநிறுத்தப்பட்டது.
2017ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தின் மூலம் மீண்டும் அந்தச் சலுகையை வென்றெடுத்தது. அப்போது வழங்கப்பட்ட ஒரு வாக்குறுதி, நாட்டின் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் உள்ள உரிமைகளுக்கு முரணான பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதுதான். அதன்படி, சர்வதேச மனித உரிமை தரநிலைகளுக்கு இணங்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்று வரைவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் நிறைவேற்ற முடியவில்லை.
2019ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் இந்த முழு செயல்முறையும் கைவிடப்பட்டது. புதிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக, 2021ஆம் ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் இலங்கையின் நிலைமை குறித்து ஐரோப்பிய ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்த்து, இலங்கை அரசாங்கம் அப்போது அனுபவித்து வந்த ஜி.எஸ்.பி+ சலுகையை தற்காலிகமாக நீக்குவது குறித்து கவனம் செலுத்தியது.
கோட்டாபய அரசாங்கம் இந்த அழுத்தத்தின் காரணமாக சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தமொன்றை முன்வைத்தது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டத்திற்குப் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் பிணையில் விடுவிக்கப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசின் நண்பனாக செயற்பட்டது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை’ வரைவு செய்தமை, ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தல் மற்றும் நஷ்ட ஈடுகளை ஒழுங்குபடுத்தியமை’ போன்ற காரணங்களால் ஜி.எஸ்.பி+ சலுகை மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
2024 செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கடந்த 6 மாதங்களில் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகையைப் பெறுவதற்கு முக்கியமான விடயங்களில் எந்த முன்னேற்றமும் காட்டப்படவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் பிரச்சாரத்தில் பாரியளவில் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் அந்தச் சட்டத்தை நீக்காமல் தொடர்ந்து அதன் கீழ் கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் மேற்கொள்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகையை இலங்கைக்கு இழக்க நேரிடலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.